பொய்

 poi அந்த ஊரில் பெரிய திருடன் அவன். ஆனால் அவன் திருடன் என்று யாருக்கும் தெரியாது. பகலில் நல்லவன் போல இருப்பான். இரவில் திருடச் செல்வான்.
இறைத்தூதர் முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை திருடன் அறிந்தான்.
   நபியவர்களைப் பார்க்க வேண்டும்; அவரிடம் அறிவுரை பெற வேண்டும் என்று விரும்பினான்.
ஒரு நாள் நபி முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பேரிச்ச மர நிழலில் அமர்ந்திருந்தார்கள்.
அப்பொழுது அந்தத் திருடன் அண்ணலாரின் முன்பு பணிவுடன் நின்றான்.
“இறைவனின் தூதர் அவர்களே! எனக்கு ஏதேனும் அறிவுரை கூறுங்கள்” என்று தாழ்மையுடன் கேட்டான்.
அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவனைக் கொஞ்சம் கூர்ந்து நோக்கினார்கள்.
பின்னர் புன்னகை தவழ “இந்த நிமிடம் முதல் பொய் சொல்ல மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்” என்று கூரினார்கள்.
  அவனும் அப்படியே உறுதி மொழி எடுத்துக் கொண்டான். பிறகு அண்ணலாரிடமிருந்து விடை பெற்று வீடு திரும்பினான்.
அவனுக்கு உள்ளூர மகிழ்ச்சி…! நல்லவேளை…! நபியவர்கள் ‘பொய் சொல்லாதே’ என்றுதான் அறிவுரை வழங்கினார். ‘திருடாதே’ என்று சொல்லவில்லை. ஆகவே வழக்கம் போலத் திருடப் போகலாம். என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
   இரவு வந்தது, ஊர் அடங்கி எல்லோரும் உறங்கி விட்டனர், தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. அவன் திருடுவதற்காகப் புறப்பட்டான்.
வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் அவனுக்குள் ஒரு தயக்கம் ஏற்பட்டது.
“நாளை அல்லது நாளை மறுநாள் அல்லாஹ்வின் தூதரை மீண்டும் சந்திக்கும் போது நான் எடுத்த உறுதி மொழி பற்றி நிச்சயம் விசாரிப்பார். ‘நேற்று நீ என்ன செய்தாய்?’ என்று கேட்டால் ‘திருடினேன்’ என்று உண்மை சொல்ல வேண்டியது வருமே! அப்பொழுது நிலை என்ன ஆகும்? நபியவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்,” என்ற எண்ணம் திருடனின் மனதில் ஓடியது.
   திருடனின் மனம் மாறியது. அவர் அன்றிலிருந்து திருடுவதை விட்டு விட்டார். நாமும் பொய் சொல்ல மாட்டோம் என்று உறுதி மொழி எடுப்போம். இன்று நாம் பொய் சொல்வது உலகத்தில் யாருக்கும் தெரியாவிட்டாலும்; அல்லாஹ் நிச்சயம் மறுமையில் விசாரிப்பான் அப்பொழுது நாம் என்ன செய்ய முடியும்? எனவே பொய் சொல்ல மாட்டோம் என்பதை இன்றே உறுதி மொழி எடுப்போம். நாளை மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பித்து சுவனம் செல்வோம்.