ஒரு கல்லூரிப் பேரசிரியரின்

மனம் திரந்த மடல்...........

Afghan students learn English
     என் அன்பிற்குரியவர்களே...
உங்கள் மீது இறைவனின் சாந்தியும், அவனது பொருத்தமும் என்றென்றும் நிலவட்டுமாக! நலம் நாடுவது நலமே!
கடந்த நான்கு மாதங்களாக சமூகநீதி முரசின் வாயிலாக உங்களைப் போன்ற மாணவக் கண்மணிகளோடு உரையாடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்! காரணம் இந்த

கடிதத்தின் மூலம் பயன் பெரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்! அவர்களிடமிருந்து அதற்கான பாராட்டுதல் வந்தாலும், இந்த சமூகதிற்கு எதேனும் செய்ய வேண்டும் என்ற ஆசையின், ஆர்வத்தின் வழியாக தோன்றிய இந்த மடலும், மடல் தருகின்ற செய்தியையும் எனது அனுபவத்தையும் நீங்கள் அங்கீகரித்திருகிறீர்கள் என்ற மன நிம்மதி எனக்கு கிடைத்திருக்கிறது! அல்ஹம்துலில்லாஹ்.
ஆகஸ்டு 15, 1947 நமது தேசத்தின் சுதந்திர தினம்! அந்நிய நாட்டு ஆங்கிலேயர்களை இந்த மண்ணை விட்டு துரத்துவதற்கு நமது முன்னோர்கள் செய்த தியாகம்...! அதை விவரிக்க கொஞ்சம் நஞ்சமல்ல! வர்த்தைகளும், எழுத்துக்களுக்கும் பஞ்சம் எற்படுமே தவிர அவர்களின் தியாகங்கள் நிமிர்ந்து நிற்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது! இருக்கவும் முடியாது! இருக்கவும் கூடாது!
ஆனால் இதுபோன்ற சுகந்திரப் போராட்டதிற்கு உயிர் நீத்த முஸ்லிம்களின் வாழ்கையும், வீரமும் தியாகங்களும், வரலாறுகளை விட்டு மறைக்கப்பட்டிருக்கின்ற செய்திகள் எல்லாம் உங்களைப் போன்ற மாணவக் கண்மணிகளுக்கு தெரிந்திருக்குமா? இல்லையா? என்பது எனக்கு தெரியவில்லை.
காரணம், உங்களது துருதுருப்பான இளமைப் பருவம், துடிப்பான வேகம், நாகரீகம் என்ற போர்வையில் வகுப்பில் எதைச் சொல்லிக் கொடுக்கிறார்களோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும், உங்களது இயல்பு, மனப்பக்குவம், வரலாறுகளும், அனுபவமும், அறிவுரைகளும் கசப்பாகிப்போன இளமைப்பருவம், இவைகளெல்லாம் ஒரு காரணமாக இருக்கலாம்.
வரலாறு தெரியாத சமூகத்திற்கு வரலாறு கிடையாது என்பதற்கிணங்க நமது பூர்வீகமான வரலாறுகள் எல்லாம் மறைக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை இருந்தாலும், மறைக்கப்பட்ட உண்மை வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், துடிப்பும் நமக்கு இல்லை என்ற கசப்பான உண்மையையும் நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.
எனதருமை இளைய ரத்தினங்களே! சாதித்தவர்களின் பட்டியிலில் இடம்பெற்றிருக்கும் வீரர்களின் வரலாறுகளை சற்று புரட்டிப்பார்! அங்கு தகுதிகள், திறமைகள் என்பதைத் தாண்டி இதை செய்து முடிக்க வேண்டும் என்ற வேட்கையும், பேராசையும், ஆர்வமும் அதற்கு தூண்டுகோலாக அமைந்திருப்பதை காண முடியும்?
அவன் அப்படி செய்துவிட்டான்; இவன் இப்படிச் செய்கிறான் என்று அவனைப் பற்றியும், இவனைப் பற்றியும் பேசுகிறோமே தவிர நாம் என்ன செய்தோம்? செய்கிறோம்? செய்யப் போகிறோம்? என்ற கேள்வி வினாவாகத்தனே இருக்கிறது.
சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் சம்பந்தமாக எத்துனையோ நூல்கள் வெளி வந்திருக்கின்றன. அதில் சிலவற்றை இங்கே தருகிறேன் மு.அப்துல் ஸமது எழுதிய தியாகத்தின் நிறம் பச்சை, பி.நாராயணன் எழுதிய சுதந்திர சுவடுகள், எஸ்.எம் ஹிதாயதுல்லாஹ் எழுதிய இந்து சமயமும், திப்பு சுல்தானும், நத்ஹர்ஷா எழுதிய மதுரை நாயகன் கான் சாஹிப், அ. மார்க்ஸ் எழுதிய வெறுப்பை விதைக்கும் வரலாற்று பாட நூல்கள், ஆனந்த விகடன் வெளியீட்டில் செ.திவான் எழுதிய வரலாற்று ஒளியில் ஒளரங்கசீப், பிலாலியா பதிப்பகம் வெளியிட்ட இந்திய வரலாறும், மறைக்கப்பட்ட உண்மைகளும் போன்ற ஏராளமான நூல்கள் உள்ளது. நேரம் கிடைக்கும் பொழுதாவது அதை நீ பயன்படுத்திக் கொள்.
இந்த விஷயங்களை எல்லாம் சென்ற மாதத்தில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ரமழான், வேலைப்பளு காரணங்களினால் எழுத முடியாமல் போய்விட்டது!
செப்டம்பர் மாதத்தில் நான் உனக்கு எழுத வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று! செப்டம்பர் 5 ஆசிரியர்கள் தினம்! இன்று நீ ஒரு தலை சிறந்த மாணவனாக இருக்கலாம் சற்று உனது கடந்த கால வாழ்க்கையை திரும்பிப்பார்! ஏராளமான எண்ண அலைகள், கனவுகள் எல்லாம் உன் கண் முன்னே காட்சியாகும். இதில் குறிப்பாக ஆசிரியர்களிடமும், பெரியவர்களிடமும் உனக்கும் இருந்த தொடர்புகளை நினைத்துப்பார்! ஒரு கட்டடம் உருவாகும் போது. பூமிக்கு கீழ் வானம் தோண்டுவார்கள். மேலே கட்டப் போகும் கட்டிடம் பலமாக இருக்க வேண்டுமெனில் வானம் தோண்டுதல் மிகவும் அவசியம். மிக உயர்ந்த கட்டிடம் நம் கண்களுக்கு தெரிகிறதே தவிர அதை தாங்கி நிற்கும் அஸ்திவாரம் யாருடைய கண்களுக்கும் தெரிவதில்லை! மேலே உயருகின்ற வண்ணப் பட்டங்கள் கண்களுக்கு தெரிகிறதே தவிர, அதை தூண்டும் கயிறும் தூண்டிலும் மனிதர்களும் கண்களுக்கு தெரிவதில்லை! மக்களுக்கு பலவிதமான முறைகளில், வழிகளில் பலன் தரும் மரங்கள் கண்களுக்கு தெரிகிறதே தவிர அதை உறுதிப்படுத்தும் வேர்கள் பூமிக்கு கீழ் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறது.
அதுபோல் இன்று உனது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப ஏதோ ஒரு நிலையில் இருப்பதற்கு காரணம் உனது ஆசிரியர்கள் என்பதை மறந்துவிடாதே! உனது திறமைகளை கண்டுப்பிடித்து உன்னை உயரத்தில் வைத்த ஆசிரியர்கள் உன்னைவிட்டும் மறைந்திருகிறார் என்பதை மறுத்துவிடாதே! உயர்ந்துவிட்ட எனக்கு நூல் தேவையில்லை என்று பட்டம் நினைத்தால் கீழே விழுவது பட்டம் தானே தவிர நூல் இல்லை; என்பதை புரிந்துகொள். உனது உயர்விற்கு ஏதோ ஒரு வைகையில் ஆசிரியரின் ஒத்துழைப்பு இருந்திருக்கும். நாம்தான் உயர்ந்துவிட்டோம்; அவரைப் போய் எதற்கு நாம் நினைத்து பார்க்க வேண்டும் என்றால் நன்றியுள்ளவனாக எப்படி இருக்க முடியும் என்பதை சிந்தித்துக்கொள்.
நமக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு மதிப்பும், கண்ணியமும், மரியாதையும் கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாம் நமக்கு கற்றுக் கொடுத்த பாடம்.
உனது சிறுவயதிலிருந்து இன்றுவரை எத்தனையோ வகுப்புகளில் பலவிதமான ஆசிரியர்களை சந்தித்திருப்பாய். சந்தித்தவர்களில் சிலர் உன்னை சாதிக்க வைதிருக்கலாம்; பலர் சிந்திக்க வைத்திருக்கலாம்;
டேய்; அந்த சார் வகுப்பு எடுத்தால் எவ்ளோ சூப்பரா இருக்கும் தெரியுமா....? அன்று அவர் எடுத்த இந்த வகுப்பு இன்றளவும் நினைவில் இருப்பதை அனுபவரீதியாக உணர்திருப்பீர்கள்.
