உலகை உலுக்கிய அய்லானின் மரணம்...

Aylan-Kurdi st-eutychus-com
ஒரு சிறந்த புகைப்படத்தைப் பற்றி தலை சிறந்த புகைப்பட நிபுணர் “ரகுராய்” அவர்கள் கூறியதாவது “மிகவும் வலுவாகவும் மனதை உருக்கும் வகையிலும் இருக்கும் ஓர் உணர்ச்சியின் வெளிப்பாடு, நடந்து முடிந்த ஒரு துயரத்தின் மொத்தக் கதையையும் ஒரே புகைப்படத்தில் சொல்வது போல இருந்தால் அது ஒரு சிறந்த புகைப்படம்” என்றார்!
துருக்கியின் சோஸ் தீவில் கரை ஒதுங்கிய 3 வயதுச் சிறுவன் அய்லானின் மரணத்தை ஒட்டி எடுக்கப்பட்ட புகைப்படம். அது உலகத்தின் மனசாட்சியை உலுக்கியது. ஒரு மோசமான புவி அரசியலில் சிக்கித் தவிக்கும் சிரியா மற்றும் அந்த நாட்டிலிருந்து வெளியேறும் அகதிகளின் அவலங்களைக் கண்டும் காணாமல் செல்கையில் அய்லானின் மரணம் உலகை புரட்டிப் போட்டது. முஸ்லிம்களை தமது நாட்டில் அனுமதித்தால் நாட்டுடைய மதக் கலாச்சாரம் அழிந்து விடும் என்று வெறுப்பு வார்த்தை கூறிய ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் சொந்த நாட்டு மக்களின் வற்புறுத்தலால் அகதிகளுக்கான கெடுபிடியைத் தளர்த்தினார்.
சிரியாவைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக துருக்கி, கிரீஸ் நாடுகளைக் கடந்து மாசிடோனியா, செர்பியா, ஹங்கேரி, ஆஸ்திரியா வழியாக ஜெர்மனியில் அடைக்கலம் தேடுகின்றனர். கி.பி. 2011 இல் தொடங்கி ஏறத்தாழ கடந்த நான்கு ஆண்டுகளில் சிரியா உள் நாட்டுப் போரில் 4 லட்சம் பேர் உயிரிழந்து விட்டதாகவும், 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக சிரியாவிலிருந்து இடம்பெயர்ந்து விட்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு ஆட்சியாளர் நடுநிலை தவறும்போதும், தன் நாட்டு மக்களை மதம் சார்ந்தும், அதன் உட்பிரிவுகள் சார்ந்தும் பார்ப்பதும், ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதும், தன் நாட்டில் வாழும் சிறுபான்மையினரை துன்புறுத்துவதற்கும் அவர்களுடைய உடமைகளை சேதப்படுத்துவதற்கும், தான் சார்ந்த மதத்தை பயன்படுத்திக் கொள்வதும், அதற்கு ஆதரவாக தனக்குத் தோதான அண்டை நாடுகளை தனது தவறை மறைத்து ராஜ தந்திர பேச்சின் மூலம் தனக்கு ஆதரவு தர வைத்து ஆட்சி நடத்தும் போதுதான் இத்தகைய நிகழ்வுகள் நடக்கின்றன. இத்தகைய கீழ்த்தரமான மதம் மற்றும் பிரிவு அரசியல் செய்யும் ஆட்சியாளர்களுக்கு சிரியா ஒரு உதாரணம்.
அமெரிக்க ஏகாதிபத்தியமும் அரபு நாடுகளும் :
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அரபு நாடுகள் என்பது ஒரு கால்பந்தாட்டப் போட்டி போல! அரபு நாடுகளை சன்னி, ஷியா என்று இரு வேறு கூறுகளாக பிரித்து அந்த இரண்டு அணிக்கும் தலைமையேற்கும் அமெரிக்கா.
