வங்கி என்னும் வட்டிக்கடை!

bankgs

கடன் கொடுத்துப் பெறுவதும் இரவல் வாங்குவதும் பழங்கால நடை முறை. ஒருவருக்கொருவர் உதவி என்ற அடிப்படையில் ஆரம்பத்தில் இரவல் வாங்கிய பொருளையே திருப்பிக் கொடுத்தார்கள் அல்லது அதற்கு பகரமானதை திருப்பிக் கொடுத்தார்கள்.
பணம் எனும் கருவி தோன்றிய போது அதை கடனாக பயன்படுத்துவதற்கு முதலில் ஒரு “கட்டணத்தை” நிர்ணயித்தார்கள். காலப்போக்கில் அதுவே “வட்டி” என்றழைக்கப்பட்டது. அந்த வகையில் வட்டியும் ஒரு பழங்காலத் தொழில்.
காலப் போக்கில் இலாபம் இல்லாததன் காரணமாக வெறுமனே கடன் கேட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். வேறு வழியின்றி கடன் வாங்கியவர்களின் வறுமையை வட்டி மேலும் துன்பமாக்கியது. வட்டியினால் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்விலும், குடும்பத்திலும் சீரழிவுகள் ஏற்பட்டத்தை நிதர்சனமாகக் கண்ட மக்கள் வட்டியை வெறுத்தார்கள்.
கி.மு.விற்கு முன்பு வாழ்ந்த ஐரோப்பிய தத்துவ ஞானிகள் கூட வட்டி வாங்குவதை வெறுத்திருக்கிறார்கள். அரிஸ்டாட்டில் பணத்தை முட்டையிடாத கோழிக்கு ஒப்பிட்டார். ரோம சாம்ராஜ்ஜியம் அதன் தொடக்க காலங்களில் வட்டியை தடை செய்திருந்தது. கிறிஸ்தவ மத நிறுவனங்கள் வட்டியோடு இணைந்த எல்லா விதமான கொடுக்கல் வாங்கல்களையும் தடை செய்திருந்தது.
13 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கிறிஸ்தவ மத நிறுவனங்களின் செல்வாக்கு குறைய ஆரம்பித்தது. கிறிஸ்தவ மத நிறுவனங்களால் வட்டித் தொழில் செய்தவர்களை கட்டுக்குள் வைக்க இயலவில்லை.
ஆனாலும் மாற்று வழி காணப்படாத சமூகத்தில் வட்டி கொடுப்பவர்கள் வாங்குபவர்களின் மீது அதிகாரம் செலுத்த ஆரம்பித்தார்கள். அரசர்களுக்கும் மந்திரிப் பிரதானிகளுக்கும் போர் செய்யவும் பகட்டு வாழ்க்கை வாழவும் பணம் தேவைப்பட்டது. அதை வட்டிக்கு கொடுப்பவர்கள் வழங்கினார்கள். அதற்கு பகரமாக வட்டியும் கூடுதலாக அரசாங்க வேலைகளில் முன்னுரிமை, வரி விலக்கு, சிறப்பு வியாபார அனுமதி, சுரங்கம் தோண்ட அனுமதி, பொதுவேலைகளில் ஒப்பந்தம் என பல சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பொது மக்கள் பார்வைக்கு இது கொண்டு வரப்படவில்லை. இன்றும் அப்படியே நடந்து வருகிறது. ஆனால் அரசு வாங்கும் வட்டியின் விளைவுகளை, இழப்புகளை குடிமக்களே தாங்க வேண்டிய நிலையே தொடர்கிறது.
தொழில் புரட்சி ஏற்பட்டு உற்பத்தியை பெருக்குவதற்கு முதலாளிகளுக்குத் பணம் தேவைப்பட்டது. அவர்களுக்கு செல்வந்தர்கள் வட்டிக்கு பணம் கொடுத்தார்கள். காலப் போக்கில் வட்டித் தொழில் செய்தவர்களின் செல்வாக்கு உயர்ந்தது. அவர்கள் முதலாளிகளை கட்டுப்படுத்தினார்கள். முதலாளிகள் அரசை கட்டுப்படுத்தினார்கள்.
