நீராதாரங்களும் நாமும்…

water wars
வறட்சியாலும், நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டும், நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருவதால் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ள சூழலில் நீர் நிலைகள் மீதான நமது கவனம் என்ன என்பதை பார்ப்போம்.
நதி என்பது வெறும் நீர் பாயும் கால்வாய் மட்டும் அல்ல. அது மனிதர்கள் மற்றும் பல உயிரினங்களுடன் பின்னிப் பிணைந்த உயிருள்ள ஒரு அமைப்பு.
தமிழகத்து முன்னோர்கள் தங்களைச் சுற்றி ஆறுகள், குளங்கள், ஏரிகள், கன்மாய்கள், ஏந்தல்கள், தாங்கள்கள், குட்டைகள், ஊரணிகளை அமைத்து நிலத்தை செழிக்க வைத்தார்கள். தங்களது பாரம்பரியத்தின் அடையாளமாக வழிபாட்டுத்தளங்களுக்கு அருகே நீர் நிலைகளை ஏற்படுத்தி மண் வளத்தையும், மக்கள் வளத்தையும் காத்தார்கள். இன்றும் கூட வழிபாட்டுத்தளங்களுக்கு அருகே குளங்களைக் காணலாம்.
நீர் மேலாண்மைக்கு பலவிதமான எடுத்துக்காட்டுகளை உலகத்துக்கும், தங்களது சந்ததிகளுக்கும் விட்டுச் சென்றுள்ளனர் தமிழகத்து முன்னோர்கள். அண்டை மாநிலங்களிடம் தண்ணீருக்காக போராடும் இன்றைய தமிழகம் தங்களிடம் உள்ள நீர்நிலைகள் மீது எவ்வளவு அக்கறையும், கண்கானிப்பும் செலுத்தியிருக்க வேண்டும். தங்களது பாரம்பரிய நீர் மேலாண்மையை மேம்படுத்தி இருக்க வேண்டும்? அப்படி எந்த நிகழ்வும் முன்னேற்பாடும் நடைபெறவில்லை என்பதுதான் தமிழகத்தின் நிகழ்கால சோகம். எதிர்கால ஆபத்து!
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், காவிரி, பாலாறு, தென்பெண்ணை, தாமிரபரணி ஆறுகளின் விஸ்தீரணம், 1947க்குப் (நாடு சுதந்திரம் அடைந்ததற்குப்) பிறகு எத்தனை முறை பரப்பாய்வு செய்யப்பட்டன என்றும், தமிழகத்தில் உள்ள ஆறுகளை காப்பதற்கென, தொலை நோக்கு திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்பட்டுள்ளனவா போன்ற பல்வேறு விவரங்களைக் கேட்டிருந்தார்.
பாலாறு, தாமிரபரணி: 1947ம் ஆண்டுக்குப் பின், பரப்பாய்வு செய்யப்பட்ட விவரங்கள் எதுவும் இல்லை. இயற்கை ஆதாரங்களை காப்பதற்கென, தொலை நோக்குத் திட்டங்கள் குறித்த விவரங்கள் எதுவும் இல்லை என்பதே பதிலாக கிடைத்தது.
தழிகத்தில் உள்ள மற்ற ஆறுகளின் நிலை என்ன
கோவை : மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் சிறுவாணி குடிநீர் ஆசிய அளவில் 2வது சுவையான, தரமான குடிநீர் என யுனெஸ்கோ கடந்த 1999ம் ஆண்டு அறிவித்தது. ஆனால், சிறுவாணி குடிநீரில் இரும்புச்சத்து அளவு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் பவானி ஆரம்பமாகும் இடத்தில் சாயப்பட்டறை, எலக்ட்ரோ பிளேட்டிங் (உலோகப் பூச்சு) நிறுவனங்கள் அதிகமாக இருக்கிறது.
காவிரி : இந்தியாவின் மாசடைந்த நான்கு நகரங்களில் மேட்டூர் முதலிடத்தில் இருக்கிறது.
நூற்றுக்கணக்கான சாயஆலைகள், தோல்பதனிடும் ஆலைகளில் இருந்து வெளிவரும் கொடுமையான நாற்றமெடுத்த கழிவுகள் எல்லாம் இந்த காவிரியில் தான் கலக்கின்றது.
