பொது சிவில் சட்டம்!

india-map123

முன்னுரை
சுதந்திர இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது பொதுசிவில் சட்டம் தொடர்பான சர்ச்சை திரும்பத் திரும்ப எழுப்பப்பட்டுவருகிறது. இந்த முறை அந்தச் சர்ச்சை எழுவதற்கு ஒரு காரணம் இருந்தது.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சார்ந்த சாய்ரா பானு (26), கொல்கத்தாவைச் சேர்ந்த (மேற்கு வங்கம்) இஷ்ரத் ஜஹான், ஜெய்ப்பூரைச் சேர்ந்த (ராஜஸ்தான்) ஆப்ரீன் ரஹ்மான் (25) ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தலாக் சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். முன்னதாக அவர்கள் மூவரும் தம் கணவர்கள்மூலம் எதேச்சையாகத் தனித்தனியே முத்தலாக் செய்யப்பட்டிருந்தனர்.
மேலும், ஃபர்ஹா ஃபாயிஸ் என்ற முஸ்லிம் பெண் வழக்கறிஞர் முஸ்லிம் பெண்கள் சிலருடன் இணைந்து முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் ஆண்-பெண் பாரபட்ச போக்கு குறித்து கவன ஈர்ப்பு வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
இது தவிர பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன் எனும் அமைப்பைச் சேர்ந்த 50 ஆயிரம் முஸ்லிம் பெண்களும் ஆண்களும் தலாக் முறைக்குத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை மொத்தமாகச் சேர்த்து உச்சநீதிமன்றம் கடந்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தமது தீர்ப்பில் பின்வருமாறு கூறியிருந்தார்:
தலாக் குறித்து தீர்க்கமான முடிவு ஒன்று எட்டப்பட வேண்டும். தேவைப்பட்டால் தலாக் மற்றும் பலதாரமணம் குறித்த இஸ்லாமியச் சட்டங்களை மீளாய்வு செய்து நாட்டுக்கு ஏற்றாற்போல பொதுசிவில் சட்டம் உருவாக்கப்படுவது குறித்து கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இவ்வழக்கைப் பட்டியலிட்டு விசாரிக்கலாம்.
இவ்வாறு தெரிவித்திருந்த நீதிபதி, இவ்வழக்கு குறித்து நான்கு வாரத்துக்குள் கருத்து தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். மேலும், அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்த விவகாரத்தில் அரசு என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் கடந்த வாரம் ஆலோசித்தனர். இதை பொதுசிவில் சட்டம் என்ற கோணத்தில் அணுகாமல், பாலின சமத்துவம், பெண்ணுரிமை என்ற அடிப்படையில் அணுகி தலாக் முறைக்கு உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
இதையடுத்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பல்பீர்சிங் சவ்ஹான் தலைமையிலான இந்திய சட்ட ஆணையம், இது குறித்து மக்களின் கருத்தறிய 16 கேள்விகள் அடங்கிய அறிக்கை ஒன்றை மத்திய அரசின் சொல்படி வெளியிட்டது.
இஸ்லாம் என்ற சொல் திட்டமிட்டே தவிர்க்கப்பட்ட, இரண்டு கேள்விகள் தவிர மற்றெல்லா கேள்விகளிலும் முஸ்லிம் சமூகம் மட்டுமே குறியிலக்காக வைக்கப்பட்ட, உரிய கருத்தைச் சொல்வதற்குப் பெரும்பாலும் வாய்ப்பளிக்காத, பொதுசிவில் சட்டம் அவசியம் என்கின்ற முன்முடிவுடன் கூடியதாக, ஆய்வியல் முறைமைக்கு எதிரான பல்வேறு தவறுகள் கொண்டவையாக அந்தக் கேள்விகள் அமைந்திருந்தன என்று சட்ட ஆய்வாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.
அது மட்டுமன்றி, அந்தக் கேள்விகள் பெரும்பாலும் இது வேண்டுமா? வேண்டாமா? என்ற அமைப்பில் இல்லாமல், இது வேண்டும்தானே? இது வேண்டாம்தானே? என்ற தொனியில் அமைந்திருந்தன என்றும் கூறுகின்றனர். இதில் முந்தைய அமைப்பு கருத்துக் கேட்பு; இரண்டாம் அமைப்பு கருத்துத் திணிப்பு என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
மத்திய அரசின் வழிகாட்டல்படி நடக்கும் இந்தியச் சட்ட ஆணையத்தின் இந்தக் கருத்தறியும் முயற்சியானது முழுக்க முழுக்க இஸ்லாமிய ஷரீஆவை மாற்றத் துடிக்கின்ற ஆபத்தான முயற்சி என்பதால், இதை அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அடியோடு புறக்கணித்து, முஸ்லிம் சமூகத்தின் மீது மத்திய அரசு தொடுத்துள்ள போர் என்று இதை அறிவித்துள்ளது.
