உங்கள் குழந்தைகளோடு நீங்கள்


குழந்தைகளுடனான பெற்றோரின் இங்கிதமான உறவுகள் அவர்களது எதிர்கால ஆளுமையில் நேரடியான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. குழந்தையின் ஆளுமையை வடிவமைப்பதில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான உறவாடல்கள் முக்கியமானவை. மிகக் குறிப்பாக குழந்தைகளுடனான ஆரோக்கியமான உரையாடல்கள் இன்றியமையாதவை.
குழந்தைகளுடனான உரையாடல்கள் அவர்களில் தன்னியல்பான அன்புத் தேவையை பெருமளவு பூர்த்தி செய்கிறது. தனிமை, மன இறுக்கம் போன்றவற்றை நீக்குவதோடு, மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கும் உதவுகின்றது.
பிள்ளைகளின் எதிர்பார்ப்புக்களை பெற்றோர் அறிந்துகொள்ளவும் அவர்களை சாதகமான மன எழுச்சிகளோடு (Positive Emotion) மகிழ்ச்சி, தன்னம்பிக்கை, மனஉறுதி - வளரவும், வளர்க்கவும் துணை செய்கின்றது. உரையாடல்கள் வெறும் உரையாடல்களுக்காக அன்றி குழந்தைகளின் அறிவு, மொழி, சமூக வளர்ச்சிக்கு பெருமளவு பங்காற்றுவதாக குழந்தை உளவியலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் உறுதி செய்கின்றனர்.
மிகவும் பரபரப்பான இன்றைய வாழ்க்கைச் சூழலில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான இணைப்பும் நெருக்கமும் பெருமளவு தளர்ந்து போயுள்ளது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புக்கள், பரஸ்பரம் அறியப்படுவதில்லை அல்லது புரிந்துகொள்ளப்படுவதில்லை. இது எல்லா குடும்பங்களிலும் ஒரு பொதுப் பிரச்சினைதான். ஆயினும், பெற்றோர் குழந்தைகளுடன் ஆற அமர அமர்ந்து சிறிது நேரம் அவர்களுடன் உரையாடல்களில் ஈடுபடும்போது பல்வேறு அம்சங்களைப் பெற்றோர் புரிந்துகொள்வதற்கும் குழந்தைகள் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வழி ஏற்படுகின்றது.
அன்பை வெளிக்காட்டுவதற்கான வழிகள் பல. தலையைத் தடவுதல், பாராட்டுதல், முத்தமிடல், கட்டியணைத்தல், சேர்ந்து விளையாடுதல் எனும் இந்த நீண்ட வரிசையில் உரையாடல் மிகத் தாக்கமுள்ள ஒரு வழியாகும். மொழி வளர்ச்சியை அது வேகப்படுத்துவதோடு, சிந்தனை, நினைவாற்றல், விளங்கும் திறன் போன்ற அறிவுப் பண்புகளையும் துரிதப்படுத்துகின்றது.
வயது ஒன்றிலிருந்து ஆறு வரை உள்ள பிள்ளைகள் புதிய விஷயங்களைத் தேடுவதிலும் அவற்றை அறிந்துகொள்வதிலும் தீவிர ஆர்வம் கொண்டிருப்பர். இதனால் அவர்களிடம் அநேகமான கேள்விகள் இருக்கும். அவற்றை பெற்றோரிடம் கேட்பதற்கு முனைவர். குழந்தைகள் என்பதனால் கேள்வி கேட்பதற்கு ஏற்ற தருணங்களை அவர்கள் பார்த்திருப்பதில்லை. பெற்றோரின் பார்வையில் பொருத்தமற்ற நேரங்களிலும் “அனாவசியமான கேள்விகளை” அவர்கள் கேட்கலாம். அவை பெற்றோருக்குத்தான் அனாவசியமானவை.
குழந்தைகளைப் பொறுத்தமட்டில், உடனடியாகப் பதில் காண வேண்டிய, ஆர்வம் நிறைந்த, எதிர்பார்ப்புக் கூடிய கேள்விகள் அவை. பெற்றோருடன் உரையாட வரும் பிள்ளைகளை எந்தச் சூழ்நிலையிலும் புன்முறுவலோடு ஏற்று பதில் தருவதுதான் நல்ல பெற்றோரின் பண்பாகும். தனது பரபரப்பான வேலைப் பளு, வேறுபட்ட மனோநிலை, உடற் சோர்வு என்பவற்றை பெற்றோர் முன்னிறுத்துவதைத் தவிர்த்துத்தான் ஆக வேண்டும்.
ஆறு வயதுக்குப் பின்னர் கற்பனைகளும் சிந்தனைகளும் புதிர்களை அவிழ்க்கும் ஆர்வமும் பிரச்சினையைத் தீர்க்கும் அக்கறையும் குழந்தைகளிடம் அதிகரிக்கும். இதை ஒட்டிய உரையாடல்களுக்கு பெற்றோர் அதீத முக்கியத்துவம் வழங்க வேண்டும். வகுப்பறை நிகழ்வுகளை விசாரித்தல், நண்பர்களுடனான தொடர்புகளைக் கேட்டறிதல், சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்தல், ஆர்வமூட்டக் கூடிய கதைகளைச் சொல்லல் என உரையாடல்களுக்கான உத்திகள் பல.
பெற்றோர் முகம் கோணாமல் பிள்ளைகளுடன் உரையாற்றும் வாய்ப்புக்களை அதிகரிக்க வேண்டும்.
ரவூஃப்