திருக்குஆனில் பெண்கள்

womenவேறு எப்போதும் இல்லாத அளவுக்கு சமீப காலத்தில் அதிகம் பேசப்படும் விஷயமாக “இஸ்லாமும், முஸ்லிம்களும், இஸ்லாமிய இயக்கங்களும்,” ஆக்கப்பட்டுள்ளன. அதில் இஸ்லாம் மீதான குற்றச்சாட்டுகளும் சேர்ந்தே வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கான உரிமை, சட்டம் பற்றிய புரிதல்களில் பல்வேறு முரண்பாடான செய்திகள் குற்றச்சாட்டுகளாக முன் வைக்கப்படுகின்றன. எனவே இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள், சட்டங்கள், சிறப்புகள் சம்பந்தமாக இடம் பெற்றுள்ள வரலாற்றுக் குறிப்புகள், ஆன்மீகத்தில் பெண்களின் பங்களிப்பு, குடும்ப உறவுகள், சமூகப் பங்களிப்பு, அதிகாரம் என பல்வேறு கோணங்களில் திருக்குர்ஆனில் பெண்கள் பற்றி இடம் பெற்றுள்ள அனைத்துக் குறிப்புகளையும் ஒவ்வொன்றாக அடுத்தடுத்த மாதங்களில் விளக்கமாகப் பார்ப்போம்.
பெண் சுதந்திரமற்றவளா?
உரிமை பறிக்கப்பட்டவளா?
பெண் பிறரைச் சார்ந்து வாழ வேண்டியவளா?
ஆணுக்கு பெண் அடிமையா?
பெண் கவர்ச்சிப் பொருளா?
பெண்ணுக்கு விவாகரத்து உரிமை உள்ளதா?
பர்தா பெண்களுக்குப் பாதுகாப்பா? அடிமைத் தனமா?
ஷரீஅத் சட்டங்கள் பெண்ணுக்கு பாதுகாப்பளிக்கிறதா? இக்கேள்விகளுக்கெல்லாம் திருக்குர்ஆனில் விடைதேடுவதே இக்கட்டுரையின் நோக்கம்! அவற்றை விரிவாகப் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!...
திருக்குர்ஆனில், தாய், பெண், மனைவி, சகோதரி, மூதாட்டி என்று பெண்களைக் குறிப்பிடும் வார்த்தைகள் சுமார் 229 இடங்களில் வருகிறது. குர்ஆன் குறிப்பிடும் இப்பெயர்களில் “அல் உம்மு” தாய் எனும் எனும் வார்த்தை மகத்தான கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திருக்குர் ஆனில் உறுதி செய்யப்பட்ட தெளிவான வசனங்களை “உம்மும் கிதாப்” அவையே இவ்வேதத்தின் “தாய்” (அல்குர்ஆன் 3 : 7) என்றும், நகரங்களில் புனிதம் நிறைந்த மக்காவை “உம்மும் குரா” “இதுதான் தாய் நகரம்” (அல்குர்ஆன் 6 : 92) என்றும் குறிப்பிடுகிறது.
மேலும் சமுதாயம் எனும் பொருளில் திருக்குர்ஆனில் வரும் “அல் உம்மத்” எனும் வார்த்தை உம்மு (தாய்) எனும் வார்த்தையின் திரிபேயாகும். சமுதாய உருவாக்கம் என்பது தியாகத்தின் வெளிப்பாடு என்பதை இந்த வார்த்தைப் பிரயோகம் உணர்த்துகிறது!
இப்படி “பெண்களைப் பற்றிய முதன்மை வார்த்தையாகிய “தாய்” என்பதை குர்ஆன் புனித நகருக்கும், புனித வசனங்களுக்கும் பயன்படுத்தியிருப்பதிலிருந்து தாயின் மகத்துவத்தை இஸ்லாம் புரிய வைத்து விடுகிறது.
இதனால்தான் ஒரு பெண் தாய் எனும் தகுதியில் இருக்கும் போது அவளின் அந்தஸ்த்துக்கு அருகில் கூட ஆணை (தந்தையை) வைக்கவில்லை!
