ஹதீஸ் - ஓர் ஆய்வு

   hadees 1முன்னுரை : அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள இரு பெரும் அருட்கொடைகளுல் ஒன்று திருக்குர்ஆன். மற்றொன்று ஹதீஸ் - நபிகளாரின் பொன்மொழிகளாகும். இவ்விரண்டும் அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாத்தின் இரு மூலாதாரங்களாகும். இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் இவ்விரண்டைப் பற்றி போதிய அளவில் அறிந்திருப்பது அவர்கள் மீது கட்டாயக் கடமையாகும். இக்கடமையை முஸ்லிம்கள் நிறைவேற்றிடும் வகையில் இஸ்லாத்தின் இரண்டாவது ஆதாரமான ஹதீஸ்களைப் பற்றிய வரலாறு, அதன் நம்பகத் தன்மை, அதன் மீது எதிர்காலத்தில் தொடுக்கப்படும் தாக்குதல்கள் பற்றிய நபிகளாரின் முன்னறிவிப்புக்கள், மேலும் ஹதீஸ் தொடர்பாக நாம் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகள் முதலிய பல்வேறு விஷயங்களை முஸ்லிம் சமுதாயத்திற்கு விளக்குவதே இத்தொடர் கட்டுரையின் நோக்கமாகும். எனவே சமூக நீதி முரசு மாத இதழின் ஒவ்வொரு வாசகரும் தவறாது இத்தொடர் கட்டுரையை படித்து பயன் பெறுவதுடன் மற்றவர்களுக்கும் ஹதீஸ்களைப் பற்றிய செய்திகளை எடுத்துரைக்க வேண்டும் என உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
    ஹதீஸ் எனும் தலைப்பினுள் புகுவதற்கு முன்னால் முதலில் ஹதீஸைப் போதித்த நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய பொறுப்புக்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களின் பொறுப்புக்களைப் பற்றி நாம் அறியும் போதுதான் ஹதீஸ்களைப் பற்றிய முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.
நபிகளாருக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கள்!
1. முபல்லிக் :
முபல்லிக் என்றால் எத்திவைப்பவர் என்று பொருளாகும். அல்லாஹ் கூறுகின்றான். தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்;. நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (அல்குர்ஆன். 05 : 67) இவ்வசனத்தில் அல்லாஹ் தன் தூதருக்கு பல செய்திகளை தெளிவுபடுத்துகின்றான்.
அவைகள் பின் வருமாறு :
அல்லாஹ்வால் அருளப்பட்ட அனைத்து விஷயங்களையும் அவர்கள் மக்களுக்கு எடுத்துறைக்க வேண்டும்.
அவ்வாறு எடுத்துறைக்கவில்லையாயின் அவர்கள் தன் தூதுத்துவத்தை முழுமையாக செய்யவில்லை என்று பொருளாகிவிடும்.
அல்லாஹ்வின் செய்திகளை மக்களிடம் எத்திவைக்கும் போது மார்க்க எதிரிகளால் அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது எனபதற்கு அல்லாஹ் உத்திரவாதம் அளிக்கின்றான்.
அல்லாஹ்வை மறுப்போருக்கு அல்லாஹ் வழிகாட்டுவதில்லை.
இத்திருவசனத்தின்படி அல்லாஹ் தமது செய்திகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லுகின்ற பொறுப்பை -பதவியை நபிகளாருக்கு வழங்கியுள்ளான். இதன்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லக்கூடிய செய்திகள் அல்லாஹ்வால் சொல்லப்பட்டவைதான். எனவே அச்செய்திகளை மறுப்பவர்கள் அல்லாஹ்வின் செய்தியை மறுத்தவராகத்தான் கருதப்படுவார்.