ஊதிப் பெரிதாக்கப்படும் முத்தலாக் சட்டம்
பல்வேறு சமாதான முயற்சிகளுக்குப் பின்னர் இனிமேல் சேர்ந்து வாழ்வதற்கு அறவே வாய்ப்பில்லாத இறுதிக் கட்டத்திற்கு தம்பதிகள் வந்துவிட்டால் அவர்கள் இலகுவாகப் பிரிந்து தத்தமக்குப் பிடித்தமான வழியைத் தீர்மானித்துக்கொள்ளும் வாய்ப்பை எளிதாக்கித் தருவதே தலாக் சட்டத்தின் அடிப்படை நோக்கம்.
தலாக் சொல்வதற்கு இஸ்லாம் கனத்த இதயத்துடன்தான் அனுமதி அளிக்கிறது. சரியான நெறிமுறையைப் பின்பற்றி சொல்லப்படுகின்ற தலாக் என்பது மனித சமூகத்திற்கு உண்மையான விடுதலைக்கே வழிவகுக்கிறது. பொதுவாக விவாகரத்து என்பது பல்வேறு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால், அதற்கு நேர்மறையான ஒரு பகுதியும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. உணர்வுகளைக் காயப்படுத்துகின்ற, மனிதாபிமானத்திற்கு எதிரான, குரூர குணம் கொண்ட, குடும்பத்தைப் பற்றிய கவலையோ அக்கறையோ இல்லாத, குடும்பச் சிதைவுக்கு வழிவகுக்கக்கூடிய, பணத்தின் மீது மட்டுமே பேராசை கொண்ட ஒருவரோடு வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தத்தளிப்போருக்கு விவாகரத்தை விட்டால் குறைந்தபட்ச சேதாரத்தோடு வேறென்ன தீர்வு கிடைத்துவிட முடியும்? எனவே, தலாக் ஒரு கசப்பு மருந்து என்பதே எதார்த்தம்.
ஆனால், தலாக்கைப் பயன்படுத்துபவர்கள் அவசரப்படுகிறார்கள்; தவறு செய்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. சட்டம் என்று சொன்னால் அதை வளைப்பதற்கும் தவறாகப் பயன்படுத்துவதற்கும் சிலர் முயலவே செய்வார்கள். அதனாலேயே அந்தச் சட்டம் தவறு என்றாகிவிடாது.
நீதிமன்றங்களே சில நேரங்களில் நிரபராதிகளைத் தண்டிக்கின்றன. அதற்காக, நீதிமன்றக் கட்டமைப்பே தகர்க்கப்பட வேண்டியது என்று சொல்லிவிட முடியுமா? அது எப்படி நியாயமாகாதோ அதைப் போன்றே தலாக்குக்கு எதிரான மத்திய அரசின் பாசிசப் போக்கும் நியாயமற்றதாகவே உள்ளது.
செல்போனில் தலாக் சொல்கிறார்கள் என்றொரு வாதம் வைக்கப்படுகிறது. கடந்த காலத்தில் கடிதம் எழுதி தலாக் சொன்னவர்கள் இப்போது இந்த விஷயத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் போலும். இதை நாம் ஆதரிக்கவில்லை. ஆனால், இதற்காகத் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்டவரைக் குறை சொல்லலாம், கண்டிக்கலாமே ஒழிய சட்டத்தை அல்ல.
ஷரீஆ சட்டம் மண்ணுக்கேற்ற சட்டம்
மனிதனைப் படைத்த இறைவன், மனிதனுக்கு எது நலன் பயக்கும், எது நலன் பயக்காது என்பதை நன்கறிந்தவன் ஆவான். மனித நலன் காக்கவே ஷரீஆ சட்டங்களை இறைவன் வகுத்தளித்தான் என்பதே முஸ்லிம்களின் ஆணித்தரமான நம்பிக்கை. இது இன்று நேற்றல்ல. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் மரபார்ந்த நம்பிக்கை.
ஷரீஆ சட்டங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் மனித வாழ்க்கையின் ஐந்து அடிப்படை அத்தியாவசியங்களான சமயம், உயிர், மானம், பொருளாதாரம், அறிவு ஆகியவற்றின் பாதுகாப்பு நிச்சயமாக இருக்கும். வேறொரு வார்த்தையில் சொல்வதானால், இஸ்லாமிய ஷரீஆ ஒன்றைச் செய் என்றோ செய்யாதே என்றோ சொன்னால் அங்கு மேற்கண்ட ஐந்து அத்தியாவசியங்களில் ஏதேனும் ஒன்றின் பாதுகாப்பு நோக்கமாக இருக்கும்.
