பொதுமக்களின் கருத்துக்களில் தாக்கம் செலுத்தும் முன்னோடிகள் பற்றாக்குறை.

leadres

மதம் கடந்து இனம் கடந்து மொழி கடந்து பால் கடந்து மனிதர்களுக்காக குரல் கொடுக்கும் மனிதர்கள் தனிப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மனிதத்தை நேசிக்கும் மனிதர்கள் பெரும் கூட்டமாக சமூகமாக திரள்வதற்கு பொதுக் கருத்தை உருவாக்கும் தகுதிமிக்க புத்திஜீவிகள் இன்று தேவைப்படுகிறார்கள். 

பெரியார், அம்பேத்கர், காந்தி, அப்துல் கலாம் ஆஸாத், காயிதே மில்லத் போன்ற சமூக நீதியை வாழ்வாகக் கொண்டு பொது மக்களின் புத்திகளில் ஆதிக்கம் செலுத்தி பொதுக்கருத்தை உருவாக்கும் தகுதிமிக்கவர்களின் தொடர்ச்சி அறுந்து விட்டது. அந்த கருத்துருவாக்க முன்னோடிகளின் சிந்தனை முகாம்களைச் சேர்ந்தவர்களின் இருப்பு இன்று கேள்விக்குறியாக உள்ளது.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சமூக நீதியை பொதுக் கருத்தாக உருவாக்க இயலாமல் போனதன் விளைவு, தகுதி மிக்க ஆளுமைகளின் பற்றாக்குறை சமூகத்தில் பெரும் பிளவை ஏற்படுத்தி வருகிறது. மனிதர்களை மதம், சாதி, இனம், மொழி, பெண் என பிளந்து கூறுபோட்டு சமூகத்தை சிதிலமாக்கும் வேலைகள் மிக மும்முரமாக நடந்தேறி வருகின்றன.
இந்த சூழலில் நிகழ்கால சவால்களுக்கு முகம் கொடுக்கின்ற முற்போக்கான சமூக, பொருளாதார, அரசியல், கல்வி, கலாசார, சுகாதார, சுற்றுச் சூழல் சிக்கல்களில் சமநீதியான சமூக நீதிச் சிந்தனைகள் “பொதுக் கருத்தாக” மக்களை சென்றடையாமல் இருப்பதற்கான காரணங்கள் கண்டறியப் பட வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு அது கடமையாக இருக்கிறது.
உலகப் பொது மறை திருக்குர்ஆனில் (4:114) “(நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை; ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்”. என்று பிறருக்கு நலம் நாடுவதையும், சமாதானத்தை விதைப்பதையும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுத் தரும் அவசியமான செயல் என்று விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய இயக்கத் தலைமைகள் சர்வதேச குறிப்பாக மத்திய கிழக்கு (அரபு நாட்டு) அரசியலில் ஆர்வம் காட்டும் அளவிற்கு இந்திய நாட்டு அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை, அதேபோன்று உள்நாட்டில் தேசிய அரசியலில் ஆர்வம் கொண்டுள்ள பலர் தமது மாநில, மாவட்ட, உள்ளூர் அரசியல் சமூக பொருளாதார விவகாரங்களை ஆய்வு செய்யவும், திறன்வாய்ந்த திட்டமிடல்களை வகுக்கவும் மறந்து விடுகின்றனர். தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களின் அன்றாடச் சிக்கல்களுக்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வாளனாக ஒரு முஸ்லிமின் செயல்பாடு அமைய வேண்டும் என்பதுதான் இஸ்லாம் வழிகாட்டும் பண்பு.
மக்களோடு தொடர்புடைய அதிகாரமிக்க அரசுத்துறைகள், பொதுமக்களிடம் ஆதிக்கம் செலுத்தும் ஊடகங்கள், சேவை மையங்கள் என எதிலும் முஸ்லிம் சமூகம் ஆர்வம் காட்டுவதில்லை. அதன் காரணமாக அரசு இயந்திரம், ஊடகம், பொதுச் சமூகத்தோடு தொடர்புடைய சேவை மையங்கள் என எல்லா மட்டங்களிலும் தவறான குழுக்களில் செயல்படும் மனிதர்கள் மற்றும் மனிதநேயம் அற்றவர்கள் உடனுக்குடன் நிரப்பப்படுகிறார்கள். ஆனால் முஸ்லிம் சமூகம் பிரச்சனைகளுக்கும் சிக்கல்களுக்கும் முகம் கொடுத்து வாழ்வும் பொருளாதாரமும் சிக்கலாகும் போது மட்டுமே கைசேதப்படுவது வழமையாகிப் போய்விட்டது.