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “மனிதர்களில் நான் யாருக்கு அதிகம் கடமைப்பட்டவன்?” என்று கேட்டார். நபியவர்கள் “உனது தாய்” என்றார்கள். பிறகு யார் என்று கேட்டார் “உனது தாய்” என்றார்கள். பின்பும் அதே கேள்வியைக் கேட்க மூன்றாவது முறையாகவும் “உனது தாய்” என்றார்கள். நான்காவது முறை நான் யாருக்கு கடமைப்பட்டவன் என்று அந்த மனிதர் கேட்ட போது “உனது தந்தை”என்றார்கள்.
அபூ ஹூரைரா(ரழி) நூல் : புகாரி.
நபி (ஸல்) அவர்கள் முதல் மூன்று இடங்களையும் பெண்ணுக்கு (தாய்க்கு) வழங்கியுள்ளார்கள். அதன் மூலம் பெண்களால் (தாய்களால்) மட்டுமே நடைபெறக்கூடிய, குழந்தையைக் கற்பத்தில் சுமத்தல், பிரசவம் மற்றும் பாலூட்டுதல் எனும் தாயின் முக்கியமான மூன்று கட்டங்களையும் மனிதர்களின் நினைவில் நிலை நிறுத்துகிறார்கள். மிக முக்கியமாக இவற்றை ஆண்களால் செய்திட இயலாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
திருக்குர்ஆனில் சில பெண்களின் வரலாற்றை விரிவாகவும், சிலரைப் பற்றி சில குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. மேலும் “போகிற போக்கில் சொல்வது” என்போமே அதே போன்று ஒரு வார்த்தைப் பிரயோகத்தில் பெண்ணின் தகுதியை நமக்கு உணர்த்திவிடுகிற சொல்லாடல்களையும் திருக்குர்ஆனில் காணலாம்.
முன்சென்ற சமுதாயங்களின் வரலாறுகள் குர்ஆனில் குறிப்பிடப்படுவதால் அச்சமுதாயத்தில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
childகி.மு 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த லூத் (அலை) அவர்கள் ஜோர்டான் நாட்டின் ‘ஸத்தூம்’ எனும் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு தூதராக அனுப்பப்பட்டார்கள். இச்சமுதாயத்தின் நிலை அவர்கள் பெண்களை நடத்திய விதம் என்னவென்பதை திருக்குர்ஆனின் வார்த்தைகளில் பார்ப்போம்.
லூத் (அலை) அவர்கள் (தன் சமூகத்திடம்) “உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக்கேடான காரியத்தையா செய்கிறீர்கள்?” என்று கேட்டார். ”
நீங்கள் பெண்களை விட்டு விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள். நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாக இருக்கிறீர்கள் (என்று கூறினார்). அல் குர்ஆன் 7 : 80, 81
இச்சமுதாயத்தினர் “ஓரினச் சேர்க்கை” மூலம் தமது இச்சைகளைத் தீர்த்துக் கொண்டனர். இம்மாபாதகத்தோடு “சமுதாயத்தில் பெண்களுக்கான பங்களிப்பை வழங்காது அவர்களை உதாசீனப்படுத்தினர். அதன் மூலம் பெண்களின் வாழ்வியல் உரிமை தட்டிப் பறிக்கப்படுவது குறித்து திருக்குர்ஆன் தனது கண்டனத்தை பதிவு செய்வதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். ஒரு சமுதாயம் பெண்களைப் புறக்கணித்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்!
இதனாலேயே அந்தச் சமூகத்தார் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் அழிக்கப்பட்ட இடம் உலக மக்களுக்கு எச்சரிக்கையாக இன்றும் உள்ளதாக குர்ஆன் குறிப்பிடுகிறது. அல் குர்ஆன் 7 : 83, 84
பண்கள் சம்பந்தமாக குர்ஆன் கூறும் பல்வேறு செய்திகளை இலக்கியங்கள், இதிகாசங்கள், வேத நூல்கள், பல்வேறு நாட்டில் வழங்கப்படும் சட்டங்கள், மரபு சார்ந்த விழுமியங்கள், தற்கால நிகழ்வுகள் ஆகியவற்றோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.
அப்போதுதான் பரவியுள்ள கட்டுக் கதைகளிலிருந்து இஸ்லாத்தையும், புறக்கணிக்கப்பட்ட பெண் விடுதலையையும் நாம் மீட்க முடியும். அதற்கு திருக்குர்ஆன் வழிகாட்டும்.
அ.அப்துர்ரஹ்மான் ஷிப்லி மிஸ்பாஹி.