சில ஆசிரியர்களின் வகுப்புகளில் பேசப்பட்ட சில விஷயங்கள் உங்கள் வெற்றியின் முகவரிக்கான வாசல்களாகக் கூட இருந்திருக்கலாம்.
நீ இந்த மாணவப் பருவத்தினை தாண்டி கடக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கின்றது. அதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர்கள் ஆசிரியர்கள்.
ஒரு சிறு உதவி செய்தால் அதற்கு நன்றி சொல்லி பழக்கப்பட்ட நாம், நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு உறுதுனையாக இருந்த ஆசிரிய பெருமக்களுக்கு நன்றி சொல்ல வேண்டாமா?
இன்று உங்களோடு பேசுகின்ற, பழகுகின்ற ஒரு நிலைக்கு அல்லாஹ் என்னை உயர்த்தியது எனது ஆசிரியர் பெருமக்களை கொண்டுதான்.
எனது பள்ளிப் பருவத்தை யோசித்துப் பார்கிறேன். ஆசிரியர்களின் அன்பும், ஆறுதலும் கோபங்களில் சில நேரங்களில் வாங்கிய அடியும், திட்டும் என் மனதில் இன்றும் நிழலாடுகிறது. அடி வாங்கியபோது அழுதிருக்கிறேன்; மனம் கலங்கி இருக்கிறேன் அன்று வாங்கிய அடியும் வலியும் வேதனையும் இன்றைய சந்தோஷத்திற்குத்தான் என்பதை அன்று நான் உணரவில்லை.
கல்லூரி வாழ்க்கையை கனா காணும் காலங்கள் என்று சொல்லுவார்கள். உண்மையில் அனுபவிக்க வேண்டிய பருவம்; மற்றவர்கள் எப்படி என்று எனக்கு தெரியவில்லை; அல்லாஹ்வின் பேரருளால் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரியில் பயின்ற அந்த 3 ஆண்டு காலங்களின் ஒவ்வொரு நிகழ்வும் என்னை கண் கலங்க வைக்கின்றது.
பிடித்த வகுப்புகளானாலும், பிடிக்காத வகுப்புகள் ஆனாலும் கரும்பலகைக்கு மேல் தொங்க விடப்பட்ட கருத்தரவுத்தரின் புகைப்படம், பல வினாக்களுக்கு விடை சொன்ன ஆசிரியர்! இன்றும் ஊருக்குச் செல்கின்ற போது என் கல்லூரியையும் அதை தாங்கிய மண்ணையும் பார்க்காமல் செல்வதில்லை! படங்கள் பாடங்களாகி, பாடங்கள் வாழ்க்கையாகி, வாழ்க்கை அனுபவமான காலத்திலும் கூட கல்லூரி நாட்களின் ஞாபகங்கள் மனதை மென்மையாய் தாலாட்டும் நினைவுகளை இப்போது நினைத்தாலும் உடம்பெல்லாம் புல்லரித்துப் போகிறது!
அமைதியான சூழல், ஆனந்தமான நண்பர்கள் வட்டம், அனைவரையும் உயர்த்திட வேண்டும் என்ற ஆசிரியர்களின் சிந்தனை அனைவரையுமே உயந்தவர்களாக மாற்றியது.
கல்லூரியில் இறுதியாண்டில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் மாணவர்கள் தங்களுக்குள் பேசிய போது கண்ணிலிருந்து வெளிவந்த ஆனந்த கண்ணீரீன் ஞாபகங்கள்.
3 ஆண்டு காலம் படித்துவிட்டு பிரிகிறோம் என்கிற பயத்தில் நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து வாங்கிய ஆட்டோகிராஃப் இன்று ஏதேனும் எனக்கு ஒரு மனக்கஷ்டம் என்றால் அதைப் பார்க்கும் போது ஏற்படுகின்ற ஆனந்தத்தையும், அதனால் ஏற்படுகின்ற மன நிம்மதியையும் வார்ததைகளால் எழுதிட முடியாது.
எனது முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமைந்த ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி மற்றும் புதுக்கல்லூரியின் துறை சார்ந்த, துறை சாராத பேராசிரியப் பெருமக்களின் ஆக்கப் பூர்வமான பேச்சும், அவர்களின் உயர்வான சிந்தனைகளும் என்னை இந்த அளவுக்கு உயர வைத்திருக்கின்றது என்று சொன்னால் மிகையல்ல.
