கற்கும் முன் நிற்க… அதற்குத் தக…!

Examination hall
பேரா ; SNR ஷவ்கத் அலி, மஸ்லஹி, ANIகல்லூரி – திண்டுக்கல் - 5
மார்ச் – ஏப்ரல் என்றாலே அது இந்திய மாணவர்களுக்கு தேர்வு நேரம். பள்ளிகளும் பள்ளி ஆசிரியர்களும் சுறுசுறுப்பாக இயங்கும் நேரமிது. கூடவே பள்ளி மாணவர்களும் மாணவிகளும்.
தற்போது நடைபெறவிருக்கும் தேர்வு தனக்கான நேரங்களை தாராளமாக வாரி வழங்கிருக்கிறது. அதை அலட்சியமாக கருதாமல் தமக்கு கிடைக்கப் பெற்ற பெரும் வாய்ப்பு இது என்று எண்ணிச் செயல்பட்டால் அவரைப் போல அளவில்லா மதிப்பெண்களை அள்ளிக் குவிப்பவர் வேறுயாருமில்லை எனலாம். அதற்கு முன் விழுந்து விழுந்து மனப்பாடம் செய்வதை முற்றிலும் முறைப்படுத்த வேண்டும். வெற்று மனப்பாடம் உண்மையிலேயே வெற்றி தரும் மனப்பாடம் அல்ல! அப்படியானால் பிறகு எப்படி படிக்க வேண்டும் என்கிறீர்களா? இதோ அதற்கான டிப்ஸ்கள் சில….
திட்டமிடல்:
நாம் செய்யவிருக்கும் எந்த ஒரு காரியத்திற்கும் முதலில் “திட்டவரைவு” ஒன்று அவசியம். இன்று என்ன செய்ய வேண்டும்? நாளை எப்படி செய்ய வேண்டும்? நேற்று என்ன செய்திருக்கிறோம்? என்றெல்லாம் “நமக்கு நாமே திட்டம்” ஒன்றைத் தீட்டி வைத்துக் கொண்டால்தான் நமது படிப்பு, எழுத்து யாவுமே எளிதாகவும் சிறப்பாகவும் அமையும்.
நமது படிப்பையும் நாட்களையும் எப்படி கழிப்பது என்றல்ல, எப்படி பயனுள்ளதாய் மாற்றிக்கொள்ளப் போகிறோம் என்று திட்டமிட வேண்டும். இதை நம் வீட்டிலுள்ள மாதக் காலண்டர் மூலமோ அல்லது இதற்கான “சார்ட் பேப்பர், ஆர்ட் பேப்பர் மூலமோ எழுதி வைத்து செயல்படுத்தலாம்.
நேர நிர்வாகம்:
நேரம் என்பது என்னவோ எல்லோருக்குமே 24 மணிநேரம் என்றுதான் இருக்கிறது. ஆனால் அது சிலருக்கு 4 மணி நேரமாகவும் சிலருக்கு 42 மணி நேரமாகவும் விரிந்தும் சுருங்கியும் செயல்படுகிறது. இதன் மாய மர்மம் வேறு ஒன்றும் இல்லை. அதை மிகச் சரியாக நாம் திட்டமிட்டு நேரத்தை நிர்வாகம் செய்தால் எத்தனை வேலைகள் இருந்தாலும் அது ஒரு சிறு வட்டத்துக்குள் வெகு எளிதாக அடங்கிவிடும். இல்லையெனில் வரிசையற்று, சீர்குலைந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கரைந்து போகும்.
இதற்கு நாம் முதலில் நேரத்தின் அருமையைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். “காலம் பொன் போன்றது, கண் போன்றது’’ என்றெல்லாம் புகழ்ந்தால் மட்டும் போதாது. அதை போற்றிப் பாதுகாக்க வேண்டும். “பகலில் நேரம் போதவில்லையா இரவிலிருந்து அதை திருடிக் கொள்ளுங்கள்” என்ற அல்லாமா இக்பால் அவர்களின் வார்த்தையிலிருந்து நேரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.

முழு ஆர்வம் :
தேர்வு என்பது ஒரு துன்ப காலம் அல்ல. “மகிழ்ச்சி வாசல்களின் ஏணிப் படிகள்”தான் அவை. என்ன செய்வது…? இந்திய நாட்டைப் பொருத்த வரை இப்போதைய நிலையில் நமக்கான வேலை வாய்ப்பை, உயர் கல்வியை தீர்மானிப்பவை நமது மதிப்பெண்களே! எனவே படிப்பில் அதீத கவனம் அவசியமாக இருக்கிறது.
