ஆய்வும், திட்டமிடலும்!

ந்த நாடும், இனமும், மொழியும் அது சார்ந்த மனிதர்களும் தனித்து சுதந்திரமாக இயங்க இயலாத நிலையை தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்படுத்தியுள்ளது. இன்றைய வாழ்க்கை முறை சிக்கல் நிறைந்ததாக காணப்படுவதற்கான காரணம் அதுதான்.

தொழில்நுட்பம் கொண்டு வந்த போக்குவரத்து வசதிகளும், ஊடக இயந்திரங்களும் உலகைச் சிறு கிராமமாக்கி, அத்தோடு உலக மக்களை ஒரு சங்கிலியின் கன்னிகளாக ஒருவரோடு ஒருவரை பிணைத்து

இறுக்கி இயங்க வைத்துள்ளது. அதனால்தான் அமெரிக்காவில் ஏற்படும் பாதிப்பு இந்தியாவில் எதிரொலிக்கிறது.

 தனி மனிதர்களும் சர்வதேச பெரும் கோடீஸ்வரர்களாக மாறி பொருளாதார சாம்ராஜ்யங்களை கட்டமைத்து அதன் மூலம் சர்வதேச ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். தனி மனிதர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கியுள்ள பொருளாதார நிறுவனங்கள் செலுத்தும் ஆதிக்கமும் மிகப்பெரியது.

ஒரு அரசு தனியாக இயங்க முடியாதளவு சர்வதேச சக்திகள் பெரும்பாலான நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

தனி மனிதர்களும், நிறுவனங்களும் பலநாடுகளின் அரசுகளை தங்கள் அடிமைகளாக்கி  காரியங்களை சாதித்துக் கொள்கின்றன.

அரசின் கைகளில் இருக்க வேண்டிய பொருளாதார, கல்வி, சுகாதாரத் துறைகளில் தனி மனிதர்களும், தனியார் நிறுவனங்களும் மிகப் பெரிய அளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதன் காரணமாக அரசு இயந்திரத்தின் கால்களின் கீழ் நசுங்கி விழி பிதுங்கி வாழும் நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஊடகங்களை தங்கள் கைகளில் வைத்துள்ள தனி மனிதர்களும், நிறுவனங்களும் மக்களின் சிந்தனைப் போக்கை, வாழ்க்கை முறையை கட்டமைக்கின்றன.research-paper

 முதலாளிகளின் விருப்பத்தை விளம்பரத்தின் வழியாக திணிக்கும் ஊடகங்களிடம் மக்கள் மயங்கி சுய நிலை கனவு வாழ்க்கை வருகிறார்கள்.

விளம்பரங்கள் மூலமாக பொருட்கள் மீதான மோகமும், அதை வாங்கும் வெறியும் மக்களிடத்தில் அதிகமாகி வாழ்வு சார்ந்த ஒழுக்கங்கள் செல்லாக்காசாகி விட்டன.

வாழ்வியல் அறம், வாழ்க்கைக்கான நெறிமுறைகள் மறக்கடிக்கப்பட்டு மனிதர்கள் இயந்திரமாகிப் போனார்கள்.                                        

 இப்படி மேற்கு நாடுகளும், ஆதிக்க சக்திகளும், அதன் நிறுவனங்களும் மிகப்பெரும் சக்தியாக இயங்குவதற்கு இடைவிடாத அவர்களின்ஆய்வுகளும் திட்டமிடலும்தான் அடிப்படைக் காரணம். அவர்கள் எதிர்காலம் பற்றி ஆய்வு செய்கிறார்கள். ஏறக்குறைய அடுத்து வரும் ஐநூறு வருடங்களுக்கும், அதற்குப் பின்னால் வாழும் வாழ்க்கைக்கும் இன்றே அவர்கள் ஆய்வு செய்து திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் ஆய்வின் மூலம் காலத்தால் முந்தி நிற்கின்றார்கள்.

உலகில் இருக்கும் எல்லா வளங்களையும் செழிப்புகளையும் அனுபவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் குறிப்பிட்ட சிலர் தங்களது ஆய்வுகளின் மூலம் திட்டமிட்டு மனித சமூகத்தை ஆதிக்கம் செலுத்தும் சர்வாதிகாரிகளாக மாறி விட்டார்கள்.