என் அன்பு செல்வங்களே!
இதையெல்லாம் ஏன் உங்களுக்கு சொல்கிறேன் தெரியுமா?
உலகில் எதோ ஒரு மூலையில் இருகின்ற எனது முன்னேற்றத்திற்குப் பின்னால் எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்றால் உங்களைப் போன்ற ஒவ்வொரு மாணவர்களுக்கும் பின்னால் எத்தனை ஆசிரியர்கள் மறைந்திருக்கிறார்கள் என்று யோசித்துப்பார்.
நாம் சாப்பிடும் உணவிற்குப் பின் எத்துனை விவசாயிகளின் தியாகம் மறைந்திருக்கிறது தெரியுமா? அழகிய மண்பானைக்குப் பின் குயவனின் உழைப்பு மறைக்கப்பட்டிருக்கிறது? பயன்படாத கற்களை சிற்பங்களாக மாற்றும் சிற்பி நம் கண்முன் தெரியவில்லை. நாம் அழகுபட பார்க்கும் அனைத்து பொருட்களுக்கு பின்னால் இருக்கின்ற தியாகமும், உழைப்பும் நம் கண்களுக்கு தெரிவதில்லை என்பதால் அவைகள் எல்லாம் இல்லை என்று சொல்ல முடியாதல்லவா?
அது போன்றுதான்; ஒரு மனிதனின் உயர்வுக்குப் பின் ஆசிரியரின் தியாகம் மறைந்திருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறேன்!
இதை உங்களுக்கு சொல்வதற்கு மற்றொரு காரணமும் உண்டு.
ஒரு நாள் உத்தமபாளையம் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ்லில் ஏறினேன், அங்கு எனது பேராசிரியர் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹெளதியா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா.ஷாஹுல் ஹமீது அவர்கள் அதே பஸ்ஸில் அமர்ந்திருந்தார்கள். அவருக்கு ஸலாம் சொன்னேன்; அவரும் பதில் ஸலாம் சொன்னார்; ஸார்! என்னைத் தெரிகிறதா என்றேன்! தெரியலயே தம்பி என்றார்! ஸார்! நான் உங்களது மாணவன் என்று சொன்ன போது அவர் அடைந்த ஆனந்தமும், மகிழ்ச்சியும் எனது கண்களை விட்டு இன்றும் அகலவில்லை.
தன்னிடம் பயின்ற மாணவன் பிற்காலத்தில் தன்னை நினைவுகூர்ந்து பார்க்கின்ற போது, பேசுகின்ற போது ஒரு பேராசிரியர் பெரிய அளவு சந்தோஷப்படுகிறார் என்றார். எனது ஆசிரியர்களுக்கு நான் ஏன் அந்த சந்தோஷத்தை கொடுக்கக்கூடாது என நினைத்து நேரம் கிடைக்கும்போது எனது ஆசிரியர்களிடம் நலம் விசாரிக்க வேண்டும் என முடிவு செய்தேன்; எனது இந்த முடிவு உங்களையும் உற்சாகப்படுத்தும் என நம்புகிறேன்.
இவர்களைத் தாண்டி எனது நினைவில் நீங்காத எத்துனையோ ஆசிரியர்கள், உஸ்தாதுகள்....
சரி! இதற்கு பின்பும் ஆசிரியர்களின் மகத்துவத்தை விளக்கத்தேவையில்லை என நினைக்கிறேன்!
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர்கள்
ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு இரண்டாவது பெற்றோர்கள்.
என்ற பழமொழிக்கேற்ப நாங்கள் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கேட்பது புரிகிறது!
ஆசிரியர் தினத்தன்று உனது ஆசிரியர்களுக்கு போன் செய்து, சார் நான் உங்களது மாணவன் என்று அறிமுகப்படுத்தி அவர்களிடம் பேசிப்பாருங்கள்; அவர்கள் அடையும் சந்தோஷத்தை வார்த்தைகளுக்குள் கட்டுப்படுத்த முடியாது. மகிழ்வது ஆசிரியர்கள் மட்டுமல்ல; நாங்களும் தான் என்று அவர்களிடம் பேசிய பின் உங்களது உணர்வுகள் உங்களிடம் சொல்லும்..
வாழ்த்துக்களுடன்......
அல்ஹாஃபிழ் Dr. M. ஃபக்கீர் இஸ்மாயில் பிலாலி
(பொருளாதாரப் பேராசிரியர், புதுக்கல்லூரி)
தொடர்புக்கு : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Afghan students learn English