நகரமயமாதல் ஏற்படுத்திய நோய்கள்.

Mumbai Dharavi near
நாடு முழுவதும் நகரமயமாதல் வேகமாக நடைபெற்று வருகிறது. பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் குடிசைவாழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
தமிழகத்தில் 1951ம் ஆண்டில் 24.35 சதவீதம் பேர் மட்டுமே நகரங்களில் வசித்தனர். தற்போது இந்த சதவீதம் 48.45 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டம் மக்கள் தொகை நெருக்கத்தில் முதலிடம் வகிக்கிறது. 2001ம் ஆண்டில் ஒரு ச.கி.மீட்டரில் இங்கு 24 ஆயிரத்து 963 பேர் வசித்தனர்.
ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 903 ஆக உயர்ந்து காணப்படுகிறது. மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது சென்னை மாவட்டம் வேறு எந்த மாவட்டங்களும் எட்டி பிடிக்காத வகையில் அபரிதமான மக்கள் நெருக்கத்தில் சிக்கி தவிக்கிறது.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. நவீன மயம், தொழில் மயம், வேலைவாய்ப்பு, கிராமங்கள் நலிவு, கல்வி, கலாச்சாரம் போன்ற பல்வேறு காரணங்களால் நகரங்களில் மக்கள் நெருக்கம் அதிகமாகி மூச்சு விடாமல் திணறுகிறது. இதனால் நகரங்களில் மக்கள் நெருக்கத்திற்கு ஏற்ப போதுமான குடிநீர், மின்சாரம், ரோடு, சுகாதாரம் உட்பட பல்வேறு அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை செய்ய முடியாத நிலையில் பல்வேறு பாதிப்புகளுக்கு மக்கள் உள்ளாகின்றனர் என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.

இதற்கு பதிலாக கிராமங்களில் வேலைவாய்ப்பு, விவசாயம் ஊக்குவிப்பு, போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், தொழில் வசதிகள், பிளாட்களாக மாறும் விளை நிலங்களை தடுத்தல், நவீன தொழில் நுட்ப வசதிகள் உட்பட அனைத்தையும் பெருக்கினால் நகரங்களுக்கு இணையாக கிராமங்களும் அதன் அடையாளங்களை பெற்று வளம் பெறுவது ஒருபுறமிருக்க... அதிக மக்கள் நெருக்கத்தால் நகரங்கள் சிக்கி திணறி மூச்சு விடாமல் இருப்பது தடுக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
மக்களவை கேள்வி நேரத்தில் இது பற்றி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியதாவது: 2010-13-ம் ஆண்டில் இதய நோய், சுவாசக் கோளாறு, வயிற்றுப் போக்கு, புற்றுநோய் ஆகியவற்றால்தான் அதிக மரணம் சம்பவித்திருக்கிறது. எளிதில் குணப்படுத்தவியலாத புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்கள், நாட்பட்ட நுரையீரல் நோய்கள் போன்றவற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளது. நகரமயமாதல், வாழ்வியல் முறை மாற்றம், புகையிலைப் பயன்பாடு, உடல் பருமன், முறையற்ற உணவுப் பழக்கம், குறைவான உடலுழைப்பு, மதுப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம், காற்று மாசுபாடு போன்றவை இதுபோன்ற நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
2004-06, 2010-13-ம் ஆண்டுகளில், இதயம், நுரையீரல், ஜீரண மண்டல நோய்கள் ஆகியவை உயிரிழப்புக்குக் காரணமான முதல் 10 நோய் பாதிப்புகளில் முக்கியமானவை. புற்றுநோயால் ஏற்படும் மரணத்தின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றார்.
நகரம் நரகமாகிக் கொண்டிருக்கிறதோ?