சில நேரத்தில் எதிரணிக்கு கோல் போடும். சில நேரம் தனக்கே சேம் சைடு கோல் போட்டுக் கொள்ளும். இந்த இரண்டிலுமே லாபம் அமெரிக்காவுக்கே! உதாரணமாக சன்னிப் பிரிவு ஆட்சி செய்கிற சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு ஆயுதம் வழங்கி சிரியாவுக்கு எதிரணியில் நிறுத்தும்! மறுபுறம் ஈராக்கில் சன்னிப் பிரிவைச் சேர்ந்த சதாம் ஹுஸைனை அங்குள்ள குர்துகளுக்கும், ஷியாக்களுக்கும் எதிரானவர் என்று கூறி அந்த நாட்டில் பிரிவினை ஏற்படுத்தி ஈராக்கை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து சதாமை தூக்கிலிட்டு விட்டு தனது அத்துமீறலுக்கு நியாயம் கற்பிக்கும். ஈராக்கின் மீது படையெடுதத்தற்கு மன்னிப்புக் கூட கேட்கும்.
ஆஃப்கானிஸ்தானில் உஸாமா பின் லேடனை வைத்து சோவியத் யூனியனுக்கு எதிராக கொம்பு சீவி விட்டு உதவி செய்த அமெரிக்கா தனது குள்ளநரித்தனத்தை எதிர்த்தார் என்பதற்காக ஆஃப்கானிஸ்தானுக்குள் புகுந்து நாட்டையே களவாடி தனக்கு கைப்பாவயான ஒரு அரசை அமைத்துக் கொண்டது.
ஆக “அமெரிக்கா என்றுமே நியாயத்தின் பக்கமே நிற்கும். மனித உரிமை மீறலை என்றுமே அனுமதிக்காது, என்கிற கேட்டுக் கேட்டு புளித்துப்போன ஒரே பல்லவியை மீண்டும் மீண்டும் உண்மை போல ஓலமிடும்.” ஆனால் அதன் பின்னால் இருக்கும் மதம் மற்றும் ஆயுத வியாபார அரசியல் நுட்பமானது. அவ்வளவு எளிதில் கண்டெடுக்க முடியாத அமெரிக்காவின் ராஜ தந்திரம் அது.
அதிகார வெறி கொண்டவர்களுக்கு மக்களை பிரித்தாள காரணமாக அமைவது மக்கள் எளிதாக நம்பிக்கை கொள்ளும் மத அரசியல்!
அப்படித்தான் ஷியாவையும் சன்னி பிரிவையும் எதிரெதிர் துருவத்தில் வைத்து சண்டையிட வைத்து பார்வையாளராக வேடிக்கை பார்க்கிறது அமெரிக்கா!
சிரியாவை ஆளும் ஆஸாத்தும், ஈராக்கை ஆண்ட சதாம் ஹுஸைனும், இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு காரணமாக சொல்லப்படும் உஸாமாவும் தவறு செய்திருந்ததாக உண்மையாகவே அமெரிக்கா நம்பினால் என்ன செய்திருக்க வேண்டும்.
செய்த குற்றத்திற்காக ஐக்கிய நாடுகள் சபையில் அவர்களை ஒப்படைத்து, சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி இருக்க வேண்டும். குற்றத்தை நிரூபித்து தண்டனை வழங்கி இருக்க வேண்டும். (ஆனால் அமெரிக்கா செய்தது அடாவடித்தனம்.)
அதை விடுத்து அமெரிக்கா செய்யும் நரித்தனம் என்ன? தனக்கு எதிரணியில் நிற்கும் நாடுகளுக்கும் மேலும் இயற்கை வளங்களை களவாடும் போது அதை எதிர்க்கும் நாடுகளுக்கும் எதிராக பொய்களை அவிழ்த்து விட்டு அண்டை நாடுகளிடம் ஆயுதம் கொடுத்து சண்டையிடச் செய்வதும், உள் நாட்டிலேயே ஆட்சிக்கெதிரான புரட்சியைத் தூண்டி விட்டு அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து தன் ஆயுத வியாபாரத்தை தக்கவைத்துக் கொள்வதும் எவ்வகையில் நியாயம்? இதைப் புரிந்து கொள்ளும் நிலையில் அரபு நாடுகள் இல்லை என்பது மிகப்பெரும் கைசேதம்.
குறிப்பாக இராணுவத்திற்காக ஒதுக்கப்படும் தொகையில் முன்னணியில் இருப்பது அமெரிக்கா. தொகை ஆண்டொன்றுக்கு 61.870 கோடி டாலர். இது அந்த நாட்டு ஜிடிபியில் 3.8%. இது இந்தியா செலவிடும் தொகையை விட 12 மடங்கு அதிகம். அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதி ஆண்டொன்றுக்கு 620 கோடி டாலர். ஆயுத இறக்குமதி ஏற்றுமதியை விட 10 மடங்கு அதிகம் இதுவே அமெரிக்காவின் யதார்த்தமான உண்மையாகும்.
