திருக்குர்ஆனில் பெண்கள் 4

r10 24741159
பெண் சிசுக்கள் கருவிலேயே கண்டறியப்பட்டு அழிக்கப்படும் கொடூரங்கள் வரலாற்றுக் காலம் முதல் அறிவியல் வளர்ந்த இக்காலம் வரை தொடர்ந்து நடைபெற்று வருவதை முந்தைய இதழ்களில் பார்த்தோம். எல்லாக் காலத்திலும் இக்கொடிய செயலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் வெவ்வேறு வழிகளில் பெண் சிசுக் கொலைகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டுதானிருக்கிறது.
பெண் சிசுவை அழிப்போருக்கான தண்டனைச் சட்டம் இப்போதும் இருக்கிறது ஆனால் அந்தக் குற்றத்தை செய்யும் டாக்டருக்கோ, மருத்துவமனைக்கோ தண்டனை வழங்கப்படுவதில்லை! 1994 ஆம் ஆண்டு முதல் இருக்கும் அச்சட்டத்தால் எந்தப் பயனும் இல்லை! எனவே பெண் சிசுக் கொலைகளைத் தடுக்க அதிரடிப்படை அமைக்க வேண்டும்!
இவ்வாறு மத்திய அரசின் தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் கிரிஜா விலாஸ் டில்லியில் நடந்த ஒரு மாநாட்டில் பேசியிருப்பது பெண் சிசுக் கொலைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எவ்வாறு பயனற்றுப் போயிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
இந்த இடத்தில்தான் பெண் குழந்தைகளைப் பற்றி இஸ்லாம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வையும், பாதுகாப்பையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விஞ்ஞானத்தில் வளர்ந்த நாடு என்று தம்மை கூறிக் கொள்வோரிடையிலும், நாகரீகத்தை கற்றுக்கொடுத்ததாகச் சொல்லிக் கொள்ளும் நாடுகளிலும், கல்வியிலே புரட்சி கண்டதாக கருதும் நாடுகளிலும், இன்னும் உலகில் நாங்களே பழம் பெருமை மிக்கவர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் நாடுகளிலும், உலகாயத நோக்கத்தில் பெண் குழந்தைகள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க; ஆண் குழந்தைகளுக்கு நிகராகவும், அதை விட மேலாகவும் பெண் குழந்தைகளை ஏற்றிப் போற்றிடும் மனப்பாங்கினை இஸ்லாமிய நாடுகளிலே இன்றும் காணலாம். பெண்கள் பற்றி இஸ்லாம் ஏற்படுத்தி இருக்கும் அறிவுறுத்தலும் வழிகாட்டுதலும் இதற்குக் காரணமாகும்.
பெண் குழந்தைகளை அற்பமாக கருதும் போக்கு எந்த முஸ்லிமிடமாவது தலை காட்டுமானால் அதை தட்டி நிமிர்த்திடும் ஆன்மீக ரீதியிலான வழிகாட்டுதலை தன்னகத்தே கொண்ட மார்க்கம் இஸ்லாம் அதனால்தான் கடந்த 14 நூற்றாண்டுகளாக பெண்ணுரிமைகளை பேணிடும் மார்க்கமாகவும், பெண்ணுரிமைகளை உலகுக்கு உணர்த்திடும் மார்க்கமாகவும் இஸ்லாம் திகழ்கிறது

Muslim-mother-child.