‘திருடாதே‘ என்ற ஷரீஆவின் தடையாணைக்குப் பின்னால் அடுத்தவரின் பொருளாதாரப் பாதுகாப்பும் ‘மது அருந்தாதே‘ என்ற தடையுத்தரவுக்குப் பின்னால் சம்பந்தப்பட்டவரின் அறிவுப் பாதுகாப்பும் நோக்கங்கள் ஆகும். இப்படியே ஷரீஆவின் அனைத்துச் சட்டங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தினால் இதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
இஸ்லாமிய ஷரீஆ, பன்றி இறைச்சி `தடை செய்யப்பட்டது` (ஹராம்) என்கிறது. பன்றியைப் பொறுத்தமட்டில் அதனால் 450 வகையான நோய்க் கிருமிகள் ஏற்படுவதாக மருத்துவ அறிவியல் கண்டுபிடித்துள்ளது. அவற்றில் 57 வகையான கிருமிகள் பன்றியிடமிருந்து மனிதனுக்குத் தொற்றும் தன்மையுடையவை. அவற்றில் சில, உயிருக்கு ஆபத்து விளைவிப்பவை. அவற்றில் 27 வகைக் கிருமிகள் பன்றியிடமிருந்து மட்டுமே மனிதனுக்குத் தொற்றுபவை. அவை கொத்துக்கொத்தாகக் கொல்லும் பெருநோய்களை உருவாக்குபவை ஆகும். பன்றி இறைச்சி தடுக்கப்பட்டது என்ற தடையாணைக்குப் பின்னால் மனித சமூகத்திற்கு இவ்வளவு பெரிய பாதுகாப்பு உண்டு என்பது தற்கால மருத்துவக் கண்டுபிடிப்புகள் நமக்குச் சொல்லும் உண்மையாகும்.
எகிப்திய பேரறிஞர் ஷஹீத் சையித் குதுப் (ரஹ்) அவர்களிடம் ஒருவர், “இந்தக் கிருமிகளையெல்லாம் அழித்தொழிக்கும் மருந்துகள் இன்றைக்கு வந்துவிட்ட பின்னர் பன்றி இறைச்சி தடை செய்யப்பட வேண்டிய தேவை இப்போதும் உள்ளதா?“ என்று கேட்டார்.
அதற்கு சையித் குதுப் (ரஹ்) அவர்கள், “முக்காலத்தை முற்றிலும் அறிந்த இறைவன் வழங்கிய இந்தத் தடையுத்தரவை இதுகாறும் மதித்துப் போற்றியதால்தான் 1400 ஆண்டுகளாக முஸ்லிம் சமூகம் பேரழிவிலிருந்து பாதுகாக்கப்பெற்றது. இன்றைக்கு மருத்துவ அறிவியல் இவ்வளவு கிருமிகளைக் கண்டறிந்துள்ளது. இவை மட்டும்தானா? இனிமேலும் இவை விரிவடையுமா? என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், விரிவடையும் என்று மருத்துவ அறிவியல் ஆணித்தரமாகக் கூறுகிறது. எனவே, காலம் உள்ளளவும் இந்தச் சட்டத்தின் தேவை மனிதகுலத்திற்கு இருந்துகொண்டேதான் இருக்கும்“ என்று பதிலளித்தார்கள்.
எடுத்துக்காட்டுக்காகச் சொல்லப்பட்ட இந்த ஒன்றையே ஷரீஆவின் அனைத்துச் சட்டங்களுக்கும் நாம் பொருத்திப் பார்க்கலாம்.

ஷரீஆ சட்டங்கள் மாற்றங்களுக்கு உரியவை அல்ல
“இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடையை உங்கள்மீது நிறைவாக்கிவிட்டேன்“ (5:3) என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
இஸ்லாம் முழுமையானதொரு சமயநெறி. அதில் கூடுதல் குறைவுகளுக்கோ திருத்தங்களுக்கோ மாற்றங்களுக்கோ எந்தத் தேவையும் இல்லை. திருத்துகின்ற அதிகாரம் மனிதர்கள் கையில் அறவே இல்லை என்பதே இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கை. இறைவனின் சொல்லுக்கு மனிதன் திருத்தம் தருவதை இறைமைக்கு ஏற்படுத்தும் இழுக்காகவே இஸ்லாம் பார்க்கிறது.
“ஒரு விவகாரத்தில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் முடிவெடுத்துவிட்டால், இறைநம்பிக்கை கொண்ட ஆணுக்கோ இறைநம்பிக்கை கொண்ட பெண்ணுக்கோ தம் விவகாரத்தில் சுயமுடிவு எடுக்க அதிகாரம் கிடையாது“ (33:36) என்றும் திருக்குர்ஆன் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.