1545 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வட்டி சட்டப்பூர்வமான தொழிலாக அங்கீகரிக்கப்பட்டது. அன்றை சிந்தனையாளர்களும் கூட வட்டியை நியாயப்படுத்திய விதம் அருவருக்கத்தக்கதாக இருந்தது. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சர் ஃபிரான்சிஸ் பேகன் (1591 - 1626) என்பவர் “மனிதர்கள் கடன் கொடுப்பதும் வாங்குவதும் அவசியமானது. ஆனால் அவர்கள் மனம் கல்லாகிவிட்து. தங்களுக்கு ஏதாவது இலாபம் இல்லாமல் பணத்தை கடனுக்கு கொடுக்க மாட்டார்கள். எனவே வட்டியை அனுமதிக்க வேண்டும்” என்கிறார்.
படிப்படியாக 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வட்டிக்கு எதிரான தடை எல்லா மேற்கத்திய நாடுகளிலும் சட்டப்படி நீக்கப்பட்டது. அதன் பிறகே வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளியல் படிப்பின் அடிப்படைப் புத்தகமான ஆதம் ஸ்மித்தின் ‘தேசங்களின் செல்வம் (wealth of nations)’ எனும் புத்தகம் 1750 இல் வெளியிடப்பட்டது.
வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார கொள்கைகள் பாடத்திட்டங்களாக கல்விக் கூடங்களில் வைக்கப்பட்டது. வட்டிப் பொருளாதாரமே உண்மையான பொருளாதாரம் என்று நம்பிய படிப்பாளிகள் உருவாகத் தொடங்கினார்கள்.
சந்தர்ப்ப சூழ்நிலையில் வாங்கப்பட்ட வட்டி அடுத்து வந்த தலைமுறைகளில் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் பொதுவாக ஆக்கப்பட்டது. சிரமமான நேரத்தில் வட்டி வாங்குவது என்றில்லாமல் ஆடம்பர வாழ்க்கைக்கும், வீண் செலவிற்கும் சர்வ சாதாரணமாக வட்டி வாங்கும் பழக்கம் தோன்றியது.
உலக கந்து வட்டிக் கடை
அரசாங்கம், வியாபாரிகள், தனிமனிதர்கள் என எல்லோருக்கும் பல்வேறு காரணங்களுக்காக பணம் தேவைப்படுகிறது. இதற்கு எளிய நடைமுறை இரவல் - கடன் வாங்குவது. ஆனால் கடன் கிடைக்கும் வரை பொறுமை இல்லாதவர்கள், பதற்றத்தில் இருப்பவர்களுக்கு இன்றைய மனிதர்களால் “வட்டி” ஒன்றே தீர்வாக முன்வைக்கப்படுகிறது. ஏனென்றால் அதுதான் லாபகரமானது என்று நினைக்கிறார்கள்.
இன்று அரசர்களுக்குப் பதிலாக ஜனாதிபதிகளும் பிரதமர்களும் வந்து விட்டார்கள். தனிப்பட்ட வட்டி கொடுப்பவர்களுக்குப் பதிலாக பன்னாட்டு நிதி நிறுவனங்களும், உள்நாட்டு வங்கிகளும் வந்து விட்டன.
ஐ.எம்.எஃப். மற்றும் உலக வங்கி ஆகிய இரண்டும் உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் கந்து வட்டிக் கடை. கடன் கொடுக்க இவர்கள் போடும் உத்தரவே நமது பார்வைக்கு உடன்படிக்கை என்று கூறப்படுகிறது. கடன் வாங்கும் நாடுகள் ஐ.எம்.எஃப். சொல்லும் கம்பெனிகளுக்கு தங்களது நாட்டின் வளங்களை தானம் செய்ய வேண்டும். ஐ.எம்.எஃப் சொல்லும் திட்டங்களை தங்களது நாடுகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்கள் சொல்லும் கம்பெனிகள் கடை திறக்க அனுமதிக்க வேண்டும். இதற்கு ஒத்துக் கொண்டால்தான் கடன்.