 அவர்கள் வழங்கும் கல்வியறிவு ஒரு இயந்திரத்தைப் போல மனிதர்களை அன்பற்றவர்களாக, சிந்தனையற்றவர்களாக வாழத் தூண்டுகிறது. மேலும் மனிதர்களைக் கடுமையானவர்களாக மாற்றி விட்டது.

மனித சமூகத்தின் வழிகாட்டியாக இருக்க வேண்டிய இஸ்லாமிய சமூகமும் சீரழிந்த இந்த வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டு வாழப்பழகி அவர்களின் நோக்கத்திற்கு பலியாகி விட்டது. தங்கள் வாழ்க்கையின் இலக்கை மாற்றிக் கொண்ட முஸ்லிம் சமூகம் சீரழிந்து வருகிறது.

 இந்தச் சூழலில் சமூகத்தில் மாற்றம் வர வேண்டுமானால் மனிதர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ள முஸ்லிம்களாகிய நாம் வாழ்க்கை முறைகளுக்கான ஆய்வுகளை, திட்டமிட வேண்டியது மிக மிக அவசியமான ஒன்றாக ஆகிறது.

நமது சமூகத்தில் ஆய்வுகள் மிக மிகக் குறைவு. ஆங்காங்கே சில தனிநபர்களது முயற்சிகளால் சில ஆய்வுகளை மட்டுமே காண்கிறோம். 

ஆய்வு நிறுவனங்களை உருவாக்குவது, அதற்காக செலவிடுவது, அதனை வளர்ப்பது போன்ற காரியங்கள் நமது சமூகத்தில் கவனிக்கப்படாத பகுதியாகவே இருந்து வருகிறது. ஆகவே ஆய்வுகளின் பக்கம் அதிகப்படியான கவனம்  செலுத்துவது கட்டாயமாகிறது.

சமூக யதார்த்தம் : நமது சமூகத்தின் முதல் ஆய்வு தற்போதைய யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதாகும். நாம் வாழும் இடம், அங்கு வாழும் மனிதர்கள், அவர்களின் சிந்தனைகள் அத்தோடு அவர்களின் பொருளாதார, கல்வி, சுகாதார நிலையைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வுகள் நாம் வாழும் இடத்தில் நமது பலவீனத்தையும், பலத்தையும் படம் பிடித்துக் காட்டும்.

கல்வி நிலை : இரண்டாவது நமது நாட்டின் கல்விக்கூடங்கள், அவற்றின் கொள்கைகள், வழி முறைகள் பற்றிய ஆய்வு. அடுத்து நமது கல்விக்கூடங்களின் நிலை, இறைவனின் இருப்பையும், உலகத்தின் இயல்பையும் பயிற்றுவிக்கும் அதன் செயல்பாடுகள், அதை கற்பிக்கும் தகுதி பெற்ற கல்வியாளர்கள்,ஆசிரியர்கள் பற்றிய ஆய்வு.

சமூக வாழ்வு : நமது ஊர்களின், ஜமாத்துகளின், குடும்பங்களின் நிகழ்வுகளை, பிரச்சனைகளை கையாளும் விதம் நம் நம்பிக்கையோடு தொடர்புடையதா? இல்லையா? என்பது பற்றி ஆய்வு. நமது இயக்கங்களின் இலக்குகள், திட்டங்கள், இஸ்லாத்தை வாழ்வியலாக கட்டமைப்பதில்  அவர்களின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வு.

நமது சமூகத்தின் ஒழுக்க வாழ்வு, அப்பகுதியில் உருவாகியுள்ள குறைபாடுகள், சீர்கேடுகள் பற்றிய ஆய்வு.

இந்த ஆய்வுகள் நமது மனரீதியான பலத்தையும், பலவீனத்தையும் காட்டும்.

தீர்வு :

கல்வித்திட்டம் : மழலையர் பள்ளி முதல் உயர்கல்வி வரை இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு பாடத்திட்டங்கள், பயிற்சி முறைகள் பற்றி ஆய்வுகள் நடைபெற வேண்டும்.  அந்த ஆய்வுகள் சமூகமும், நாடும் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் கொண்டதாக அமைய வேண்டும். இந்த ஆய்வின் விளைவாக நமக்குத் தேவையான ஆன்மீகம், அறிவு, ஒழுக்கம், வாழ்வியல் முறை ஆகியவற்றை உள்ளடக்கிய கல்வி முறையை தயாரித்துக் கொள்ள முடியும்.