பெருநாள் தொழுகையின்போது, “முதலில் தொழுகை, பிறகே சொற்பொழிவு“ என்பதே நபிகளார் கடைப்பிடித்த நடைமுறையாக இருந்தது. அதுதான் சட்டமும்கூட. ஆனால், உமய்யா ஆட்சியாளர்கள் (கி.பி. 662-750) தமது வசதி கருதி இந்த நடைமுறையை வெள்ளிக்கிழமை தொழுகையைப் போன்று, “முதலில் சொற்பொழிவு, பிறகே தொழுகை“ என்று மாற்றம் செய்தனர். உலகம் முழுவதும் முஸ்லிம் சமூகத்தின் கடும் எதிர்ப்புக்கு ஆளான இந்தச் சட்ட மாற்றம் உமய்யா ஆட்சியாளர்களின் வீழ்ச்சியோடு சேர்ந்து வீழ்ச்சி கண்டது என்பதே வரலாறு கூறும் உண்மை.
மனிதர்களின் மனோ இச்சையைப் பின்பற்றி இறைச்சட்டத்தை விடுத்துச் சொந்தமாகத் தீர்ப்பு வழங்கிட வேண்டாம் என்று இறைத்தூதருக்குப் பல இடங்களில் அல்லாஹ் தடையுத்தரவு பிறப்பித்துள்ளான். (5:49)
சட்டமியற்றும் அதிகாரம் மனிதனுக்கில்லை
சட்டமியற்றும் அதிகாரத்தை மனிதன் கையில் கொடுத்தால் எவ்வளவு விபரீதங்கள் ஏற்படும் என்பதற்கு மேலை நாடுகளையல்ல. நம் நாட்டையே உதாரணமாகச் சொல்லலாம். பண்பாட்டுக்கும் கலாசாரச் செழுமைக்கும் பெயர்போன நமது இந்தியாவில்தான் ஒருபால் உறவுக்குச் சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று ஒழுக்க விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டிய நீதிமன்றங்களே குரல் எழுப்புகின்றன. அதே நீதிமன்றங்கள்தான், சட்டப்படி திருமணம் செய்துகொள்ளாத ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால் அவர்கள் தம்பதிகளாகவே கருதப்பட வேண்டும் என்றும் கருத்துத் தெரிவிக்கின்றன.
இவையெல்லாம் மனிதகுலத்தில் பேராபத்தையும் பெருநாசத்தையும் விளைவிக்கும் குற்றங்கள் என்பது குறித்த சிறிய பிரக்ஞைகூட நீதிபதிகளுக்கே இல்லை. பலவீனமான அறிவு படைத்த மனிதனின் கையில் சட்டமியற்றும் அதிகாரம் வந்தால் இதுபோன்ற அபத்தங்கள் தவிர வேறென்ன நிகழும்?
முஸ்லிம் தனியார் சட்டம்
இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களே இந்தியாவில் முஸ்லிம் தனியார் சட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன. முகலாயர் ஆட்சியின்போது தேசியச் சட்டமாக (றீணீஷ் ஷீயீ tலீமீ றீணீஸீபீ) ஷரீஆ சட்டங்களே இருந்தன. ஆனால், அவை முஸ்லிமல்லாதோர்மீது திணிக்கப்படவில்லை. 1857 இல் ஆங்கிலேய ஆட்சி வந்த பின்னும் ஷரீஆ சட்டங்களே தொடர்ந்தன. முஸ்லிம்களுக்கிடையிலான வழக்குகளில் ஆங்கிலேயரின் நீதிமன்றம், முஸ்லிம் சமய அறிஞர்களை அழைத்து சட்ட விளக்கம் கேட்டு அதன்படியே தீர்ப்பு வழங்கியது.
1852இல் அனைவருக்கும் பொதுவான இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் (மிஸீபீவீணீஸீ ஜீமீஸீணீறீ நீஷீபீமீ) கொண்டுவரப்பட்டது. குற்றவியல் என்று வரும்போது இருவேறு சமயத்தார் சம்பந்தப்பட வாய்ப்புள்ளதால் ஒரே குற்றத்தில் ஒரு சமயத்தைச் சேர்ந்தவருக்கு ஒரு தண்டனையும் மற்றொரு சமயத்தைச் சேர்ந்தவருக்கு வேறொரு தண்டனையும் தருவது பெரும் பிரச்சினைக்கு வழிவகுக்கும். எனவே, முஸ்லிம்களும் இந்தியக் குற்றவியல் சட்டத்தை ஏற்றுக்கொண்டனர்.
இதன்பின் சிவில் சட்டங்களில், திருமணம், மணமுறிவு, பாகப்பிரிவினை போன்றவற்றில் மட்டுமே ஷரீஆ சட்டம் நீடித்தது. இவை முஸ்லிம்களிடையே மட்டுமே நிகழும் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் முஸ்லிம்களில் சிலர் இந்து மதத்தை முன்னுதாரணமாகக் கொண்டு பெண்களுக்குச் சொத்துரிமை தர மறுத்தனர். இதையடுத்து 1937இல் முஸ்லிம் தனியார் சட்டம் (மிஸீபீவீணீஸீ ஜீமீக்ஷீsஷீஸீணீறீ றீணீஷ்) ஆங்கிலேய அரசால் கொண்டுவரப்பட்டது.
