நேசிக்கத் தகுதியானவர் திப்பு சுல்தான்!

Tippoo Saib
அந்தப்புரம் இல்லை. அழகிகளோடு சல்லாபம் இல்லை. ஆடம்பரம் இல்லை. கோட்டை கோட்டையாக கட்டி தன் பெயர் பொறிக்கவில்லை.
இலக்கு ஒன்றே!
ஆங்கிலேயனாக இருந்தாலும் யாராக இருந்தாலும் சர்வாதிகாரத்துக்கு முன் மண்டியிடாத மக்கள் நலம் ஒன்றே!
அவர் ஆட்சியில் இருந்த இருபது வருடத்தில் 18 வருடங்கள் போர்களத்திலேயே கழித்தார். “ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்” என்று அரசவையிலேயே சூளுரைத்தவர். இந்திய மண்ணில் உண்மையான ஜனநாயக மதச்சார்பற்ற ஆட்சியை கட்டியெழுப்பி நடைமுறைப்படுத்திக்காட்டிய அரசர். ஆங்கிலேயருக்கு எதிரான நான்காவது மைசூர் போரிலும் படைகளோடு பயணித்து சிப்பாய்களோடு ஒரு சிப்பாயாக களமாடி வீரத்துக்கு எடுத்துக்காட்டாய் வாழ்பவர். 90 சதவீதம் ஹிந்துக்களும், 10 சதவீத முஸ்லீம்களுமே வாழ்ந்த மைசூர் ராஜ்ஜியத்தின் அரியணையிலிருந்து இந்தியாவின் பல பகுதிகளை ஆட்சி செய்தவர், அவர்தான் திப்பு சுல்தான்.
திப்பு சுல்தானுக்கு ‘நசீப் உத்தௌலா’ என்ற ஒரு பட்டம் இருக்கிறது. நசீப் உத்தௌலா என்றால் நாட்டின் அதிர்ஷ்டம் என்று பொருள். ஆம், தாய்த் திருநாட்டின் அதிர்ஷ்டமாகத் திகழ்ந்தவர்தான் திப்பு. 1784இல் நடந்த போரில் ஆங்கிலப் படையின் தளபதி உட்பட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்திய மன்னர் ஒருவரிடம் மண்டியிட்ட இந்த அவமானம்தான் ஆங்கிலேயர்களுக்கு திப்பு சுல்தானை நினைத்தாலே நடுக்கத்தை தந்தது.
“பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல!” என்ற வசனத்துக்கு உண்மையில் பொருத்தமானவர். இந்தியாவை ஆட்டுவித்த கிழக்கிந்திய கம்பெனி குலை நடுங்கி அதிர்ந்தது “திப்பு சுல்தான்” என்ற பெயருக்குத்தான். இன்றும் பலருக்கு திப்பு சுல்தான் என்றாலே அதிரத்தான் செய்கிறது.
1782 டிசம்பரில்,  அவர் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. அவர் போர்க்கோலம் கொண்டு களம் கண்ட வயது 16. 1767 இல் வாணியம்பாடியில் ஆங்கிலேயரைத் தோற்கடித்து தனது முதல் வெற்றியை பதிவு செய்த போது அவரது வயது 17. எந்த சர்வாதிகாரத்துக்கும் அடங்காமல் சுதந்திரத்தையே தனது சுவாசமாகக் கொண்டு வாழ்ந்தவர் திப்பு.
தென்னிந்தியாவில் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு. தீரன் சின்னமலையோடு கை கோர்த்து ஆங்கிலேயருக்கு எதிராக களம் கண்டவர்.
மூன்றாவது மைசூர் போரில் திருவிதாங்கூர் மன்னன், ஐதராபாத் நிஜாம், ஆற்காட்டு நவாப், தொண்டைமான், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் என மதப் பாகுபாடு இல்லாமல் சோரம்போன அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.
இந்திய மண்ணின் துரோகிகளையும், எதிரிகளையும் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. சீரங்கப்பட்டினம் கோட்டையை 30 நாட்களுக்கும் மேல் எதிரிகள் முற்றுகை இட்டபோதிலும், ஆங்கிலேய அதிகாரி மன்றோ சொல்வது போல் “எங்களால் கோட்டையை ரசிக்க முடிந்ததே தவிர உள்ளே செல்ல வழியே கிடைக்கவில்லை.” எல்லா விதத்திலும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் திப்பு.
“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல திப்பு. மற்ற மன்னர்களுக்கு இவன் முன்னோடியாக மாறிவிடுவானோ என அஞ்சுகிறேன். ஆனால், நம்முடைய அதிர்ஷ்டம் மற்ற மன்னர்கள் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக இருப்பதுதான்” என்று 1798இல் கிழக்கிந்திய கம்பெனி தலைமைக்குக் கடிதம் எழுதினான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.
