இந்தியாவும் நிறவெறியும்

maxresdefault
சமீபத்தில் பெங்களூரில் ஆச்சார்யா கல்லூரியில் படிக்கும் ஒரு தான்சானியா நாட்டு மாணவி வெறி கொண்ட கும்பல் ஒன்றால் துகிலுரிக்கப்பட்டு தாக்கப்பட்டிருக்கிறார்.
ஹெசாரகட்டா பகுதியில் முப்பத்தைந்து வயது கொண்ட அப்பகுதிவாசி ஒருவர் சூடானைச் சேர்ந்த ஒருவர் ஓட்டி வந்த கார் மோதி விபத்துக்குள்ளாகி மரணமடந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல்தான் இவ்வாறு ஒரு கொடூரமான செயலில் ஈடுபட்டிருக்கிறது.
விபத்தைச் செய்தவர் சூடானைச் சேர்ந்தவர். அவருக்கும் தான்சானியா மாணவிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. மேலும் அவர்களிருவரும் வெவ்வேறு தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் இவ்வாறு வெறியாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

முதலில் அந்தப் பெண்ணை துகிலுரித்தவர்கள், பின்னர் தாக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இதைப் பார்க்கப் பொறுக்காமல் தனது டி.ஷர்டை கழட்டி அந்தப் பெண்ணுக்கு கொடுத்த ஒரு இளைஞரையும் தாக்கியிருக்கிறது அந்தக் கும்பல். இவர்களிடமிருந்து தப்பித்து ஒரு அரசுப் பேருந்தில் ஏற முயன்ற அந்தப் பெண்ணை, அந்தப் பேருந்தில் இருந்த பயணிகளும் விரட்டியடித்திருக்கிறார்கள். இந்தக் கொடுமை குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கச் சென்ற அந்தப் பெண்ணிடம் “முதலில் விபத்து செய்தவனை கூட்டிக் கொண்டு வா, பின்னர் நாங்கள் உன் புகாரை எடுத்துக் கொள்கிறோம்” என்று பொறுப்பில்லாமல் பதிலளித்திருக்கிறார்கள்.
மனிதர்களைப் பாகுபடுத்துவது, தாழ்த்துவது, பிற மனிதர்களை மிருகங்களை விட கேவலமாக நடத்துவதில் உலகப் புகழ் பெற்ற நாடு இந்தியநாடு என்பது வரலாறு. வரலாறு முழுக்க மானுடத்தை எந்தந்த வகைகளிலெல்லாம் பிளக்கலாம் என்பதில் மிக நுண்மையான ஆராய்ச்சிகளெல்லாம் செய்யப்பட்டு, அது நிறுவனமயப்பட்டு, வெற்றிகரமாக அசமத்துவம் வேரோடிப் போயிருக்கும் நாடு இந்தியா. நிறம், பால், தொழில், மொழி, உணவு முறை, கலை என வாழ்வியல் சார்ந்த அத்தனை துறைகளிலும் இது மேலானது, இது கீழானது, இது மங்களம், இது அமங்களம், இது புனிதம், இது தீட்டு என்று நுணுக்கமாக ஏற்றத் தாழ்வுகளை வரையறுத்து, இந்திய மனங்களையும் இந்த ஏற்றத் தாழ்வுகளை மனமுவந்து ஏற்றுக் கொள்ளப் பழக்கியிருக்கும் கலாச்சாரத்தைக் கொண்ட நாடு இந்தியா.