இந்தியா சுதந்திரம் பெற்றபின் இந்திய அரசியல் சாசனத்திலும் தனியார் சட்டங்களுக்குச் சட்டபூர்வமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 25 (1), ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தான் விரும்பும் மதத்தை நம்பவும் பின்பற்றவும் பரப்பவும் உரிமை பெறுகிறான் என்கிறது. இது அடிப்படை மனித உரிமைகளில் இடம்பெற்றுள்ளது என்பது கவனிக்கத் தக்கதாகும்.
அமெரிக்கா, ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகளில் நம்பிக்கை சார்ந்த இதுபோன்ற உரிமைகளுக்கு அதிஉயர் சட்டத் தகுதியும் அங்கீகாரமும் வழங்கப்பட்டிருப்பதாகச் சட்ட அறிஞர்கள் கூறுகின்றனர். அதற்கு நிகரான அரசியல் சாசனச் சட்டப் பிரிவே 25 (1) ஆகும்.
இன்றுவரை இதே நிலை நீடித்தாலும் அவ்வப்போது நீதிமன்றங்களாலும் வகுப்பவாதச் சிந்தனை கொண்ட அரசியல்வாதிகளாலும் அவ்வப்போது பொதுசிவில் சட்டம் குறித்த கூப்பாடு எழுப்பப்படுகிறது. இந்திய அரசியல் சாசனத்தின் வழிகாட்டு நெறியில் (பிரிவு 36 முதல் 51 வரை) இடம்பெற்றுள்ள பொதுசிவில் சட்டம் தொடர்பான இந்தச் சட்டப் பிரிவை (44) நீதிமன்றம்கூட கட்டாயப்படுத்த முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால், பா.ஜ.க. அரசோ இதைப் பாலின சமத்துவம், மகளிர் உரிமை என்கின்ற ரீதியில் முன்னெடுத்து ஷரீஆவைப் பிரச்சினைக்கு உள்ளாக்க முயற்சி செய்கிறது. இந்துச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை பண்டித ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர் போன்ற சீர்திருத்தவாதிகள் கொண்டுவந்தபோது இந்து தர்மத்தை அழிக்கும் முயற்சி நடப்பதாகக் கருத்துத் தெரிவித்த சியாமா பிரசாத் முகர்ஜியை சங்கப் பரிவாரங்கள் தர்மம் காக்கவந்த தளகர்த்தராகப் பார்த்தார்கள்.
சமயச் சட்டங்களில் திருத்தம் கூடாது என்று முஸ்லிம்கள் கூறுவது தவறென்றால் அந்தத் தவறை அன்றைக்கே செய்த சியாமா பிரசாத் முகர்ஜியைச் சங்கப் பரிவாரங்கள் முதலில் இதயசுத்தியோடு கண்டிக்க வேண்டும். ஆனால், சங்கப்பரிவாரங்கள் தம் ஆன்மாவுக்கே விரோதிகள் என்பதால் அவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது.

முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்
1978இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில், திருமணம், தலாக் (மணமுறிவு), குலா (பெண் கோரிப்பெறும் மணமுறிவு), வாரிசுரிமை, வக்ஃப் ஆகிய சிவில் பிரச்சினைகளில் ஷரீஆ அடிப்படையில் தீர்வு காண அமைக்கப்பட்டதே இந்த வாரியம்.
முஸ்லிம் சமூகத்தின் எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த மார்க்க அறிஞர்கள், வழக்கறிஞர்கள், சிந்தனையாளர்கள், சமுதாயத் தலைவர்கள், பெண் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பின் நிர்வாகக் குழுவில் 41 ஆலிம் பெருமக்கள் உள்ளனர். பொதுக்குழுவில் 25 பெண்கள் உட்பட 201 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
இக்குழுதான், இந்தியச் சட்ட ஆணையத்தின் தலைவர் பல்பீர்சிங் சவ்ஹான் கேட்டுள்ள 16 கேள்விகளை அடியோடு புறக்கணிப்பதாகக் கூறியுள்ளது. என் தகப்பன் யார் என்பதற்கு இவர்கள் கருத்தறிய வேண்டிய தேவை என்ன உள்ளது?
பொதுசிவில் சட்டத்தின் அபத்தங்கள்
இந்துத்துவத்தை அடித்தளமாகக் கொண்டியங்கும் ஓர் அரசு, எல்லாச் சமயத்தாருக்குமான பொதுச் சட்டங்களைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினால், அவை அனைவரின் ஏற்புக்கும் உரிய வகையில் இருக்குமா? என்பது மிகப்பெரும் கேள்விக்குறியே.