மத்திய கிழக்கு நாடுகளும் சவால்களும் :
அரேபிய தீபகற்பத்தில் ஆகப் பெரும்பான்மையான வளம் கச்சா எண்ணெய்தான் என்றாலும் அதற்கான வருவாயை மட்டும் வைத்துக் கொண்டு நாட்டின் இயற்கை மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை கட்டியமைக்க முடியாது. உதாரணமாக இராக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அந்நாட்டின் வெப்பம் 120டிகிரியாக பதிவாகி இருந்தது.
இத்தகைய மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் விஷயத்தில் இராக் பிரதமர் ஹைதர் அலி அபாதி கண்துடைப்புக்காக துணை அதிபர்களை பதவியிலிருந்து நீக்கி விட்டு துணைப் பிரதமர் அலுவலகத்தை மூடி தனது பணியை முடித்துக் கொண்டார்.
ஈரானில் 2014 இல் அதிபராக பதவியேற்ற அதிபர் ஹாஸன் ரஹானியின் முதல் அமைச்சரவை முடிவு அணுக்கொள்கை பற்றியது அல்ல! மாறாக நீர் நிலைகளை எப்படி பாதுகாப்பது என்பது பற்றித்தான் முதலில் முடிவெடுக்கப்பட்டது. ஈரானின் பெரிய உப்பு நீர் ஏரிகளில் ஒன்றான ஓரமியா ஏரி நாட்டில் ஏற்பட்ட தட்பவெப்ப நிலை மாற்றத்தின் காரணத்தால் கடந்த பத்தாண்டுகளில் 80% அளவில் நீராதாரத்தை இழந்து சுருங்கி விட்டது.
சவூதி அரேபியாவின் மக்கள் தொகை 1975 இல் இருந்ததைப் போல இப்போது மூன்று மடங்கு அதிகரித்து விட்டது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஒரு புறம். மேலும் நடப்பாண்டில் 130 பில்லியன் டாலர் நிதிப்பற்றாக்குறை ஏற்படும் என்று சர்வதேச நிதியம் கூறுகிறது.
சிரியா, துருக்கி, ஏமன் ஆகிய நாடுகளும் உள்நாட்டுப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றன. இதற்குப் பின்னணியில் அமெரிக்கா, ஐரோப்பாவின் ஏகாதிபத்திய சூழ்ச்சி மிகப் பெரும் காரணம்.
கச்சா எண்ணெய் பொருட்களின் விலையை அமெரிக்காவே நிர்ணயம் செய்வது, வளர்ந்த நாடுகள் என்கிற போர்வையில் அமெரிக்காவும், ஐரோப்பாவும் உபயோகப்படுத்திய மின் சாதனங்களை கடலில் கொட்டுவது போன்றவை இன்னும் பெரும் சவால்களாக விளங்குகின்றன.
வளர்ந்து வரும் நாடுகள் தற்போது எதிர்கொள்ளும் அத்தனை சவால்களையும் அரபுநாடுகளும் சந்திக்கின்றன. அதேவேளை உள்நாட்டில் ஏற்படுகின்ற தாக்கத்தினாலும் மற்றும் சமூக மாற்றத்தை வேண்டியும் மக்கள் போராட துவங்கியுள்ளனர்.
அது போன்ற போராட்டங்கள் பல வடிவங்களில் நடைபெறுகின்றன.
உள் நாட்டுச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், ஆயுதப் போராட்டம் போன்றவற்றால் மத்திய கிழக்கு நாடுகளில் அரசுகளின் ஸ்திரத்தன்மை சீர் குலைந்து கிடக்கிறது.
ஆயுதப் போராட்டங்கள் வழியாக பலன்களை விட ஆபத்துக்களே அதிகள் விளைகின்றன.