இந்தியா பல்சமய, பல கலாசார இயல்பைக் கொண்ட நாடு. இந்திய முஸ்லிம் சமூகம் வரலாறு முழுவதும் தன் அடையாளத்தை தக்கவைத்து கொண்டே பிற சமூகத்தோடு ஊடாடி உறவைப் பேணி வருகிறது எப்போதும்.
இதை சிதைப்பதற்காகவே முஸ்லிம்களை பிற சமூகங்களிடமிருந்து தனிமைப்படுத்தும் திட்டத்தின் அடிப்படையில் கலவரங்கள், பாபர் மஸ்ஜித் இடிப்பு போன்றவை நிகழ்த்தப்பட்டது. இதன் பின்னணியில் முஸ்லிம் சமூகம் தன் அடையாளத்தை தக்கவைத்துக் கொள்ள மேற்கொண்ட நடவடிக்கைகள் பொதுச் சமூகத்திலிருந்து முஸ்லிம் சமூகத்தை பிரிப்பதற்கு சமூக விரோதிகளால் காரணமாக்கப்பட்டது.
அதே போல சமூக மாற்றத்திற்காக உருவாக்கப்படுகின்ற முஸ்லிம் இளம் தலைவர்கள், தலைமுறைகளின் திறமைகளும் ஆற்றல்களும், தலைமைத்துவ பண்புகளும், ஒருசில தலைவர்களால் பிரபல பிம்பங்களாலும் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமகவும் இந்த தலைமுறைகளில் சிலர் பொதுச் சமூகத்தில் இரண்டறக் கலக்காமல் இருக்கிறார்கள்.
முஸ்லிம்களோ அரசியல் சமூக பொருளாதாரத் தளங்களில் சமூகநீதி சிந்தனை கொண்டவர்களோ சமூகத்தின் முன்னாள் அடையாளப்படுத்தடாமல் இருப்பதற்குப் பின்னால் ஊடகங்களின் செயல்பாடு பெரும் காரணமாக இருக்கிறது. பொதுமக்களின் அபிப்பிராயம் மற்றும் பொதுக் கருத்துருவாக்கம் போன்ற செயல்பாடுகளில் புத்திஜீவிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையில் இணைப்புப் பாலமாக ஊடகங்கள் உரிய வகையில் பங்களிப்புச் செய்யத் தவறி விடுகின்றன.
பல்வேறு துறைகளிலும் நிபுணர்கள் திறமையாளர்கள் கல்விமான்கள் எல்லா மட்டங்களிலும், பகுதிகளிலும் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு உரிய அங்கீகாரமும், சந்தர்ப்பங்களும் வழங்கப் படுவதில்லை, ஒரு சில பிரபல பிம்பங்களை உருவாக்குவதும் அவர்களை நம்பியிருப்பதும் இந்த சமூக அமைப்புகள் செய்யும் மிகப் பெரிய தவறாகும், இது நமது கரங்களாலேயே சிலைகள் செய்து அதை நாமே வழிபடுவது போன்ற பாமரத்தனமாகும்.
இதனை ஹீரோ வெர்ஷிப் என ஆங்கிலத்தில் சொல்வார்கள், இது அநீதிகளில் பெரிய அநீதியாகும், அமானிதங்களை (நம்பிக்கைகளைப்) பாழ் படுத்துகிற பாவமாகும். அரசியலில் ஒரு சிலரை விட சிறந்த ஆளுமைகள் சமூகத் தளத்தில் இல்லை என்பது போன்ற பிரமை அதிகார மையங்களால், ஊது குழல் ஊடகங்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுவது போன்று பொது மக்களின் தலைமைகளும் அமைப்புக்களும் ஒருவகை சினிமாத்தனமான ஹீரோ வெர்ஷிப் உருவாக்கத்தில் அறிந்தோ அறியாமலோ ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
மனித சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்களும், மனிதர்களுக்கு இடையில் அன்பையும் மகிழ்ச்சியையும் விதைக்க விரும்புகிறவர்களும் எதிர்காலத் தலைமுறையை “மக்கள் நலனை பொது புத்தியில் விதைக்கும் ஆளுமைகளாக” திட்டமிட்டு உருவாக்க வேண்டும். அந்தப் பொறுப்பை வரலாற்றில் இஸ்லாமியக் கல்வி மிகச் சரியாக செய்திருக்கிறது. முஸ்லிம் அல்லாதவர்களும் முஸ்லிம்களும் அதில் பயிற்சி பெற்று மனிதத்தை நேசிக்கும் சமூகமாக வாழ்ந்திருக்கிறார்கள். இப்போதைய உடனடித் தேவை அறத்தை வாழ்வாக பயிற்றுவிக்கும் கல்விக்கூடங்கள். சமூகநீதியை பொது மக்களின் புத்தியில் விதைக்கும் மக்கள் நலம் நாடும் முன்னோடிகள்.