உடன்பிறந்த சகோதரியின் மகள் தமிழ்நாட்டில் இந்துப் பெருமக்களிடையே முறைப்பெண் ஆகிறாள். பாண்டிச்சேரி உள்ளிட்ட தமிழகம் தவிர வேறெந்த மாநிலத்திலும் இந்த நடைமுறை இல்லை என்று கூறப்படுகிறது. பொதுசிவில் சட்டம் வந்தால், அனைவரும் அக்காள் மகளை மணமுடித்துக்கொள்ளலாம் என்று சொல்லப்போகிறார்களா? அல்லது அக்காள் மகளை மணமுடிப்பது சட்டப்படி செல்லாது என்று சட்டமியற்றி அதைத் தமிழக இந்துச் சகோதரப் பெருமக்களிடம் திணிக்கப்போகிறார்களா?
இறந்தபின் அடக்கம் செய்வதோ எரிப்பதோ எதுவானாலும் அது அவரவர் சார்ந்த சமய முறைப்படியே இன்றைக்கு நிறைவேற்றப்பட்டுவருகிறது. இது சிவில் சட்டங்களில் வராவிட்டாலும் வழக்காறு என்பதில் வருகிறது. முஸ்லிம்களுக்குச் சமயம் சார்ந்து அடக்கத்திற்கென்று தனிச்சட்டமே உண்டு. பிறசமயத்தாரும் ஈமச்சடங்கு என்றே அதைக் குறிப்பிடுகின்றனர். பொதுசிவில் சட்டம் வந்தால் யாருடைய சட்டம் அல்லது வழக்காறு கொண்டுவரப்படும்? முஸ்லிம்களின் நடைமுறை பின்பற்றப்படும் என்றால் அது பிறசமயத்தார்மீதான திணிப்பு ஆகாதா?
பிற்காலத்தில் இடப்பற்றாக்குறை, நகர விரிவாக்கம் என்ற பெயரில் அடக்கத்திற்கு ஆறு அடியெல்லாம் தர முடியாது. இரண்டடிக்குள் மேலிருந்து கீழாகக் குத்திக்கொள்ளுங்கள் என்று அரசு சொல்லாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இப்படியே போய் இனி எல்லோருக்கும் தனித்தனி இடுகாடு கிடையாது. பொதுவான ஒரேயோர் இடுகாடுதான் எனும் நிலை வராதா? இப்படிக் கேள்விக்குமேல் கேள்வியாகவே நீள்கிறது. விடை வெறும் சூனியமாகவே தெரிகிறது.
இந்தியாவில் கோவா மாநிலத்தில் மட்டுமே கழகத்தைத் துவக்கிவைத்துப் பேசியபோது, ’பாரதத்தில் தேசிய ஒற்றுமையை உருவாக்கப் பொதுசிவில் சட்டம்தான் கருவியாகும் என்று சொல்வது தவறு; இயற்கைக்கு விரோதமானது; விபரீத விளைவுகளை உண்டாக்கக்கூடியது.’ பொதுசிவில் சட்டம் அமலில் உள்ளது. அது ’‘கோவா குடும்பச் சட்டம்“ என்ற பெயரில் அறியப்படுகிறது. அதில் இடம்பெறும் சட்டங்களில் ஒன்று, ஓர் இந்து மனைவி 25 வயதிற்குள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்காவிட்டாலோ அல்லது 30 வயதிற்குள் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுக்காவிட்டாலோ விவாகரத்து கோரும் உரிமை கணவனுக்கு உண்டு என்கிறது. நாடு முழுக்க பொதுசிவில் சட்டம் வந்தால் என்னென்ன அலங்கோலம் நடக்கும் என்பதற்கு இதுவொரு பதச்சோறு மட்டுமே.
பொதுசிவில் சட்ட விவகாரத்தில் இன்றைக்குப் பயன்படுத்தப்படும் வாசகமே (சிஷீனீனீஷீஸீ நீவீஸ்வீறீ நீஷீபீமீ - பொதுசிவில் சட்டம்) சதித்திட்டம் நிறைந்தது. டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாசனத்தை வடிவமைத்தபோது இதற்கு அவர் வழங்கிய பெயர் இதுவல்ல. அவர் வழங்கிய பெயர் யூனிஃபார்ம் சிவில் கோட் (ஹிஸீவீயீஷீக்ஷீனீ நீவீஸ்வீறீ நீஷீபீமீ - சமச்சீர் சிவில் சட்டம்) என்பதுதான். காலங்காலமாக ஒடுக்கப்பட்டுவந்த தலித் இந்து மக்கள் சட்ட ரீதியிலாவது மேல்சாதி இந்துக்களுக்குச் சமமாக இருக்கட்டும், அதன்மூலமாவது எதிர்காலத்தில் சாதிகளிடையே ஏற்றத்தாழ்வு மறைந்து மனிதசமத்துவம் பிறக்கலாம் என்ற பின்னணியில் இந்தப் பெயரையே அம்பேத்கர் சூட்டினார். இந்தப் புள்ளியை மையமாகக் கொண்டே இந்துத்துவ சக்திகள் அன்றைக்கு யூனிபார்ம் சிவில் கோடை எதிர்த்தனர்.