ஆர்வமின்றி செயல்படுத்தப்படும் எந்த ஒன்றுமே பரிபூரணப்படப் போவதுதில்லை, தேர்வும் அப்படித்தான். ஆர்வப்பட்டு எழவேண்டும், எழுதிப் பார்க்க வேண்டும், சொல்லிப் பார்க்க வேண்டும். அதுதான் காலா காலத்திற்கு நிலைத்து நிற்கும். குறிப்பாக வாய்ப்பாடுகளையும் ஃபார்முலாக்களையும் ஆர்வத்தோடும் நேரிய சிந்தனையோடும் படித்தால்தான் ஆழ்மனதில் ஆழமாகப் பதியும், பிறகு அது பாலமாகவும் விரியும்.
முழுநம்பிக்கை :
எவ்வளவு தான் நாம் திட்டமிட்டு, நேரம் நிர்வகித்து, ஆர்வத்துடன் படித்தாலும் நம்மிடம் மிகவும் ஆழமாக இருக்க வேண்டியது தன்னம்பிக்கையெனும் நன்னம்பிக்கையே! நம்மால் முடியும், நம்மால் முடியா(த)து என்று எதுவும் இல்லை, முடியும் என்றால் முடியும் என்று நமக்கு நாமே “நேர்மறைச் சிந்தனைகளை அனுதினமும் வளர்த்து வரவேண்டும். அதுதான் நம்மை வெற்றிப் பாதைக்கு, ஏன் அதன் உச்சிக்கே அழைத்துச் செல்லும்.
இறை நம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கையாக அது இருக்க வேண்டும். இல்லையெனில் பெருமை நம் தலைக் கனத்தை இன்னுமின்னும் அதிகப்படுத்தி விடக்கூடும். பிறகு நாம் படிப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். “பணியைத் தருவது மட்டும் கல்வியல்ல! பணிவைத் தருவது மட்டுமே கல்வி”. அது இறை நம்பிக்கையுடன் தன்னம்பிக்கை இணையும் போதுதான் சாத்தியம் என்பது எவருக்கும் சொல்லித்தெரிய வேண்டிய ஒன்றல்ல!.
சுய பரிசோதனை :
மாணவர்கள் கவனிக்க வேண்டியவற்றுள் மிக முக்கியப் பங்கு வகிப்பது சுய பரிசோதனை என்னும் “ஞாபக மீட்புத் திறன்” தான். சொல்லியோ எழுதியோ பார்க்கும் போதுதான் நமது பாடத்தின் நிலை நமக்கு தெரிய வரும். இவற்றிலிருந்து இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு இருக்கிறது என்று வெகு எளிதாக கணக்கீடு செய்து கொள்ள முடியும்.
தவறுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்வதும் சரியானவைகளை தெரிந்து கொள்ள உதவும் இன்னொரு பகுதிதான் என்பது புத்திசாலிப் பிள்ளைகளுக்கு புரியாத புதிரல்ல! குறிப்பாக வாய்ப்பாடுகளும் ஃபார்முலாக்களும் போட்டுப் போட்டுப் பார்க்கும் போதுதான் சரியாக வரும். பிறகு என்ன – அதிக மதிப்பெண்களை அட்டகாசமாக அள்ளிக்குவித்து விடலாம்…
வேண்டாம் தற்கொலை :
ஒருவேளை நாம் தேர்ச்சி பெற முடியாமலோ அல்லது எதிர் பார்த்ததைவிட குறைந்த மதிப்பெண்ணோ பெற்றதற்காக மனம் உடைந்து தவறான தற்கொலை முடிவுகளுக்கு செல்வது மனிதர்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு அழகல்ல! இழந்த மார்க்கை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இழந்து விட்ட உயிரை பெற்றுக் கொள்ள முடியுமா? தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம் வந்துவிட்ட பிறகு வாழ்ந்து பார்த்தால்தான் என்ன?
கடைசி நொடி முடிவுகள்தான் மனதை மேலோ, கீழோ இழுத்துச் செல்கின்றன. இந்நேரங்களில் இறைவனை, அவனது அருள்களை ஏன் நாம் ஆதரவு வைக்கக் கூடாது? சொல்லப் போனால் அவன் கொடுத்த உயிரை நம் விருப்பத்திற்கு நாம் போக்கிக் கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது ?
தோல்விகளும் அவமாங்களும் ஏமாற்றங்களும் நிரந்தரமற்றவை. அவை சட்டென்று மாறி விடக் கூடிய ஒன்றுதான். இங்கு எந்த ஒன்றுமே நிரந்தரமாக இருப்பது நிரந்தரமல்ல! நிரந்தரமில்லாமல் இருப்பதுதான் நிரந்தரம். எனவே தற்கொலை முடிவு தீர்வைத் தரும் முடிவல்ல! வாழ வைப்பதுதான் கல்வியே தவிர நம்மை வீழ வைப்பதல்ல கல்வி!
வாருங்கள்…
கல்விக் கலைகளைப் போற்றுவோம்!
கல்விக் கொலைகளை மாற்றுவோம்!