செங்கிஸ்கான்

sengis k

இஸ்லாமிய அழைப்பாளர், சமூக செயல்பாட்டாளர், பேச்சாளர், சமீப காலங்களில் தனது எழுத்துக்களால் நமது மனம் கவர்ந்தவர் இப்படி பல தளங்களில் இயங்கி வந்த சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் 1 – 01 – 2016 அன்று மரணமடைந்தார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
சுமார் இருபது ஆண்டுகளாக சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். ஆரம்ப காலங்களில் சில இஸ்லாமிய அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்து பணியாற்றியவர். பின்பு தனது முக்கியப் பணியாக முழு நேரப்பணியாக இஸ்லாமிய அழைப்பு பணியை கையில் எடுத்தார். அழைப்பு பணிகளில் சிலருக்கு முன்னோடிகள் பலர் தமிழகத்தில் உள்ளனர் என்ற போதிலும் இவர் அதில் சில எளிமைகளையும் புதுமைகளையும் (தெருமுனை தஃவா, டேபிள் தஃவா) ஏற்படுத்தினார்.
இன்றைய இளைஞர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து அவர்கள் அதிகமாக செலவிடும் முகநூலில் நுழைந்து அவர்களை வென்றெடுத்து இளைஞர்களையும் அழைப்பு பணியின் பால் திருப்பினார். இயக்க காட்சி பேதமின்றி அனைவரிடமும் சகோதரப் பாசத்தோடு பழகுவது, அழைப்பு பணிக்காக யார் அழைத்தாலும் அது சிறிய நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட சிரமம் பார்க்காமல் செல்வது, அழைப்புப் பணியில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து அலைபேசியிலோ, வலை தளங்கள் வழியாகவோ யார் தொடர்பு கொண்டாலும் நேரம் ஒதுக்கி அதற்கு பதில் சொல்வது என்பது போன்ற நற்குணங்களை கொண்டிருந்தார். அவரது பணிகளில் இன்னொரு முக்கியமான பணி, தனது வாழ்நாளில் பெரும் பகுதியை இறைமறுப்பாளராக (பெரியாரிஸ்ட்) வாழ்ந்து இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட “பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா எதிர்த்தாரா?” என்ற ஆவனப்படத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு இவருக்கு உண்டு. நம்மோடு சேர்ந்து கல்விப் பணிகளிலும் தன் பங்கை கொடுத்திருக்கிறார். ஓரளவு தன்னிறைவு பெற்ற வணிகராக அவர் இருந்த போதும் தனது வருமானத்தில் பெரும் பகுதியை சமூக பணிகளுக்கே செலவிட்டது அவரது மறைவிற்கு பிறகு தெரிய வந்தது. ஆம் அவர் ஒரு எளிமையான வீட்டில்தான் வாழ்ந்திருக்கிறார்.
அவரது நற்பண்புகளும், அவர் கையில் எடுத்த பணியுமே, அவரை அமைப்பு, கொள்கை வேறுபாடின்றி அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்தது. அவரது இறுதி நிகழ்விற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்களே இதற்கு சாட்சி.
அவரது மறுமை வாழ்விற்காகவும் அவரின் குடும்பத்தாரின் பொறுமைக்காகவும் இருகரம் ஏந்தி வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.
கே. ஃபைசல் அஹ்மது
விடிய விடிய பீப் பாடலோடு குத்தாட்டம் !
விடியும் வரை பீர் பாட்டிலோடு கொண்டாட்டம்!
கடந்த வாரம் பீப் பாடலுக்கு கொதித்த சென்னையா இது ?
கடந்த வாரம் வெள்ளத்தில் தத்தளித்த சென்னையா இது?
மனசாட்சி கொண்ட மனிதர்களை கண்டோம் வெள்ளத்தில்
மனசாட்சியற்ற மனிதர்களை கண்டோம் புத்தாண்டில் !
சகலத்தையும் இழந்து நிற்கும் சக மனிதன் குறித்த
கவலையின்றி எப்படி கும்மாளம் போட முடிகிறது ?

அறிவுக்கு பொருத்தமில்லாத,
பொருளாதார விரயம் செய்கின்ற
இந்திய கலாசாரத்திற்கு சம்மந்தமில்லாத
ஆண்டுக் கொண்டாட்டம் கும்மாளங்களில் இருந்து
எங்களைக் காத்த இறைவனுக்கே புகழனைத்தும்!
முஸ்லிமல்லாத சகோதார்களே சிந்தியுங்கள் !
உங்களை வெள்ளத்தில் இருந்து காத்த
உங்களின் பசிக்கு உணவளித்த
உங்களுக்கு நிவாரப் பொருட்களை வழங்கிய
உங்களின் வீதிகளில் தூய்மைப்பணி செய்த
எந்த முஸ்லிமையும் இந்தப் புத்தாண்டு
கொண்டாட்டங்களில் பார்க்க முடியாது !
ஏன் எனில்
பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதையே
படைத்தவன் எங்களுக்கு கொண்டாட்டமாக
ஆக்கியுள்ளதை எங்களின் இரு பெருநாளிலும்
நீங்கள் கண்கூடாகக் காணலாம் !
குடிப்பதும் வெடிப்பதும் குத்தாட்டம் போடுவதும்
பண்டிகைகள் இல்லை!அதனால் எந்தப் பயனுமில்லை !
இல்லாதவர்க்கு வழங்குதலும்
இறைவனை வணங்குதலுமே
இஸ்லாம் கூறும் பண்டிகைகள் !
விழாக்களின் பெயரால் வீண்விரயமற்ற
ஒழுக்கமுள்ள, மக்களுக்கு பயனுள்ள
ஒரு சமூகத்தை உருவாக்க வாருங்கள் !

-செங்கிஸ்கான்