இந்த மனங்கள் ஏற்றத் தாழ்வு என்ற நச்சுச் செடிகள் பயிரிடப்படுவதற்காகவே தயார்படுத்தப்பட்ட விளைநிலங்கள். அதனால் இந்தியாவில் இந்த அளவு இனவெறியிருக்கிறதே என்று தாக்கப்பட்ட அந்த மாணவி வேண்டுமானால் ஆச்சரியப்படலாம்; இந்தியர்களான நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இப்படியெல்லாம் நடக்காவிட்டால்தான் நாம் வியப்படைய வேண்டும்.
பெங்களூரில் நடந்த இந்த தாக்குதலை இந்தியாவின் சாதீய பாரம்பரியத்தோடு இனவாதம், நிறவாதம், பெண் ஒடுக்குமுறை, “கும்பல் நீதி” மனப்பான்மை ஆகியவற்றோடு சேர்த்துப் பார்க்க வேண்டும். நாம் பிற மக்களை எவ்வாறு எந்த கண்ணாடி வழியாக பார்க்கிறோம் என்று நாம் ஒவ்வொரும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மும்பையில் ‘மராத்திய இனவாதிகள்’ தமிழர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தினார்கள். ஒப்பீட்டு ரீதியில் ஓரளவுக்கு பரந்த மனப்பான்மையும், மற்ற பிரதேசங்களில் இருந்து வந்த மக்களையும் தங்களுக்குள் உள் வாங்கிக் கொண்டு வளர்ந்த தமிழ்நாட்டிலும் இப்பொழுது தமிழ் இனவெறிப் பேச்சுக்கள் அரசியல் அரங்கில் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. ஆந்திராவில் தமிழர்கள் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டால் கொதிக்கக்கூடிய ‘தமிழ்ப் பற்றாளர்கள்’ வடமாநில இளைஞர்கள் தமிழ்ப் போலீசால் என்கெளன்டர் செய்யப்படும்போது மெளனம் காப்பார்கள். இவ்வாறு இனவெறியும் ‘மற்றமைகளின்’ மீதான வெறுப்பும் இயல்பாகவே பொதுவான மனிதநேய மதிப்பீடுகளுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறது.
கருப்பு என்னும் நிறம்; அழுக்கு, இருள், அறிவீனம், தீமை, அபசகுணம், அசிங்கம் ஆகிய எதிர்மறையான பொருள்களில்தான் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு என்பது சாதியப் படிநிலைகளிலும் அதில் உள்ளார்ந்து இருக்கும் ஏற்றத்தாழ்வுகளிலும் கூட சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்தியப் புராணங்களில் வெற்றியாளர்களான தேவர்கள் வெள்ளை நிறத்தவர்களாகவும் வெல்லப்பட்ட அசுரர்கள் கருப்பு நிறத்தவர்களாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். வெல்லப்பட்ட கருப்பினத்தவர்கள்தான் சாதிய அடுக்குகளிலும் கீழ்நிலையில் இருப்பவர்கள் என்பதையும் நாம் மறந்து விட முடியாது.
தாக்கப்பட்ட அந்த தான்சானியப் பெண் முதலில் துகிலுரிக்கப்பட்டிருக்கிறார். ஒரு பெண்ணை இழிபடுத்துவதற்கும் தண்டிப்பதற்கும் ஒரு ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட கும்பல் கடைசியாக எடுக்கக்கூடிய ஆயுதம் என்பது பெண்ணுடல் மீதான வன்முறைதான். அவளை உச்சபட்சமாக இழிவுபடுத்தும் நோக்கில்தான் அவள் உடைகளை களைந்திருக்கிறது அந்தக்கும்பல். போரிலும் சரி, கலவரங்களிலும் சரி ஒரு பெண்தான் அதிகபட்சமாக பாதிக்கப்படுகிறாள்.
பாரதமாதா என்று இந்த நாட்டை தாய்மை பொங்கப் பேசுபவர்கள்தான் பிறரின் தாய்களை, சகோதரிகளைப் பற்றி நாக் கூசும் வார்த்தைகளை வீசுகிறார்கள். அவர்களிடம் தரங்கெட்ட முறையில் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.
ஒரு தலித் ஆண் தலித் என்ற அடிப்படையில் சாதி சமூகத்தால் பாதிக்கப்பட்டால், ஒரு தலித் பெண் தலித்தாகவும், ஒரு பெண்ணாகவும் இரு கொடுமைக்கு உள்ளாகிறாள். இதனால்தான் மேற்கத்திய நாடுகளின் கல்விக் கூடங்களில் “இனம் மற்றும் பால்” (Race And Gender) குறித்த ஆய்வுகள் மேற்கண்ட இரு பொருள்களையும் இணைத்து ஆய்வு செய்கிறது. அதுவே இந்திய சமூகத்தைப் படிப்பதற்கு இனம் மற்றும் பாலுடன் சாதியையும் அதற்கு கலாச்சார அங்கீகாரம் வழங்கும் மதக்கோட்பாட்டையும் சேர்த்து ஆராய வேண்டும்.
தலித்துகள் 2001இல் டர்பனில் நடைபெற்ற இனவெறிக்கு எதிரான உலக மாநாட்டில் சாதியை ஒரு பிரச்சினையாக எழுப்ப முயன்ற போது இந்திய ஆளும் வர்க்கம் அவர்களைக் கடுமையாகச் சாடியது, சாதி ஒரு உள்நாட்டுப் பிரச்சினை எனச் சொன்னது.
சாதியமும் இனவெறியும் ஒப்பிடத்தக்கவையே. இரு பாகுபாட்டு வடிவங்களுமே மக்களை அவர்களின் மரபு வழி சார்ந்து குறி வைக்கின்றன.
இங்கு இனவாதம், சாதிவெறி, பெண் ஒடுக்குமுறை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டிருக்கின்றன. ஒன்றையொன்று சார்ந்து இயங்குகின்றன. இந்த எல்லா பிற்போக்கு சிந்தனைகளையும் இணைத்து மதவாதம் தற்பொழுது முன் வந்திருக்கிறது. அதனால்தான் பல்கலைக் கழகங்களில் மதவெறியை, சாதியத்தை, இனவெறியை எதிர்க்கும் மாணவர்களும் இவற்றை ஆதரிப்பவர்களும் இரு முகாம்களாக பிரிந்திருக்கிறார்கள்.
இவ்வாறு அத்தனை வகையான பிற்போக்குத்தனங்களின் கூடாரமான ‘இந்துத்துவா’ என்ற ஃபாசிஸ கருத்தியல் வெகுமக்களையும் தொற்றுவதைத்தான் இது போன்ற தாக்குதல்களில் காண்கிறோம்.
இந்த பிற்போக்கு கலாச்சாரம் மக்களை ‘உணர்ச்சிகரமான மடையர் கூட்டமாக்கி’ அழிவு வேலைகளில் ஈடுபட வைக்கிறது. இதற்கு முன்னர் இதே பெங்களூரில் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்கவில்லை என்று ஒரு முஸ்லிம் குடும்பம் திரயரங்கிலிருந்து விரட்டப்பட்டதை நாம் அறிந்திருப்போம். இதையெல்லாம் யாரோ ஒரு இந்துத்துவவாதி முன்னின்று நடத்துவதில்லை. மாறாக இந்த பிற்போக்கு கலாச்சாரம் வெகு மக்களைப் பற்றத் தொடங்கியிருப்பதையே இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன.
இந்தப் பிற்போக்கு கருத்தியல்கள் வெகுமக்கள் கருத்தியலாக மாறும் அபாயத்தைக் காணுகிறோம் நாம். இப்பொழுது இந்த நாட்டின் மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை, சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றில் நம்பிக்கையுள்ள நாம் இந்த ஆபத்தை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.