விஷீtலீமீக்ஷீ றீணீஸீபீ என்ற பத்திரிக்கையில் 21/08/1972 அன்று வெளியான ஒரு செய்தியில், “ஆர்.எஸ்.எஸ். தலைவரான குரு கோல்வால்கர், 1972 ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று தீனதயாள் உபாத்யாயா ஆராய்ச்சிக் என்று அறிவுறுத்தி இருக்கிறார்” என்று தெரிவிக்கிறது.
காலப்போக்கில் அம்பேத்கர் முன்மொழிந்த சமச்சீர் சிவில் சட்டம் என்பதன் கருத்தோட்டத்தையே மாற்றி, அதை மதவழிச் சிறுபான்மை மக்களை மிரட்டும் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காக இன்றைய சங்கப்பரிவாரங்கள் காமன் சிவில் கோடு (பொதுசிவில் சட்டம்) என்று வசதியாக பெயர் மாற்றம் செய்துவிட்டார்கள். இதுபோன்ற நுண்ணிய தளங்களில் தகிடுதத்தங்கள் செய்வதில் அவர்கள் கில்லாடிகள். இதை ஊடகங்களும் தம் பங்குக்குப் பொதுவெளிகளில் தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள்.
தனிச்சட்ட அனுமதி முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல
இந்த நாட்டில் சமய வேறுபாடின்றி அனைவருக்கும் பெரும்பாலான சிவில் விஷயங்களில் ஒரே சட்டமே நடைமுறையில் உள்ளது. ஒரு முஸ்லிமுக்கும் இந்துச் சகோதருக்கும் இடையே பொருளாதாரம் சார்ந்த பிரச்சினை ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றால் வட்டி சார்ந்த பொருளாதாரச் சட்டப்படியே அவ்விருவருக்கிடையில் தீர்ப்பு வழங்கப்படும். அதன்படி அந்த முஸ்லிம் வட்டி செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படலாம். இஸ்லாமியச் சட்டப்படி வட்டி செலுத்தமாட்டேன் என்று கூறித் தனியார் சட்ட உரிமையை அவர் கோர முடியாது.
குறிப்பிட்ட ஆறு விஷயங்களில் மட்டும் இஸ்லாமியச் சட்டப்படி நடந்துகொள்ள முஸ்லிம்களுக்கு அரசியல் சாசனம் அனுமதி அளிக்கிறது. திருமணம், மணமுறிவு, ஜீவனாம்சம், பலதாரமணம், பாகப்பிரிவினை, வக்ஃப் ஆகியவையே அந்த விஷயங்களாகும். மற்ற அனைத்து விஷயங்களிலும் எல்லோருக்கும் பொதுவான சிவில் சட்டங்கள்தான் முஸ்லிம்களுக்கும் உள்ளன. எல்லா விஷயங்களிலும் முஸ்லிம்களுக்குத் தனிச்சட்டம் கிடையாது என்பது கவனிக்கத் தக்கதாகும்.
முஸ்லிம்களுக்குத் தனிச்சட்டம் அனுமதிக்கப்பட்டதைப் போன்றே பிறசமயத்தாருக்கும் தனிச்சட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்துவாக இருந்து கூட்டுக் குடும்பமாக வசித்தால் வரிச்சலுகை பெற அரசியல் சாசனம் வகை செய்கிறது. ஆனால், மற்றச் சமயத்தாருக்கு இந்தச் சலுகையில்லை. சீக்கியராக இருந்தால் அவர்களின் சமய உரிமைப்படி இராணுவத்திலும் தாடி வைத்துக்கொள்ள அனுமதிக்கும் அரசியல் சாசனம், மற்றச் சமயத்தாருக்கு இதை அனுமதிக்காது. அவ்வாறே, எங்கேயும் எப்போதும் கிர்பான் (அலங்கரிக்கப்பட்ட குறுவாள்) வைத்துக்கொள்வதைச் சமய உரிமையாகச் சீக்கியர்களுக்கு அனுமதிக்கும் அரசியல் சாசனம் மற்றவர்களுக்கு இதை அனுமதிக்காது.
பொதுசிவில் சட்டம் அனைவருக்கும் எதிரானதே
இன்றையச் சூழலில் பொதுசிவில் சட்டக் கூப்பாடுகளுக்கு முஸ்லிம் சமூகமே குறியிலக்காகக் கொள்ளப்பட்டாலும், இது சமய வேறுபாடின்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மதவழிச் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மட்டுமன்றி கிறித்தவர்கள், சீக்கியர்கள், ஃபார்சீகள், யூதர்கள் முதலானோரின் சமய, கலாசார, பண்பாட்டுத் தனி அடையாளங்களை அழித்தொழித்துவிடும். அடையாளத்தைத் தொலைத்தபிறகு ஒரு சமூகம் உயிர்வாழ்வது எவ்வாறு?
ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை முறையில் ஆதிக்கவாதிகளின் அடக்குமுறை பாய்ச்சப்படுவதற்குப் பொதுசிவில் சட்டம் வழிவகுக்கும். நாட்டு மக்களின் அமைதிக்கு வேட்டுவைக்கின்ற தீய சக்திகளின் கைகளில் இந்தச் சட்டம் அழிவாயுதமாகவே பிரயோகம் செய்யப்படும். இதனால், சமூக நல்லுறவு சிதைந்து இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படப் போவதுதான் மிச்சம்.
ஆனாலும், இன்றைக்குக் குற்றவியல் சட்டங்களும் நாடு முழுக்க ஒரே மாதிரியாக இல்லை என்பது கவனத்திற்குரியது. சென்னையில் இரகசியமாக விபசார விடுதி நடத்தினாலும் குற்றம் என்று சொல்லும் இந்திய தண்டனைச் சட்டம், மும்பையில் விளம்பரப் பலகை வைத்துப் பகிரங்கமாக நடத்தினாலும் குற்றமில்லை என்கிறது. குற்றவியல் தண்டனைச் சட்டத்திலேயே மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடு இருப்பதைத்தானே இது சுட்டிக்காட்டுகிறது?
நாம் என்ன செய்ய வேண்டும்?
நெருக்கடி ஏற்படும்போது மட்டும் ஷரீஆ பற்றிக் கவலைப்படுகிறோம். ஆவேசம் கொள்கிறோம். எல்லாம் சரிதான். ஆனால், பொதுவான நேரங்களிலும் ஷரீஆ குறித்து நாம் அதிகம் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதானே நியாயம்? நோய்வாய்ப்படும்போது உடல்நலத்தை மீட்கப் போராடும் நாம் உடல்நலத்துடன் இருக்கும்போது அதைத் தக்கவைத்துக்கொள்வது குறித்து அக்கறை கொள்ள வேண்டுமல்லவா?
எனவே, ஒவ்வொரு முஸ்லிமும் ஷரீஆ சட்டங்களைப் பொதுவாகவும் திருமணம், விவாகரத்து போன்ற குடும்பம் சார்ந்த ஷரீஆ சட்டங்களைக் குறிப்பாகவும் கற்கும் சூழலை பள்ளிவாசல் ஜமாஅத்துகள் எளிதாக்கித் தர வேண்டும். ஒருவரின் திருமணத்தை முன்நின்று நடத்திக் கொடுக்கும் ஜமாஅத், குடும்ப வாழ்க்கையில் அவருக்குப் பிரச்சினை (தலாக், குலா) எழுந்தால் அதிலும் ஜமாஅத்தே முன்நின்று தீர்வு வழங்க வேண்டும். இதற்காக, ஜமாஅத்தை அணுகியே தீர்வு பெற முயல வேண்டும் என்று சம்பந்தப்பட்டவரிடம் திருமணத்தின்போதே வாக்குறுதி பெற்றுக்கொள்ளலாம். ஜமாஅத்தும் முஸ்லிம் பொதுமக்களும் தத்தம் பொறுப்புகளை உணர்ந்து நடந்துகொண்டால் எதிர்காலத்தில் ஷரீஆவுக்கெதிரான கூச்சல்களைக் குறைக்கலாம்.
முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதோரும் இணைந்து கலந்துகொள்கின்ற திருமண மேடைகள், குடும்பம் சார்ந்த இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள் பேசப்படும் இடங்களாக மாற வேண்டும். இது ஒப்புக்காக இல்லாமல் உண்மையாகவே நடக்க வேண்டும். கடந்த காலங்களில் திராவிடக் கட்சிகள் திருமண நிகழ்ச்சிகளில் கொள்கைகளைப் பேசிப்பேசியே அதிகாரம்வரை அனைத்தையும் கைப்பற்றினார்கள்.
மொத்தத்தில் தலாக் போன்ற பயனுள்ள சட்டதிட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் கட்டுப்படுத்தியே தீர வேண்டும். இல்லையேல் இதைப் பயன்படுத்தி நம்மைத் தனது வழிக்கு இழுக்கவே உலகம் முயலும். “அவர்கள் (ஏக இறையை ஏற்க) மறுத்ததைப் போன்று நீங்களும் (ஏற்க) மறுத்து (கொள்கையளவில்) நீங்களும் அவர்களும் சரிசமமாகிவிட வேண்டும் என்று விரும்புகின்றனர்” (4:89) என்று அல்லாஹ் கூறியிருப்பது எவ்வளவு தூரம் உண்மை பாருங்கள்.