மழை வெள்ளமும் மனித உள்ளமும்!

chennai-floods
மழை நீர் வெள்ளமென சென்னையை சூழ்ந்தது. மழைக்கு நிகராக உள்ளத்தில் மதம், சாதி, நிறம், ஊர், பகுதி என அனைத்தையும் கடந்து உதவிக்கரம் நீட்டி மழை வெள்ளத்தை வெட்கப்பட வைத்தன. மழை மட்டுமல்ல அரசும் வெட்கப்பட்டது அதை மறைக்க அரசு சார்பில் உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றி என்று ஒற்றை சொல்லால் மனிதநேய செவையை சம்ன படுத்த முயன்றது. உண்மையில் மழை வந்த நேரம் ஒரு கொதி நிலைக்கு சமூகம் ஆட்பட்டிருந்தது. பிரபலமான ஒரு கட்சித் தலைவர் மாட்டுக்கறி உண்ண விரும்பினால் இந்தியாவில் இருக்க வேண்டும் பாகிஸ்தான் சென்று விடுங்கள் என்று அவர் கூறியதற்கு மறுப்பாக சென்னை சுவர்களில் சுவரொட்டிகள் கண்டனம் தெரிவித்து ஒட்டப்பட்டிருந்தன. மக்கள் இதை பார்க்கும் முன்பு மழை வந்து அனைத்தையும் கிழித்துப் போட்டது. அத்துடன் எந்த மக்களை வெறுக்க வேண்டும் என்று பா.ஜ.க., இந்து முன்னணி கருதியதோ அந்த மக்கள் பிறருக்கு உதவுவதில் முன்னிலை பெற்றனர். ஒவ்வொரு உதவி புரியும் வாகனத்திலும் தொப்பிகள் அணிந்த முஸ்லிம்கள் கட்டாயம் தென்பட்டனர். பல சமயங்களில் பொட்டல சாப்பாடு கூடவே தண்ணீர் பாட்டில்கள் தாராளமாக கேட்டுக் கேட்டுத் தந்தனர். முஸ்லிம்கள் பல அமைப்புகளாக பிரிந்து கிடந்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவரவர் வலுவை காட்டும் வகையில் மக்களுக்கு சேவை புரிவதில் முண்டியடித்தனர் அமைப்புகள் வாழ்க.
இடம் சின்மயா நகர் சதாசிவ ஐயர் அவர் சதாமினி நளினியம்மாள் வீட்டில் முழுவதும் தண்ணீர் அவர்கள் வீட்டு வேலைக்காரி அந்தோனியம்மாள் அந்த இருவருக்கும் மழைக்கால மாற்றாந் தாயாக சோறு சமைத்துத் தந்தார். என் பக்கத்து வீட்டு முஷாரஃப் தன் மனைவியிடம் கவிச்சி சோறு மழை முடியுற வரை ஆக்க வேண்டாம். கீழ் வீட்டுக்காரங்களுக்கும் சேர்த்து சோறு பொங்கு என்று உத்தரவிட்டார். நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு மினி வேனில் சுடச்சுட பிரிஞ்சி சாதம் தொட்டுக் கொள்ள ஊறுகாய் தொக்கு ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி பரிமாறினார்கள். இன்றும் கூட மக்கள் இரவில் அழைத்து சோறு போட்ட பெரம்பூர் பாய்மார்களை மறக்கவில்லை. மறுநாள் காலை கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, பால் பவுடர் என தேவையறிந்து அதே இளைஞர்கள் கொண்டு வந்து தந்தார்கள். அவர்கள் யாரோ யவரோ ஆனால் தேவையறிந்து சேவை செய்த அந்த இளைஞர்கள் ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்ளும்போது அப்துல்லாஹ், ரஃபீக் என்று பெயர் சொன்னதால் மட்டுமே அவர்கள் முஸ்லிம்கள் என்பதை மக்கள் அறிந்தனர்.