2. முபய்யின் :
முபய்யின் என்றால் தெளிவுபடுத்துபவர், விவரிப்பவர் என்று பொருளாகும். அல்லாஹ் கூறுகின்றான் : (நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (அல்குர்ஆன். 16 : 44)
குர்ஆனைப் பொறுத்தவரை அதில் தெளிவான வசனங்களும் உள்ளன. விளக்கம் தேவைப்படும் வசனங்களும் உள்ளன! இவற்றில் எவைகளுக்கு விளக்கம் தேவையோ, எவ்வளவு தேவையோ அவைகளை நபி (ஸல்) அவர்கள் தங்களின் ஹதீஸ்களின் மூலம் விவரிக்க வேண்டும். இது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய பொறுப்பாகும். இதன்படி திருக்குர்ஆனுக்கு நபி (ஸல்) அவர்களின் விளக்கமே முதன்மையானதாக எடுத்துக் கொள்ளப்படும். ஏனெனில் அவர்கள்தான் விளக்கம் அளிக்க அல்லாஹ்வின் அங்கீகாரத்தைப் பெற்றவர்கள். அவர்களின் விளக்கத்திற்கு மாற்றமான விளக்கத்தை ஒருவர் கூறினால் அவ்விளக்கம் மறுக்கப்பட வேண்டும். நிராகரிக்கப்பட வேண்டும். இதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். அப்படியானால் மார்க்கத்தில் ஹதீஸ்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை அறிந்து கொள்ள முடியும்.
3. முஅல்லிம் :
முஅல்லிம் என்றால் ஆசிரியர் என்று பொருளாகும். அல்லாஹ் கூறுகின்றான். அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான், அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (அல்குர்ஆன். 62 : 2) இவ்வசனத்தின்படி நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வேதத்தைக் கொடுத்து, அதனை மக்களுக்கு கற்றுக் கொடுத்திடும் ஆசிரியர் பணியையும் அவர்களிடம் ஒப்படைத்துள்ளான் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
4. ஹாகிம் :
ஹாகிம் என்றால் தீர்ப்பளிப்பவர் என்று பொருளாகும். அல்லாஹ் கூறுகின்றான். (நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்;. எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர். (அல்குர்ஆன். 4 : 105)
5. காழி :
காழி என்பதற்கும் தீர்ப்பளிப்பவர் என்றே பொருளாகும். எனினும் ஹாகிம், காழி ஆகிய இரு வசனங்களுக்கிடையில் வித்தியாசங்கள் உள்ளன.
ஹாகிம் என்றால் நபி (ஸல்) அவர்கள் ஒரு இறைத்தூதர் என்ற முறையிலும், ஆட்சித் தலைவர் என்ற முறையிலும் தீர்ப்பளிப்பதற்கு ஹாகிம் எனப்படும்;.
காழி என்றால் நபி (ஸல்)அவர்கள் இறைத்தூதர் என்ற அடிப்படையில் மட்டும் வழங்கப்படும் தீர்ப்புக்கு காழி எனப்படும். இத்தீர்ப்பை ஒவ்வொரு முஸ்லிமும் அப்படியே ஏற்றுக் கொள்வதுடன், அதில் மாற்றுக் கருத்து கொள்ளக் கூடாது. அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸுலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன். 33 : 36)
முஸ்லிம்கள் மீதுள்ள கடமை!
முஸ்லிம்களைப் பொறுத்த வரை அல்லாஹ்வின் தூதருக்கு அவர்கள் கட்டுப்பட்டே தீரவேண்டும். இது அல்லாஹ்வின் உத்தரவாகும். அல்லாஹ் கூறுகின்றான். நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களுக்கிடையில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன். 04:59) இதன்படி அல்லாஹ்வின் உத்தரவை மீறுகின்ற வகையில் யாரேனும் அவனுடைய தூதருக்கு கட்டுப்பட மறுத்தால் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. அல்லாஹ் கூறுகின்றான். (முஃமின்களே!) உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் (அல்லாஹ்வுடைய) தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள். உங்களிலிருந்து (அவருடைய சபையிலிருந்து) எவர் மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை திடமாக அல்லாஹ் (நன்கு) அறிவான் - ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன். 24:63)          

                                                                                                            (தொடரும்)..........