இயற்கை இரசாயனம்?

organic-label
இப்போதெல்லாம் நாம் இரசாயனம், இயற்கை என்று பேச ஆரம்பித்திருக்கிறோம். உண்பது, அருந்துவது, பயன்படுத்துவதென அனைத்திலும் இயற்கைப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் உரக்க ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. இது நிச்சயம் நல்ல, வரவேற்கப்பட வேண்டியதொரு கோரிக்கைதான். ஆனால் இதில்தான் நான் மிகப்பெரியதொரு முரண்பாட்டைக் காண்கிறேன். வெறும் கருத்து முரண்பாடுதானேயொழிய, பயன்பாட்டு முரண்பாடல்ல.
ஐரோப்பிய நாடுகளில் ‘பயோ’ (Bio) என்று அடையாளமிடப்பட்டு உணவுப் பொருட்கள் தனியாக விற்பனைக்கு வரத் தொடங்கிவிட்டன. இவற்றிற்கெனத் தனியான விற்பனைக்கடைகளே உருவாக்கப்படுகின்றன. ‘பயோ' என்பதற்கு, 'அந்த உணவுப் பொருட்கள் இரசாயனங்கள் கலக்கப்படாமல் உருவாக்கப்பட்டவை’ என்றுதான் அர்த்தப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் தேனீர் அருந்துவதில்கூட, ‘கருப்புத் தேனீர்’ (Black Tea) என்று சொல்லப்படும் நம்மூர்த் தேனீர், இரசாயனம் கொண்டது. அதனால், 'பச்சைத் தேனீர்’ (Green Tea), மல்லிகைத் தேனீர் (Jasmin Tea), அது இதுவென்று பலவகைத் தேனீர்களை அருந்துமாறு பரிந்துரைக்கிறார்கள். இந்தத் தேனீர்கள், இயற்கையானவை, இரசாயனங்களற்றவை, உடலுக்கு உகந்தவவை என்று சொல்லப்படுகிறது. அதனால் கருப்புத் தேனீரைப் பலர் தவிர்த்துக்கொள்கிறார்கள்.
மேலே சொன்னவை போல, இயற்கை, இரசாயனம் என்று பிரிக்கப்படும் பல விசயங்கள் உண்டு. அவற்றைப் படிப்படியாகச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இங்குதான் நாம் முரண்படுகிறோம். இயற்கையோ, செயற்கையோ அனைத்துமே இரசாயனம்தான் என்ற உண்மையை நாம் அறிவோமா? பூமியில் உள்ள அனைத்துமே இரசாயனங்கள்தான் என்பதை நாம் புரிந்துகொள்வதேயில்லை. இரண்டு அணுக்கள் ஒன்றாகச் சேர்ந்து மூலக்கூறுகளாக மாறும்போது, அவை இரசாயனம் என்றாகிவிடுகிறது. உலகில் இரசாயனம் இல்லாத எதையும் நாம் பயன்படுத்தவே முடியாது. நாம் சுவாசிக்கும் காற்றுக்கூட இரசாயனம்தான். அதிகம் ஏன், நீரும் இரசாயனம்தான் (H2O). ‘கெமிகல்’ என்னும் சொல்லைப் பயமுறுத்தும் ஒரு சொல்லாகவே நாம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். அதற்கான காரணங்கள் வேறாக இருந்தாலும், அதற்கு இரசாயனத்தின் மேல் பழிபோடுவது பாவமில்லையா?
நீங்கள் அறிந்து இரசாயனம் இல்லாத, பூமியிலிருக்கும் பொருள் ஒன்றைச் சொல்ல முடியுமா? இரசாயனம் என்றாலே, 'ஒரு தனிமம் அல்லது தனிமங்களின் கூட்டு' என்பதுதானே!
இப்போது இயற்கை என்னும் சொல்லையும் கவனியுங்கள். நாம் பயன்படுத்தும் அனைத்து உணவுகளும், பானங்களும், இரசாயனங்களும், மருந்துகளும், பூச்சிக் கொல்லிகளும் இயற்கையிலிருந்து பெறப்படும் அடிப்படை மூலகங்களின் சேர்க்கைகள்தான். அனைத்தும் இயற்கையில், பூமியில் தானாக உருவாகும் தனிமங்களின் மறுவடிவங்கள்தான். சொல்லப்போனால், இரசாயனம் என்பதே இயற்கையிலிருந்து பெறப்படுவதிலிருந்து பிறப்பதுதான். 600 வகைக் கொடிய இரசாயனங்கள் கொண்டது சிகரெட் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அதன் புகையிலைகூடப் பூமியில் இயற்கையாக வளரும் தாவரமாகத்தான் இருக்கிறது. கருப்புத் தேனீரும் தாவரம்தான். பச்சைத் தேனீரும், மல்லிகைத் தேனீரும் தாவரங்கள்தான் இதில் எப்படி, கருப்புத் தேனீரை மட்டும் இயற்கையிலிருந்து விலக்குவது?
ஆனால், இயற்கை, இரசாயனம் என்று பிரித்துச் சொல்பவர்களின் நல்ல நோக்கத்தையும் நாம் இங்கு மிகச்சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் எண்ணம் இயற்கை, இரசாயனம் என்று பிரிப்பதில் இல்லை. 'இது உடலுக்குக் கேடானது’, 'இது உடலுக்குக் கேடற்றது'. என்னும் நல்லெண்ணத்தையே அடிப்படையாகக் கொண்டது. இயற்கை உரம், செயற்கை உரம் என்ற இரண்டையும் எடுத்துக் கொண்டால், இரண்டுமே இரசாயனங்கள்தான். ஆனாலும், ஒன்றை உடலின் தீமையைக் கருதிப் பயன்படுத்த வேண்டாம் என்கிறார்கள் அவ்வளவுதான். அத்துடன் இயற்கை உரம் என்பது, எந்தவொரு தொழிற்சாலையிலும் தயாரிக்கப்படாமல், விலங்குகளிலிருந்தும், தாவரங்களிலிருந்தும் நேரடியாக நமக்குக் கிடைக்கின்றன. அதனாலேயே, அதை இயற்கை உரம் என்று அழுத்தியும் சொல்கிறார்கள். ஆனால் இரசாயனம் என்று பார்த்தால், இயற்கை உரமும், செயற்கை உரமும் ஏதோவொரு வகை வேதியியல் மூலக்கூறுகளைக் கொண்டதாகவே இருக்கும். உடல் நலம் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு, சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும்படியாக, இயற்கை, இரசாயனம் என்று பிரித்துச் சொல்லப்பட்டாலும், அவை அனைத்துமே இரசாயனங்கள்தான், அத்துடன் இயற்கையிலிருந்து பெறப்படுபவைதான், ஆனால் நாம் இரசாயனத்தின் தலையில் பழியைப் போட்டுவிடுகிறோம்.
நாம் புரிந்துகொள்ள வேண்டியது இதுதான். எதையும் அளவோடு பயன்படுத்துவதுதான் சிறந்த வழி.
“அளவோடு உட்கொள்ளும் விசமும் மருந்துதான்
அதிகமாக உட்கொள்ளும் மருந்தும் விசம்தான்”
-ராஜ்சிவா-