ஜூம்ஆ ஒரு அழகிய தலைமைத்துவக் கட்டமைப்பு!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

jummah-prayer-wallpapers-slamic-stuff-corner.blogspot.com

சமூகப் புணரமைப்பில் மஸ்ஜிதுகளின் பங்கு குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுவதும்,
குத்பாப் பேருரைகள் தரம் வாய்ந்தவையாக அமைவதை உறுதிசெய்வதும் காலத்தின் கட்டாயமாகும்.
அடிப்படையான சன்மார்க்கக் கடமைகளான தொழுகை ஸகாத்து ஹஜ்ஜு என்பவற்றை கூட்டாக செய்யுமாறு வலியுறுத்தி சமூக வாழ்வின் ஆன்மீக அடித்தளங்களை ஆழமாக இட்டுள்ளது.
நோன்பு தனக்கும் அடியானுக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரம் அதற்கு நானே கூலி வழங்குவேன் என்று எல்லாம் வல்ல அல்லாஹ் குறிப்பிட்டிருந்தாலும் அதன் கால நேர வரையறைகள் இப்தார் சஹர் பித்ரா தொடர்பான சட்டதிட்டங்கள் ஆர்வமூட்டப்பட்டு வருவதன் மூலம் கூட்டுச் சமூக வாழ்வின் ஆன்மீக அடித்தளங்களை பலப்படுத்துவதனையே நாம் காண்கின்றோம்.
தினமும் ஐவேளை தொழுகையில் ஜமாத்தாக ஒன்றுபடுகின்ற ஒரு சமூகம் வாரம் ஒருமுறை கண்டிப்பான ஒரு தலைமைத்துவக் கட்டுக்கோப்பின் வழி காட்டல்களிற்கும் நெறிப் படுத்தலிற்கும் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அடிமட்ட மஹல்லாவிலும் சமூகத்தை வழி நடாத்துகின்ற அன்றாட சமூகவியல் வாழ்வியல் வழிகாட்டல்களை வழங்குகின்ற சிறப்பான மேடையாக மிம்பர் மேடை முக்கியத்துவம் பெறுகின்றது.
“விசுவாசிகளே.! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் – நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.” (ஸுரத்துல் ஜும்ஆ 62:9)
பருவமடைந்த ஒவ்வொரு ஆண் மீதும் ஜும்ஆவுடைய குளிப்பு கடமையாகும். அன்றி அவர் மிஸ்வாக்கும் செய்யவும், நறுமணப் பொருள் இருப்பின் அதையும் பூசிக்கொள்ளவும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர் அபூஸஈதுல்குத்ரீ (ரலி) புஹாரி, முஸ்லீம்)
வெள்ளிக்கிழமை அன்று உங்களில் எவரும் வீட்டில் அமர்ந்துவிட்டு இமாம் மிம்பரின் மீது ஏறி நின்று குத்பா பேருரை நடத்தும் போது மக்களின் பிடரியை பதற்றத்துடன் தாண்டி தொழச்செல்வதைவிட அவர் பின்னிருந்து சுடுகின்ற தரையில் தொழுவது அவருக்கு மேலாக இருக்கும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம் முஅத்தா)
வெள்ளிக்கிழமை சொற்பொழிவின் போது மௌனமாக இரு(ந்து காது தாழ்)த்தி கேட்பது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரை யாற்றிக் கொண்டிருக்கும் போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ “மௌனமாக இரு’ என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் சமூகத்திற்கு ஒவ்வொரு வாரமும் அழகிய உபதேசங்களையும், காலத்திற்கு தேவையான வழிகாட்டல்களையும் வழங்குவதற்காக வெள்ளிமேடைகளாக ஜும்மாப் பேருரைகள் எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த ஒரு மணி நேரமும் முஸ்லிம்கள் குளித்து சிறந்த ஆடைகள் அணிந்து ஜும்மாவுக்கு வருகை தந்து வாய்மூடி மௌனமாக இருந்து கேட்கின்ற குத்பாப் பேருரைகள் ஒவ்வொரு தனி மனிதனுடைய நேரங்களுக்கும் வலுவை சேர்க்கின்ற கால சூழ்நிலைகளுக்கு ஏற்ற தரத்தில் இருக்க வேண்டும் என்பது எல்லோரும் அறிந்த விஷயமாகும்.
அந்த வகையில் ஒவ்வொரு ஜும்மா தினத்திலும் நிகழ்த்தப்பட வேண்டிய குத்பாக்களை மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் அழகாக அர்த்தமுள்ளவையாக நிகழ்த்தப்படுவதை அந்ததந்த மஹல்லாவில் உள்ள புத்திஜீவிகளும் உலமாக்களும் கூட்டுப் பொறுப்பாக உணர்ந்து உறுதி செய்து கொள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
கருத்து வேறுபாடுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் உரிய விஷயங்களுக்கு அப்பால் எல்லோரும் உடன்படுகின்ற பொதுவான விவகாரங்களை அடிப்படையாக வைத்து குத்பாக்களை தயாரித்துக் கொள்வதில் உலமாக்களுக்கு உதவுவதும், அவ்வாறான குத்பாப் பேருரைகள் இருந்தால் பெற்றுக் கொடுப்பதும், அல்லது முடியுமான ஏனைய உலமாக்கள் தயாரித்து மற்றவர்களிடம் கொடுப்பதும், வெளிநாடுகளில் உள்ளவர்கள் அனுப்பி வைப்பதும் ஒவ்வொருவர் மீதும் விதிக்கப்பட்ட கடமையாகும்.
குத்பாப் பேருரைகளை சுமார் ஏழு இலட்சம் பேர்கள் கேட்கின்றார்கள் என்றால் ஏழு இலட்சம் மனிதர்களின் நேரம் அங்கே செலவிடப்படுகின்றன. அந்த மதிப்புமிக்க கால அவகாசத்தை சுமார் 1200 பேசும் இமாம்களின் தேர்வுகளுக்கும், சௌகரியங்களுக்கும் சிலவேளை விருப்பு வெறுப்பு கருத்து வேறுபாடுகளுக்கும் விட்டு விடுவது மிகப் பெரும் தவறாகும்.