அரசுகளுக்கும் ஆயுதம் ஏந்தி போராடுபவர்களுக்கும் இடையே சிக்கி தனது உறவுகள், உடமைகள் உட்பட கடைசியில் உயிரையும் விடுவது பொதுமக்கள் தான்! அரசுகளுக்கும், ஆயுதக் குழுக்களுக்கும், ஆயுதங்களை சப்ளை செய்யும் அமெரிக்க ஐரோப்பிய பணவெறி அதிகார வெறி பிடித்தவர்களுக்கும் “பொதுமக்களின் உயிர் மயிரை விட கேவலமாக இருக்கிறது.” எல்லோரையும் சாகடித்துவிட்டு யாரை ஆட்சி செய்யப் போகிறார்கள் இந்த மரண வியாபாரிகள்?
“நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளை மதம் இன அடிப்படையில் பார்க்காமல் அது தனது நாட்டின் குடிமக்களது உரிமை மற்றும் அடிப்படை தேவை என்பதை உணர வேண்டும். பிரச்சனைகளை ஒடுக்குவதை விட அதை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளைக் கண்டறிந்து அதை சரி செய்வது ஆட்சியாளர்களின் கடமை.” நியாயமான கோரிக்கைகளை மறுத்து குரல் வளையை நெறிக்கும் போதுதான் அசாதாரணமான நிகழ்வுகள் நடந்தேறுகிறது.
அய்லானின் மரணம் உணர்த்தும் செய்தி!
14 கோடியே 90 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இந்த பூமியில் 3 வயதே ஆன பிஞ்சுக் குழந்தை அய்லானுக்கும் அய்லானைப் போன்ற லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு இடமில்லாமல் போனது யாரால்?
இது போன்ற மனதை அறுக்கும் அய்லான்களின் மரணத்தின் மூலம் அரசுகள், ஆட்சியாளார்கள், அதிகாரவெறி பிடித்தவர்கள் தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்திருக்கிறார்களா? என்றால் இல்லை!!!
வரலாறுகள் பதிவு செய்திருப்பது போல் அய்லான்களின் மண்ணறைகள் மேல் தங்கள் அதிகார பீடத்தை அமைக்க உயிர்களை துச்சமாக மதித்து மீண்டும் மீண்டும் கொலை நிகழ்ச்சிகளை அயராது அரங்கேற்றம் செய்து வருகின்றனர்.
அரசுகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும், ஆயுதக்குழுக்களுக்கும், அதிகார வெறிகொண்டவர்களுக்கும் இதயம் இருக்க வேண்டிய இடத்தில் இரும்புகள் இருப்பது வேதனைதான்.
ஆனாலும் தங்கள் இதயங்களில் ஈரம் கொண்டு மனிதத்தை, அமைதியை, சமாதானத்தை, சக வாழ்வை நேசித்து அய்லான்களுக்காக கண்ணீர் வடிக்கும் மனிதர்கள் சில ஆட்சியாளர்களை அமைதியை நோக்கி இழுத்து வருகின்றனர்.
பல ஆட்சியாளர்கள் ஏதோ ஒரு வகையில் நாட்டு மக்களை அமைதியின்மையை நோக்கி நகர்த்துகின்றனர்.
“அணு ஆயுதம்” இருப்பு பற்றிய “ஸ்டாக் ஹோம் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்” என்கிற அமைப்பு செய்த ஆய்வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் இந்தியாவில் கடந்த ஆண்டு 90 லிருந்து இந்த ஆண்டு 110 ஆகவும், பாகிஸ்தானில் 100 லிருந்து 120 ஆகவும் அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நேரத்தில் இங்கு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியா போன்ற பெரும்பான்மையான நாடுகளில் அடித்தட்டு, விளிம்பு நிலை மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக செலவிடும் நிதியை குறைத்து விட்டு நாட்டின் பாதுகாப்பு என்ற போர்வையில் அதிகாரத்தை தக்கவைப்பதற்காக நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டும் ஆட்சியாளர்கள் இருக்கும் வரையில் அய்லான்களின் மரணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அதனால்தானோ என்னவோ இந்த உலகத்தையும் ஆட்சியாளர்களையும் பார்க்கப் பிடிக்காத அயலான் தனது மரண நேரத்தில் கூட தன்னுடைய முகத்தை மண்ணில் புதைத்துக் கொண்டான்.
சர்வதேச சமூகம் மௌன சாட்சியாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இது அய்லான்களின் மரணத்தை மிஞ்சிய துக்ககரமான செய்தி ...
பா.செ. சிராஜுத்தீன்.