வைகை : 250 கி.மீ. தூரம் உள்ள வைகை ஆறு 5 மாவட்டங்கள் வழியாகச் சென்று ராமநாதபுரம் வரை நீள்கிறது. வழிநெடுகிலும் துர்நாற்றம் வீசும் பாதாளச் சாக்கடைகள், ரசாயனக் கழிவு, சாயக்கழிவு, மனிதக் கழிவு ஆகியவை வைகை ஆற்றில் கலக்கின்றன.

தாமிரபரனி : சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலப்பாசனத்திற்குப் பயன்பட்டு மூன்று மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்து தண்ணீர் ஓடிய ஆறு இப்போது பல மாதங்களில் மணல் மட்டுமே காட்சி தருகிறது. 24 மணி நேரமும் மணல் அள்ளப்பட்டு பள்ளத்தாக்கு போல காட்சியளிக்கின்றன. இதுதான் தமிழக ஆறுகளின் இன்றைய நிலை. ஏரி குளங்கள் கிணறுகளின் பரிதாபம் கேட்கவே வேண்டாம். இருக்கும் நீர் நிலைகளை பாதுகாக்கத் தவறிய நாம் காவிரியின் வழித் தடத்தில் விழி பதித்து காத்துக் கிடக்கிறோம் காவிரி வருவாளா என்று.
50 ஆண்டுகளுக்கு முன் ஆறு, குளம், ஏரி, கிணறுகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 70 ஆயிரம் இதில் 60 சதவீதம் நீர்நிலைகள் காணவில்லை. தற்போது 2 லட்சத்து 28 ஆயிரம் நீர்நிலைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
கடந்த தலைமுறையில் 20 அடி ஆழத்தில் நீர் கிடைத்தது. மின் மோட்டார் பயன்படுத்தத் தொடங்கிய 1963-ம் ஆண்டில் இருந்தே படிப்படியாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து 60 அடிக்கு கீழே செல்ல ஆரம்பித்தது. தற்போது அதிக திறன்கொண்ட மோட்டார் பயன்படுத்த தொடங்கியதன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் 400 அடி முதல் 800 அடி என அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது.
மத்தியச் சுற்றுச் சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகத்தின் அறிக்கைப்படி நகர்ப்புறங்களிலிருந்து கொட்டப்படும் கழிவுகளும் தொழிற்சாலைக் கழிவுகளும்தான் நம் நாட்டின் பிரதான நதிகளைப் பெருமளவில் மாசுபடுத்துவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீர்நிலைகளை மாசுபடுத்தும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இவை ஒரு நாளைக்கு 6 லட்சம் லிட்டர் கழிவுகளை நேரடியாக ஆறுகளில் கலக்கின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை, இயற்கை வளங்கள் நொடிக்கு நொடி நாசமாக்குவதில் ஜெட் வேகம் தான்.
நதிகள் விஷமாக்கப்பட்டு ஏரி குளங்கள் குப்பைமேடுகளாக காட்சியளிக்கும் தமிழகத்தின் நிகழ்கால ஆபத்து.
இன்னொரு பேராபத்து தாயின் மடி அறுத்து பால் குடிப்பதற்குச் சமமானதாக கருதப்படும் ஆற்றுமணலை அறுத்தெடுக்கும் அவலம். மணலை வெறும் கட்டுமான பொருளாக மட்டுமே நாம் பார்க்கிறோம். மணல் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட அரிய வளம். மணல் உற்பத்திப் பொருள் அல்ல. இயற்கையாக உருவான பொருள். நிலத்தடி நீரை சேமிக்கவும், தக்க வைக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மணல் அவசியம். நீரில் கலக்கும் கழிவுகளை மணல்தான் வடிகட்டுகிறது. நீர்ப்பதத்தைச் சீரமைக்கிறது. அதாவது மணல்படுகை வடிகட்டியாக (வடிநிலமாக) பயன்படுகிறது. நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மணல் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. மணல் அள்ளுவதால் நீர் வடிகட்டப்படாமல் நிலத்தில் இறங்குகிறது. அந்த