பெண் குழந்தைகள் கொல்லப்பட்ட வரலாற்றை பதிவு செய்யும் போதெல்லாம் (இஸ்லாத்திற்கு முந்திய) அரபகத்தில் பெண் குழந்தைகள் உயிரோடு புதைக்கப்பட்டதை முதலாவதாக பதிவு செய்யும் எழுத்தாளர்கள் இப்போது பெண் குழந்தைகள் பாதுகாக்கப்படுவதை கடைசிப் பக்கத்தில் ஒரு வரிச் செய்தியாகக் கூட எவரும் பதிவு செய்வதில்லை. நடுநிலையாளர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்களின் நிலையும் இப்படித்தான் உள்ளது. “இஸ்லாத்துக்கு” எதிரான சிந்தனையும் காழ்ப்புணர்ச்சியும் கொண்டவர்கள் அரபுநாடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் சில நிகழ்வுகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இஸ்லாத்தை வசை பாட ஆரம்பித்து விடுகின்றனர். இதை இங்குள்ள சில பத்திரிக்கைள் கவர் ஸ்டோரி வெளியிட்டு இஸ்லாம் பெண்ணுரிமைக்கு எதிரான பழமைவாதம் கொண்ட மதம் என்ற முனை மழுங்கிப்போன ஆயுதத்தை மீண்டும் மீண்டும் கூர் தீட்டிக் கொள்கின்றனர்.
இப்படித்தான் சமீபத்தில் “சவூதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்ட கட்டுப்பாடு” என்ற செய்தி யூத ஸியோனிஸ செய்தி நிறுவனங்களால் உலகுக்கு விற்பனை செய்யப்பட்டன. மேலும் அமெரிக்காவின் அதிபர் இந்திய வருகைக்குப் பின் சவூதி அரேபியா சென்ற போது அதிபரின் மனைவி மிட்செல் ஒபாமா (இரு கைகள் முழுமையும் காலில் கரண்டை வரையும்) அணிந்திருந்த ஆடையுடன் புகைப்படம் வெளியிட்டு “சவூதியில் பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு” என்று செய்தி வெளியானது. வழக்கம் போல் இங்குள்ள சில தொலைக் காட்சிகள் அதையும் விவாதப் பொருளாக்கி களம் கண்டன இது உண்மையில் பெண்கள் மீதான அக்கறையால் அல்ல! இஸ்லாம் பெண்ணுரிமைக்கு எதிரான மார்க்கம் என்று பதிவு செய்வதே இவர்கள் நோக்கமாகும்.
உலகளவில் எல்லா நாடுகளிலும் பெண்கள் நடத்தப்படும் விதங்கள், பெண்களுக்கான சட்டங்கள், அவரவர் சமூகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் அந்தஸ்துகள், அந்த நாடுகளில் பெண்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, ஒவ்வொரு நாடுகளிலும் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் ஆகியவற்றின் புள்ளி விவரங்களை; மேற்குறிப்பிட்ட அதே பிரச்சனைகளில் அரபு நாடுகளிலிருந்து கிடைக்கும் புள்ளி விவரங்களோடு ஒப்பிட்டு வாதித்து ஆய்வு செய்து எழுத எந்த பேனா முனைக்கும் அல்லது எழுதாளனின் மூளைக்கும் துணிவு இருக்கிறது?
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற புத்தகக் காட்சியில் ஆய்வுக்காக பெண், பெண்ணியம், பெண்ணுரிமை சம்பந்தமான நூல்களை தேடிப்பிடித்து வாங்கினேன். ஒரு சில நூல்களைத் தவிர பெரும்பாலான நூல்களில் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்கள்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அக்கருத்தும் நேர்மையான விமர்சனங்களாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் அந்த விமர்சனங்கள் குரோத மனப்பான்மையில் திட்டமிட்டு எழுதப்படுகின்றதோ என்று எண்ணம் நமக்கு ஏற்படுகிறது.
ஒரு நூலில் சிறுபான்மை மதச் சட்டங்களை ஆய்வு செய்யும் ஒரு எழுத்தாளர் இவ்வாறு எழுதுகிறார். ‘இஸ்லாமியர்களின் விவாகரத்து இருபாலருக்கும் சமமானது அல்ல, ஆணுக்கு மட்டும் சுதந்திரம் அளித்து பெண்ணுக்கு அதை மறுப்பது சமத்துவமற்றது.’
