தகிக்கும் வெப்பம் காரணங்களும் தீர்வுகளும்!

veyu
அல்லாஹ் பூமியில் நால்வகை பருவ நிலைகளை அமைத்துள்ளான். அவை
1. இலையுதிர் காலம்.
2. குளிர் காலம்.
3. வசந்த காலம்.
4. கோடை காலம்.
அல்லாஹ் கூறுகின்றான். குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக- (106 :1-2)
இந் நான்கு காலங்களில் மனிதன் பெரும் அளவில் வேதனைக்குள்ளாவது வெப்பம் தகிக்கும் கோடை காலத்திலாகும். இக்காலத்தில் வெப்பத்தின் கொடுமையினால் நாவும், மேனியும் வறண்டு எப்போது மழை பொழியும் என்று மனிதன் ஏங்குவதையும், பண வசதி பெற்றவர்கள் குளிர் பிரதேசங்கள் அல்லது பகுதிகளுக்குச் சென்று வெப்பத்தின் கொடுமையிலிருந்து தங்களை காத்துக் கொள்ள முயற்சிப்பதையும் நாமறிவோம். இவை நமக்கு குறுகிய காலப்பலனை அளித்தாலும் முஸ்லிம்களாகிய நாம் இதன் மூல காரணங்களை அறிந்து, அதன் பின் நாம் ஆற்ற வேண்டிய கடமைகளையும் அறிந்து செயல்பட முயற்சிக்க வேண்டும்.

இம்மை மறுமையின் கண்ணாடியாகும்
அல்லாஹ் இம்மையை மறுமையின் கண்ணாடியாக ஆக்கியுள்ளான். இம்மையில் நாம் காணும் இன்பங்கள் மறுமையின் இன்பங்களையும், இம்மையில் நாம் காணும் துன்பங்கள் மறுமையின் துன்பங்களையும் நினைவுபடுத்தும்.

கடும் வெப்பத்திற்கான காரணங்கள்
முதலாவது : நரகத்திற்கு மூச்சுவிட வழங்கப்பட்ட அனுமதியின் தாக்கமாகும்.
அபூதர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் முஅத்தின், லுஹருக்கு பாங்கு சொல்ல முற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் 'கொஞ்சம் பொறு; கொஞ்சம் பொறு” என்று கூறிவிட்டு, 'கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்படாகும். எனவே வெப்பம் கடுமையாகும்போது (லுஹர்) தொழுகையைத் தாமதப்படுத்துங்கள்!” என்றார்கள். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை தாமதப் படுத்துங்கள்!” என்றார்கள் நபி(ஸல்) அவர்கள். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தாமதப் படுத்துவார்கள். (சூரியன் நன்றாகச் சாய்ந்து அஸருக்குச் சற்று முன்பாகத்தான் மணல் திட்டுகளின் நிழல் தென்படும்) (ஸஹீஹ் முஸ்லிம்: 616)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகம் தன் இறைவனிடம் 'என் இறைவா! என்னுடைய ஒரு பகுதி மறு பகுதியைத் தின்கிறதே” என்று முறையிட்டது. எனவே, அல்லாஹ் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர்காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரண்டு மூச்சுகள்விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவை தாம் நீங்கள் கோடை காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர்காலத்தில் அனுபவிக்கும் கடுங்குளிரும் ஆகும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் முஸ்லிம்: 617)
நரக நெருப்பு மிகக் கடுமையானது
(தபூக் போரில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக(த் தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து (மற்றவர்களை நோக்கி); “இந்த வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் “நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின் தங்கியிருக்க மாட்டார்கள்).(09:81)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவரின் உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். (அடுப்பில் வைக்கப்பட்டுள்ள) செம்புப் பாத்திரம் (அல்லது) பன்னீர் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரின் மூளை கொதிக்கும் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார். (புஹாரி 6562)

வெப்பத்தின் பாதிப்பு
1. கடும் வியர்வை :
நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து,“தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்” எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்: நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் இறைமறுப்பாளர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்” என்று கூறுவார்கள். (07:50)
அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் கூறினார்கள். ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையை தொழுது விட்டு அமர்ந்திருந்தார;கள். நன்பகல் ஆனதும் சிரித்தார்கள். பின்னர் அவ்விடமே ழுஹர், அஸ்ர், மஹ்ரிப் தொழும் வரை அமர்ந்திருந்தார்கள். அதுவரை அவர்கள் பேசவில்லை. பின்னர் இஷாவை தொழுது விட்டு தன் குடும்பத்தாரிடம் சென்று விட்டார்கள். அப்போது மக்கள் அபூபக்ர் (ரழி) அவர்களிடம் தாங்கள் நபி (ஸல்)அவர்களிடம் என்ன விஷயம் என்று கேட்டிருக்கக்கூடாதா? இது வரை செய்யாததை இன்று செய்தார்களே என்றனர். அப்போது அபூபக்ர் (ரழி) அவர்கள் நபியவர்களிடம் (விளக்கம்) கேட்டார்கள். அதற்கு நபியவர்கள். ஆம். என்னிடம் உலம் மற்றும் மறுமையின் காரியங்களில் இனி நடப்பவற்றை பற்றி எடுத்துக்காட்டப்பட்டது. அப்போது அதில் ஒரே தட்டில் (திடலில்) முன்னோர்களும் பின்னோர்களும் ஒன்று திரட்டப்படுவார்கள். இதனால் மக்கள் கடும் அச்சத்திற்குள்ளாகி ஆதம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களின் வியர்வை அவர்களின் வாயை நெருங்கி இருக்கும்……(அஹ்மத் : 15)
இம்மையின் வியர்வை மறுமையின் வியர்வையை நினைவுபடுத்த வேண்டும். இதன்படி வெயிலிலிருந்து காத்துக் கொள்ள நிழலை நாம் தேடுவது போல் நரகிலிருந்து காத்துக் கொள்ள அமலை நோக்கி விரைய வேண்டும்.