நீரை அப்படியே எடுத்து குடிநீராக பயன்படுத்தும்பட்சத்தில் நீர் மூலம் பரவும் காலரா, டைபாய்ட், சீதபேதி, மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஒர் லாரி லோடில் உள்ள ஈரப்பதமுள்ள மணலில் குறைந்தது ஆயிரம் லிட்டர் தண்ணீர் இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆற்றுமணல் பறிபோவதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். கால்நடைகள் தண்ணீர் இன்றி தவிக்கும். விவசாயம் பாதிக்கப்படும். சாலைகள், பாலங்கள் சேதமடையும். சுற்றுச்சூழல் பாதிக்கும். மழைக்காலங்களில் வெள்ள அபாயம் ஏற்படும். மணல் அள்ளப்பட்டு நில மட்டம் தாழ்ந்து கீழிறங்குவதன் காரணமாக சுமார் ஆயிரக்கணக்கான கண்மாய்கள் மற்றும் ஊரணிகள் கிணறுகளுக்குத் தண்ணீர் செல்வது தடைபட்டு கடுமையான வறட்சி ஏற்படும். இப்போது அதுதான் நடந்து கொண்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்
ஆறுகளில் மணல் எடுப்பது தடுக்கப்பட வேண்டும். மாற்று ஏற்பாடாக தமிழ்நாட்டின் பெரிய நீர்த் தேக்கங்கள், அணைக்கட்டுகளில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை வெளியே எடுப்பதன் மூலம் கட்டுமானங்களுக்கான ஆற்று மணல் தேவையினை பெருமளவு குறைக்க முடியும். ஏரி குளங்கள் கண்மாய்கள் ஊரணிகள் ஆக்ரமிப்பு தடுக்கப்பட்டு தூர்வாரப்பட வேண்டும். நீர்நிலைகளில் கழிவுகள், குப்பைகள் கொட்டுவது நிறுத்தப்பட வேண்டும்.
இனிமேல் பெரிய அளவுக்கு அணைகளைக் கட்டி நீரைத் தேக்குவது இயலாத காரியம். தேவயற்றதும் கூட சுதந்திரத்திற்குப் பிறகு கட்டப்பட்ட அணைகளால் எந்த வெள்ளத்தையும் குறைக்கமுடியவில்லை என்பது நடைமுறை எதார்த்தம். அதற்குப் பதிலாக ஆங்காங்கே தடுப்பணைகளைக் கட்டி நீரைத் தேக்கி பாசனத்துக்கும், மக்களின் பயன்பாட்டுக்கும் அளிப்பதுதான் புத்திசாலித்தனம். இப்போதுள்ள நீர் சேமிப்பு முறையில் குறிப்பாக அணைகளில் ஆழத்தில் உள்ள நீர் விரயம் ஆகின்றன. சோழர் கால ஏரிகள் எதுவும் பெரிய ஆழம் இல்லாதவை. கண்மாய்கள் ஆள் மட்டத்திற்கு மட்டுமே வைத்து நீரை பயன்படுத்தும் அளவில் தேக்குவார்கள். நாம் இருக்கும் ஏரி, குளங்கள், கண்மாய்கள், ஊரணிகள், கிணறுகளை பராமரித்தாலே நமக்குப் போதுமான நீரை பெற்றுக் கொள்ளலாம். “வெள்ளம்” என்பது நமக்கு ஆபத்து நமது முன்னோர்கள் வெள்ளத்தை சேமிப்பாக மாற்றினார்கள். மழை குறைந்த காலங்களில் தண்ணீர் குறைவாக தேவைப்படும் பயிர்களை நட்டு நீர் பற்றாக்குறையை சரி செய்து கொண்டது மட்டுமல்ல ஆரோக்கியமான தானியங்களையும் உணவாக பெற்றனர். அது அவர்களது நீர் மேலாண்மை அறிவு. 21-ம் நூற்றாண்டில் தண்ணீர் என்பது அரிதான பொருளாக மாறிவரும் வேளையில் நமது பாரம்பரிய நீர் மேலாண்மை குறித்து ஆரம்பக் கல்வியிலிருந்தே கற்றுத்தர வேண்டிய அவசியம் இருக்கிறது. தண்ணீரைச் சரியான அளவில் நிர்வகிப்பதற்கான ஆய்வுகள் முதலில் தேவை. குறைந்த நீரே தேவைப்படும் விவசாய முறைகள் குறித்த ஆராய்ச்சி வேளாண்துறையில் நடத்தப்பட வேண்டும். நீர்நிலகளை பாதுகாப்பதன் அவசியம், நமது பாரம்பரிய விவசாய முறைகளால் கிடைக்கும் ஆரோக்கியம் குறித்து அதிகமதிகம் அறிவோம். அதை நமது தலைமுறைகளுக்கு நடைமுறைப்படுத்துவோம்.