இந்தியாவில் உள்ள பெரு நிறுவனங்கள், இயற்கை வளங்களை சுரண்டும் கம்பெனிகள் என பலவும் அப்படி வந்தவைதான். அவர்களின் பாடத் திட்டங்களைப் படிக்க வேண்டும். அவர்களின் கம்பெனிகளில் உழைக்க வேண்டும். அவர்களின் உற்பத்திகளையே வாங்க வேண்டும். ஆக நமது முழு வாழ்வும் கம்பெனிகளின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டு விட்டது. காரணம் நமது நாடு ஐ.எம்.எஃப்ஃபில் வாங்கிய வட்டி. இதுதான் இன்றைய உலக நடைமுறை. வட்டிக்கு கொடுப்பவர்களே உலகை ஆளுகிறார்கள்.
உள்நாட்டு வங்கிகள் உள்ளூர் வட்டிக் கடை.
இந்தியாவின் பழமையான வங்கி பாரத ஸ்டேட் வங்கி 1806 இல் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் மிகப் பெரிய வங்கி. மத்திய மாநில அரசுகளின் வரவு செலவுக் கணக்குகள் இவ்வங்கி மூலமே நடைபெறுகின்றன. வங்கிகளில் பலவிதமான சேவைமுறைகள் இருந்தாலும் வங்கிகளைப் பற்றி பேசும் போது முதலில் நினைவுக்கு வருவது வங்கிக் கடன்களே!
வங்கி என்பது இந்திய வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின்படி (Banking Act) பொதுமக்களிடமிருந்து அவர்களுடைய சேமிப்பைத் திரட்டி அதை தேவையுள்ளவர்களுக்கு கடனாகவோ அல்லது முதலீடு செய்யவோ நிறுவப்பட்ட ஒரு நிறுவனம். பொதுமக்களின் சேமிப்பை முதலீடாக மாற்றும் ஒரு இடைநிறுவனம் (மிஸீtமீக்ஷீனீமீபீவீணீக்ஷீஹ்) என கூறலாம்.
இந்தியாவில் 1991 க்குப் பிறகு தொழிலைப் பெருக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்கும் போக்கு அதிகமாகியது. கடன் வாங்கிய பெரு நிறுவனங்கள் அதானி, அம்பானி போன்ற முதலாளிகள் கடனையும் திருப்பித் தருவதில்லை. வட்டி கூடக் கட்டுவதில்லை. தொடர்ந்து வட்டி கட்டவில்லை என்றால் அதை வாராக் கடன் என்று கருத வேண்டும். அதை தவிர்ப்பதற்காக, மீண்டும் அதே முதலாளிக்கு மேலும் கடன் கொடுத்து, அந்த கடன் தொகையிலிருந்தே வட்டியை வரவு வைத்திருக்கின்றன அரசுடைமை வங்கிகள்.
2015 ஆம் ஆண்டு இறுதியில் வாராக்கடன் குறித்து அப்போது ஆர்.பி.ஐ. கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் கேட்ட போது, 4 இலட்சம் கோடி என்று அரசு வங்கிகளின் தலைவர்கள் பொய்க்கணக்கு காட்டினார்கள். அதைத் துருவி ஆராய்ந்தபோது மூன்றே மாதங்களில் வாராக்கடன் 6 இலட்சம் கோடி என்ற கணக்கு வெளியே வந்தது.