2. காய்ச்சல் :
அபூ ஜம்ரா அள்ளுபயீ(ரஹ்) அறிவித்தார். நான் (மார்க்க அறிவு பெறுவதற்காக) மக்காவில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் அமர்வது வழக்கம். (ஒரு முறை) என்னைக் காய்ச்சல் பீடித்தது. அப்போது, இப்னு அப்பாஸ்(ரலி) சொன்னார்கள். 'ஸம்ஸம்' தண்ணீரைப் பயன்படுத்தி உன் காய்ச்சலைத் தணித்துக் கொள் ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இந்தக் காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் தான் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரைக் கொண்டு தணித்துக் கொள்ளுங்கள். (புஹாரி:3261)
3. கடும் தாகம்:
அல்லாஹ் கூறுகின்றான்.அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், அதுவே மிகக் கெட்ட வசிப்பிடமாகும். (18:29)
4. இலகுவான ஆடையை மனம் தேடும்.
அல்லாஹ் கூறுகின்றான். முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்; ஆனால் எவர் (இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தயாரிக்கப்படும்; கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும். (அல் குர்ஆன். 22:19)
நரகத்தை அஞ்சிய முன்மாதிகள்
நபி (ஸல்) அவர்கள்:
عن أنس، قال: كان أكثر دعاء النبي صلى الله عليه وسلم: «اللهم ربنا آتنا في الدنيا حسنة، وفي الآخرة حسنة، وقنا عذاب النار» خ : 6389
''அல்லாஹும்ம ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதவ் வஃபில் ஆகிரதி ஹஸனதவ் வகினா அதாபன் நார்" என்று நபி (ஸல்) அவர்கள் அதிகமதிகம் துஆச் செய்வார்கள். (புஹாரி : 6389)
வானவர் மீகாயீல் (அலை) அவர்கள் : நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் நான் மீகாயீல் (அலை) அவர்கள் சிரிக்க கண்டதில்லையே ஏன்? என்று கேட்க அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் நரகம் படைக்கப்பட்டதிலிருந்து அவர் சிரித்ததில்லை என்றார்கள். (அஹ்மத் : 13343)
நரக வெப்பத்திலிருந்து விடுதலை பெற
1. ஈமான் கொள்வதுடன், இணைவைப்பிலிருந்து விலகி இருத்தல்.
இத்தகையோர் (தம் இறைவனிடம்): “எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” என்று கூறுவார்கள். (03:16)
“நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. (05:72)
2. நல்லறங்கள் செய்வது மற்றும் அதனை அழித்திடும் பாவங்களிலிருந்து விலகி இருப்பது.
நிச்சயமாக, எவர்களுக்கு நம்மிடமிருந்து (மறுமைப் பேற்றுக்கான) நன்மைகள் முன் சென்றிருக்கிறதோ, அவர்கள் அ(ந் நரகத்)திலிருந்து வெகு தொலைவில் இருப்பார்கள். (அல்குர்ஆன் 21:101)
(இத்தகைய சுவர்க்கவாசிகள் நரகின்) கூச்சலைக் கேட்கமாட்டார்கள்; தாம் விரும்பும் இன்பத்திலேயே அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள். (அல்குர்ஆன் : 21:102)
(அந்நாளில் ஏற்படும்) பெரும் திகில் அவர்களை வருத்தாதுஇ மலக்குகள் அவர்களைச் சந்தித்து: “உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள் இதுதான்” (என்று கூறுவார்கள்). (அல்குர்ஆன் : 21:103)
இரண்டாவது காரணம் பூமி வெப்பமடைவது:
இப்பொழுது உலகில் எங்கு நோக்கினாலும் புயல், வெள்ளம் தாறுமாறாக அதிகரித்திருப்பதற்கும், அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் மிக முக்கிய காரணம் பூமி வெப்பமடைவதேயாகும். இந்நிலை பூமிக்கு ஏற்படுவதற்கு மனிதனின் சுய நலமும் அதன் விளைவாக அவனிடமிருந்து உருவாகும் நியாயமற்ற செயல்களுமே காரணம். அவைகளில் மிக முக்கியமானது காடுகளை அழிப்பது மற்றும் மரங்களை வெட்டுவதாகும்.
இதனை இஸ்லாம் வண்மையாக கண்டிப்பதுடன், அது மரம் வளர்ப்பதை அதிகமதிகம் ஊக்குவிக்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவரின் கரத்தில் மரக்கண்று இருக்க மறுமை வந்து விட்டால் அதனை அவர் நட்டி விடட்டும். (அஹ்மத்:12902)
எனவே இம்மையின் வெப்பத்திலிருந்தும் மறுமையின் வெப்பத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ள முயல்வோமாக!