போர் செய்து திப்பு சுல்தானை வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியைக் கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி திப்பு சுல்தானின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் ‘தைரியமாக’ திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799இல் தலைமைக்குத் தெரிவித்தான் வெல்லெஸ்லி.
திப்புவின் இறுதிப்போர், ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த எட்டப்பன் வேலை காரணமாக கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த அரண் வீழ்ந்தது. திப்பு சுல்தானின் மரணத்திற்குப் பின்னர்தான் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் மேலும் 150 வருடங்கள் நிலைபெற்றது.
திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, ஆங்கிலேயர்கள் அதுவரைக் கண்டதில்லை. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.
“தனி மனிதர்கள், இராணுவம், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை. அனைவர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது. வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கும் வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத துடிப்பான அரசாக இது இருக்கிறது” என்று திப்புவின் ஆட்சி குறித்து தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தின் ஒரு பகுதிதான் இது.
கப்பல் கட்டும் தொழில்நுட்பம்,முகலாயர்களின் ஆட்சியில் இருந்து மாறுபட்ட நிர்வாகம்,இடைத்தரகர்கள் இல்லாத நிலவரி விதிப்பு என இவரின் ஆட்சியின் நிர்வாகப்பாடங்கள் ஏராளம். அத்தோடு நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற திட்டத்தையும் செயல்படுத்தினார் அவர்.
இன்று தமிழகம் வேண்டி விரும்பி கேட்கும் மது விலக்கை அமுல் படுத்தியவர். ‘யுத்தத்தைப் போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது ஒருபோதும் வன்முறை நடத்தாதீர்கள். பெண்களைக் கௌரவமாக நடத்துங்கள். பிடிபட்ட கைதிகளின் மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்’ என்று, தன் ராணுவத்துக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்தவர்.
ஆங்கிலேய காலனியாதிக்கத்தை எதிர்த்து நிற்க  முறையான பயிற்சியும், நவீன ஆயுதங்களும் கொண்ட ஒரு படை தேவை என்பதை உணர்ந்த திப்பு அந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ள புதியகண்டுபிடிப்புகளை உருவாக்க முனைந்தார்.
திப்புவின் தந்தை ஹைதர் அலி படைத்தலைவராக இருந்த காலத்திலேயே 50 பேர் கொண்ட ஒரு ஏவுகணைப் பிரிவுக்கு அவர் தலைவராக இருந்தார். ஹைதர் அலி காலத்தில் மூங்கில்களால் செய்யப்பட்ட இறக்கைகளை மேம்படுத்திய திப்பு தன் காலத்தில் இரும்பால் செய்யப்பட்ட இறக்கைகள் அமைத்து கூடுதல் திறன் கொண்டதாக மாற்றினார் . அதன் காரணமாக உலகிலேயே போர்க்களத்தில் ஏவுகணையை முதன்முதலில் பயன்படுத்தியவர் என்ற சிறப்பை திப்பு பெற்றுக் கொண்டார். அந்த ஏவுகணை இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை துல்லியமாக சென்று தாக்கும் ஆற்றல் பெற்றதாக இருந்தது. அது பற்றிய ஆவணங்கள் இன்றும் லண்டனில் பத்திரமாக உள்ளன. நான்காம் மைசூர் போரில் திப்பு கொல்லப்பட்டபோது கைப்பற்றப்பட்ட திப்புவின் ஏவுகணைகளை ஆங்கிலேயர்கள் இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று ஆராய்ந்து ஏவுகணைத் தொழில் நுட்பத்தை வளர்த்து மேம்படுத்தி கான்கிரீவ் ராக்கெட்களை உருவாக்கினார்கள்.
திப்புவிடம் இருந்த புதுமையை நோக்கிய பாய்ச்சலும், கற்றுக்கொள்ளும் தாகமும் திப்புவின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகித்தன. 1787 இல், எல்லாத் துறைகளிலும் அறிவை வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை ஃபிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் திருப்புமுனையாக அமைந்த நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோரியிருக்கிறார் திப்பு.
மேலும் வலிமையான நவீன இராணுவத்தை உருவாக்க அரசுக்கான வருவாய் விவசாயம் மூலம்தான் பெற முடியும் என்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டினார்.
இன்றைய நாகரிகமற்ற அரசியல் வாதிகள் போல உள் நாட்டு உற்பத்தி என்று பசப்பு வார்த்தை பேசாமல் 1792 இல் ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு.