 தொழில் : தொழில்துறை, பொருளாதாரத் துறைகளில் மனிதர்களது வாழ்க்கையை இழிவுக்கும், அழிவுக்கும் கொண்டு செல்லாத, வாழ்வை வளமாக்கும் வழிமுறைகள் பற்றி ஆய்வு செய்து அதற்கான திட்டம் முறைப்படுத்தப்பட வேண்டும்.

அழப்பு பணி : இஸ்லாமியப் பணி பற்றியும், அதை இந்த நாட்டில் செயல்படுத்தும் வழிமுறைகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த விஷயங்களில் நாம் எடுக்கும் தெளிவான முடிவுகள் மூலம் நம் சமூகத்தின் வாழ்வு மட்டுமல்ல எதிர்கால முழு மனித சமுதாயத்தின் வாழ்வும் சீராக அமையும். அதுதான் மனித வாழ்வின் இலக்கு. இப்படி நாம் இலக்கை நிர்ணயித்து அதற்காக ஆய்வு செய்வதற்கும், திட்டமிடுவதற்கும் வரலாறு நமக்கு வழி காட்டுகிறது. 

மக்கா வாழ்க்கையின் நெருக்கடியால் மன அழுத்தத்திற்கு ஆளான போது சில நபித்தோழர்கள் இறைவனிடம் எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்கள்.  பதிலளித்த முஹம்மது ஸல்சொன்னார்கள்  ஒரு காலம் வரும் ஒரு பயணி (யமன் தேசத்து) ஸன்ஆவில் இருந்து ஹளரமௌத் என்ற ஊர் வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர அல்லது அவரது ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறுயாருக்கும் அவர் அஞ்சவேண்டியதிருக்காது! என்றார்கள்

நூல்: புகாரி 41

இதை சொன்ன போது மக்காவில் எங்கு திரும்பினாலும் அவமனாப்படுத்துதல், காயப்படுத்துதல் என கடும் நெருக்கடி,  சிக்கலுகிடையில் வாழ்ந்தார்கள் முஹம்மது ஸல்அவர்களும், முஸ்லிம்களும். அந்த நிலையில்  தான் கட்டமைக்கப் போகும் ஒரு சமூகத்தை, இறையச்சம், நீதி நெறி சார்ந்த வாழ்க்கை முறையை இலக்காகக் கொண்டார்கள்.

அதில் சுமூகமாக வாழும் ஒரு வாழ்க்கைச் சூழல் முழு மனித சமூகத்துக்கும் கிடைப்பதை திட்டமிட்டார்கள் முஹம்மது ஸல்அவர்கள்.

அத்தோடு நிற்காமல் அதை நோக்கிய ஆய்வும், தேடலும் முன்னெடுக்கப்பட்டு தெளிவான திட்டமிடுதல் கையாளப்பட்டது. விளைவு அடுத்த சில ஆண்டுகளில் அதுவரை அரபுலகம் காணாத ஒரு ஒரு மாற்றத்தை உலகம் கண்டது. அங்கே அமைதியான, நீதியான சமூகச் சூழலை மக்கள் கண்டார்கள். பின்பு அது உலகம் முழுவதும் பரவலாக்கப்பட்டதை சரித்திரம் அறிந்தவர்கள் அறிவார்கள்.

இன்றும் மனிதர்கள் நிம்மதியான, நீதியான, வாழ்க்கையை தேடுகிறார்கள் அவர்களுக்கு அது கிடைப்பதற்காக உழைப்பது யார் பொறுப்பு? மனிதர்களுக்கு உலக வளங்களை ஆகுமான முறையில் பண்படுத்தி, பங்கீடு செய்யப்பட வேண்டும். உலகில் இறைவனின் வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். உலகில் மனிதன் படைக்கப்பட்டதே அதற்காகத்தான் என்கிறது இறைமறை. அதை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துவதே இஸ்லாமிய வாழ்வு. அதுதான் சமாதான வாழ்வு, அமைதியான வாழ்வு. அதற்கு வழிகாட்டுதல் இருக்கிறது. தேவை ஆய்வும், தெளிவான திட்டமிடலும்.

"நாகரிகம்தான் பொருட்களை உருவாக்குகிறது. எனவே ஒரு நாகரிகம் உருவாக்கிய பொருட்களை விலைக்கு வாங்கி இன்னொரு நாகரிகத்தை உருவாக்க முடியாது." -                      மாலிக் பின் நபி.