ஆனால் மழைக்குப் பின்பு வெள்ளம் வடிந்த பின் அரசியல் கட்சிகள் அடித்த கூத்து தனிக்கதை. மக்களுக்கு வீடு தோறும் டோக்கன் தந்து ஐந்து கிலோ அரிசி தருவதற்கு பெரும் கூட்டத்தைக் கூட்டி ஊடகங்களை அழைத்து காட்சி தந்து மக்களை அன்று முதல் அழவைத்தனர். கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டு பலர் விழுந்தனர். இவர்கள் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு புடவை தருவதாக தண்டோரா போட்டு மக்களை நசுக்கி பதினேழு பேர் சாவதற்கு காரணமானவர்கள். அந்தப் பகுதியில் அதிகாரத்தில் உள்ளவர் அரசு உணவகத்தில் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட உணவை தெரிந்தவர்கள் கையில் ஒப்படைத்து ஒதுங்கிக் கொண்டார். இன்னமும் மக்கள் அவர் மீது சினத்தில் உள்ளனர். அரசு மத்திய அரசிடம் பெற்ற உதவிப் பொருட்கள் தங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகின்றனர். ஆனால் இன்று வரை உதவி இல்லை. வெள்ளம் வீட்டை சூழ்ந்த போது உணவுப் பொருட்கள் முதலில் சேதமானது. மக்கள் ரகரகமாக அரிசி வாங்கி சமைத்தவர்கள் வெள்ளக் காலத்தில் கிடைத்த அரிசியை பயன்படுத்த மாறிக் கொண்டனர். ஆனால் கடைக்காரர்கள் அவசிய பண்டங்கள் விலையை அதிரடியாக ஏற்றி விற்றனர். சென்னையில் இந்த அநியாயம் தாராளமாக நடந்தது. இருபது ரூபாய் பால் ஐம்பது ரூபாய்க்கு விற்றது. பத்து ரூபாய் மெழுகுவர்த்தி பதினைந்து ரூபாய்க்கு விற்றது. இவ்வாறு அவசியத் தேவை அனைத்தும் விலைகள் தாறுமாறாக ஏற்றப்பட்டு விற்கப்பட்டன. தங்களோடு சகஜமாக வாழும் சக மனிதர்களுக்கு விலை ஏற்றி விற்கிறோம் என்ற கூச்சம் வியாபாரிகளிடம் இல்லை. இப்படிப்பட்ட மழைக்கால நெருக்கடியில்தான் முஸ்லிம்கள் சோறு, தண்ணீர், வாழைப்பழம், கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, ரொட்டி, பிஸ்கட் என தேவையறிந்து தாராளாமாக உதவி செய்யாவிட்டால் மக்கள் பல கடைகளை உடைத்து பொருட்களை சூரையாடி இருப்பார்கள். தொண்டு நிறுவனங்கள், முஸ்லிம் அமைப்புகள் தனி நபர்கள் மனமுவந்து உதவி செய்த காரணத்தால் சென்னைக்குள் சட்டம் ஒழுங்கை மக்களே நிர்வகித்தனர். காவல்துறை அவசரகால இரப்பர் படகை சில உள்ளூர் இளைஞர்களிடம் உதவிக்காக தந்த போது அவர்கள் அதை உள்ளூர் மக்களிடம் போக்குவரத்து வாகனமாக பயன்படுத்தி பணம் பறித்தனர். பல இளைகர்கள் முகம் தெரியாத மக்களுக்கு ஓடோடி வந்து வந்து உதவினர் அவர்கள் மத்தியில் சின்னத்தனம் கொண்டு சின்மயா நகர் இளைஞர்கள் சிலரின் செயல் நம்மை வெட்கப்பட வைக்கிறது. அதேவேளை சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட முடிச்சூர் தாம்பரம் பகுதியில் சொந்தக் காசில் படகுகளை வாடகைக்குப் பெற்று இருட்டிலும் சேவை செய்த யூனுஸ் இமயமாய் நிற்கிறார்.