திப்புவின் ஆட்சிக் காலத்தில் நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக ஏற்பட்ட சாதி அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் ஆங்கிலேய அதிகாரி புக்கானன்.
1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன: “இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எஜமானாகவே கருதுகிறார்கள்”, “தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எஜமானனைத்தான் ஆதரிப்பார்கள்.”- இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்.
தனது ஆட்சியில் உயர் சாதிகளுக்கு இருந்த சிறப்புச் சலுகைகளை நீக்கி மக்கள் அனைவருக்கும் சமமான சமத்துவ சட்டத்தை வழங்கினார்.
மலபார் பகுதியில் பெண்கள் மேலாடையின்றி இருந்த பழக்கத்தை மாற்றி மானங்காக்க மேலாடை அணியும் பழக்கத்தை உருவாக்கினார்.
இப்போது திப்பு ஜெயந்தி விழாவை எதிர்த்து கலவரம் நடந்த பகுதியான குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்து கொள்ளும் பழக்கத்தையும், தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் போட்டார்.
மைசூரில் நரபலியையும் தடை செய்தார்.
இது போன்ற நிகழ்வுகளாலோ வேறு எதனாலோ திப்புவின் மீது பலர் காழ்ப்புணர்வு கொண்டனர். அதில் ஒருவர் ஹரிப்ரஷாத் சாஸ்திரி என்ற பேராசிரியர் (கல்கத்தா பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியராக பணியாற்றிவர்) “திப்பு சுல்தான் முஸ்லிமாக மாறச் சொல்லி வற்புறுத்தியதால் 3.000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டனர்” என்று அவர் எழுதிய கட்டுக்கதை வங்காளம், அஸ்ஸாம், பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களில் உள்ள பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்தது.
இதைக் கண்ணுற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவரும், ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநராக இருந்தவருமான பி.என். பாண்டே அவர்கள் இச்சம்பவம் பொய்யானது என்பதை எடுத்துக் கூறி இதனை எழுதிய ஹரிப்ரஷாத் சாஸ்திரியிடம் தொடர்பு கொண்டு அவரது கூற்று அவதூறானது என்று நிரூபித்ததோடு பல்கலைக் கழக்கப் பாடத் திட்டத்திலிருந்து அந்தப் புத்தகத்தையே நீக்கச் செய்தார்.
1990 இல் திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்றை தொலைக்காட்சித் தொடராக தயாரிக்க முற்பட்ட சஞ்சய் கான் என்பவருக்கு எதிராக திப்பு சுல்தான் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டனர்.
சஞ்சய் கான் தயாரித்த “ஷிஷ்ஷீக்ஷீபீ ஷீயீ ஜிவீஜீu ஷிuறீtணீஸீ” என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய பிரிமியர் சினிமா ஸ்டூடியோவிற்கு திப்பு சுல்தான் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் தீ வைத்ததன் காரணமாக 1990ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து பலர் காயமடைந்தனர். ‘திப்புவின் வாள்’ என்ற அந்த தொடர் தூர்தர்ஷனில் ‘ஒரு கற்பனைக் கதை’ என்ற குறிப்போடு ஒளிபரப்பாக நிர்ப்பந்திக்கப்பட்டது அவமானம்.
திப்புவின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் சித்தரிப்பது போல திப்பு எந்த மத விரோதியும் அல்ல! மனித குல விரோதியுமல்ல! திப்புவின் தந்தை ஹைதருடைய ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு எதிரான சில நடவடிக்கைகள் நடந்தது உண்மை. ஹைதரை எதிர்த்து தீரன் சின்னமலை களம் கண்டதும் உண்மை. ஆனால் திப்பு அரியணை ஏறிய பின் தீரன் சின்னமலையை நோக்கி நேசக்கரம் நீட்டினார் என்பதும் இருவரும் இணைந்து ஆங்கிலேயரை எதிர்கொண்டனர் என்பதும் வரலாறு கூறும் உண்மை. உண்மையில் திப்பு சுல்தான் மதங்களைக் கடந்து மனிதர்களை நேசித்தார்.
மக்கள் மீது திப்பு செலுத்திய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு அணியாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.
தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன. “நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.”
வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. “விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்” என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?
திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். ‘சதக்’ என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் மாறியது.
காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.
“நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.”
மதம் கடந்து மனித குலத்தை நேசிப்பவர்கள் சமாதானத்தை நேசிப்பவர்கள் நேசிக்கத் தகுதியானவர் திப்பு சுல்தான்.              

தொகுப்பு : இப்னு சிக்கந்தர் பாதுஷா