“இந்தியாவில் உள்ள இஸ்லாமிய ஆண்கள் ஒவ்வொரு வரும் நான்கு மனைவி வரை “வைத்துக்” கொள்ளலாம்.” இதுதான் ஒரு புரட்சிகர எழுத்தாளரின் அறிய கண்டுபிடிப்பு. இந்திய நடைமுறையில் பெண்களை “வைத்துக்” கொள்வது என்றால் என்ன அர்த்தம் என்று சிறு பிள்ளையும் அறியும், ஆனால் இந்த எழுத்தாளருக்கு அப்படி எழுதுவதில் எந்தக் கூச்சமும் இல்லை!
விவாக விலக்குக்குப் பின் ஒரு பெண் கடைப்பிடிக்கும் காத்திருப்புக் காலாமான இத்தாவை ‘இக்தாத்’ என்று தவறாக எழுதி தான் எந்த ஆய்வையும் செய்திடவில்லை என்பதை வெளிப்படுத்தி விடுகிறார்.
“குலா” என்ற விவாக விலக்கு கோரும் உரிமையை இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கி இருப்பதை Muslim Personal Law Shariat Application Act 1937 india – இல் உறுதிப்படுத்தி இருப்பதை மறைத்து விட்டு அப்படி எந்த உரிமையும் இல்லை என்று எழுதுவது ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய் இல்லையா?
250 பக்கங்கள் கொண்ட ஒருவரது நூலில் ஒரு முஸ்லிம் பெண் முக்காடிட்டு முகத்தை முகத்தை மறைத்திருப்பது போன்று அட்டைப்படம் வெளியாகி இருந்தது. அந்த நூலை வெளியிட்ட பதிப்பகத்தை தொலை பேசியில் தொடர்பு கொண்டு இவ்வாறு வெளியிட வேண்டிய அவசியம் என்ன? என்று கேட்ட போது சரியான காரணத்தை அவர்களால் சொல்ல முடியவில்லை மழுப்பலாகப் பேசி விட்டு தொடர்பை துண்டிப்பதிலேயே கவனமாக இருந்தனர். இவர்களைப் போன்றவர்களின் நோக்கம் மிகத் தெளிவானது. பெண்ணுரிமைக்கு எதிரானது என்று இஸ்லாத்தை அடையாளப்படுத்தி களங்கப்படுத்த வேண்டும் அவ்வளவுதான் அதை மிகச் சரியாகவே செய்து கொண்டிருக்கிறார்கள்.
பெண்ணுக்கான உரிமையை, பாதுகாப்பை மதிப்பை வேறு எந்தச் சட்டமும், மதமும் வழங்காத நிலையில் இஸ்லாத்தினால் மட்டுமே முழுமையாக வழங்க முடியும்.
பெண்கள் விஷயத்தில் இஸ்லாத்திற்கு எதிராக திணிக்கப்படும் இக் குற்றச்சாட்டுகளை நாம் பார்த்து விட்டு கள்ள மௌனம் காக்க வேண்டிய அவசியமில்லை! இத்தகைய சூழ் நிலையில்தான் இக்கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கினேன்.
எனவேதான் இத்தொடரில் பல்வேறு கோணங்களிலும் இஸ்லாம் வழங்கியுள்ள பெண்ணின் உரிமைகளை விரிவாக எழுதி வருகிறோம்.
இதுவரை பெண் குழந்தைகள் உலகில் எவ்வறெல்லாம் அழிக்கப்பட்டனர் என்பதையும் இஸ்லாம் அதை எவ்வாரெல்லாம் தடுத்துள்ளது என்பதையும் விரிவாகப் பார்த்தோம். குழந்தை வளர்ப்பில் நிலவும் சமத்துவமற்ற நிலைகளையும் குழந்தை வளர்ப்பில் பெண் குழந்தைகளுக்கு திருக்குர்ஆன் எவ்வாரெல்லாம் முக்கியத்துவம் அளித்திருக்கிறது என்பதையும் இனி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்....