பி.என்.பி பாரிபாஸ் என்ற நிதித்துறை ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் எகனாமிக் டைம்ஸ் இல் வெளிவந்திருக்கிறது. இந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அரசு வங்கிகள் கொடுத்திருக்கும் கடன் 75 இலட்சம் கோடி. அவற்றில் 12 இலட்சம் கோடி வாராக்கடன் என்கிறது அந்த அறிக்கை.
2013 முதல் 2015 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் பாரத ஸ்டேட் வங்கி write off (பெரு முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை. கடன் கொடுப்போர் பட்டியலிலிருந்து அவர்கள் பெயரை மட்டுமே எடுத்திருக்கிறோம், ஆனால் கடனை வசூலித்து விடுவோம் என்று போக்கெழுதிய) மொத்தக் கடன் தொகை, ரூ.40,084 கோடி! இப்போது (நவ 16, 2016)ரூ.7,016/- கோடியையும் இவற்றோடு சேர்த்தால், ஏறத்தாழ 47,000 கோடியைக் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த ஒரே ஒரு வங்கி மட்டும் இந்தியாவின் பரமஏழைகளுக்கு வழங்கியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளும் கூட்டாகச் சேர்ந்து 2013 - 2015 ஆகிய மூன்றாண்டு காலத்தில் மட்டும் போக்கெழுதிய கடன் தொகை, ரூ. 1, 14,000 கோடி!
இப்படி ஒரு சிறு தொழிலதிபரோ வியாபாரியோ கடன் வாங்க முடியுமா? விவசாயிகளையும், மாணவர்களையும் வாங்கிய கடனுக்காக அசிங்கப்படுத்தும் இந்த வங்கிகள் பெரு முதலாளிகளிடமும், பெரு நிறுவனங்களிடமும் அசிங்கப்பட்டு நிற்கிறது.
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வர வேண்டிய பல லட்சம் கோடிகள் வாராக்கடனில் சேர்ந்துவிட்டன. வங்கிகள் திவாலாகும் சூழலில் இருக்கிறது. வங்கிப் பொருளாதாரத்தை வலிமைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஐ.எம்.எஃப். ம், உலக வங்கியும் கொடுத்த ஆலோசனைப்படி கேஸ் மானியம், ரேஷன் முறை போன்ற மானியங்களை ஒழிக்க வேண்டும். அதே போன்று மளிகைக் கடை ரோட்டுக் கடைகளை ஒழித்து பெரும் பெரும் நிறுவனங்களின் வியாபாரத்தை பெருக்க வேண்டும். அதற்காகத்தான் 500, 1000 ரூபாய்களை முடக்கி சாதாரண மக்கள் கையில் இருக்கும் பணத்தை, ‘வங்கியில் போடு’ என கழுத்தை பிடித்து தள்ளுகிறது மத்திய பா.ஜ.க. அரசு.
வங்கிக்கு நான் ஏன் போக வேண்டும், எனது உழைப்பில் வந்த பணத்தை நான் ஏன் வங்கியில் சேமிக்க வேண்டும். அதை நானே சேமிப்பதால் யாருக்கு என்ன பிரச்சனை என்பதுதான் கேள்வி ? வங்கிகளில் பணம் போடப்பட்டால் வரிகள் முறையாக வசூலிக்கப்படும் என்கிறார்கள் நல்லவர்கள்.
2013இல் மும்பையில் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்கள், 150 கோடி ரூபாய் அளவிற்கு, சேவை வரி மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அரசு நிறுவனங்களும் வரி பாக்கி வைத்துள்ளன நிலையில் எல்லா பணமும் வங்கியின் முன் வந்து விட்டால் வரி ஏய்ப்பு இருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
500 1000 நோட்டுகள் செல்லாது என்ற ஒரு அறிவிப்பு எல்லோரையும் நல்லவர்களாக மாற்றிவிடுமா? வரியை வசூல் செய்வதற்கு அரசின் பல்வேறு துறைகள் இருக்கிறது. அதன் வழியாக சட்டங்களை கூர்மைப்படுத்தி முறைப்படுத்தலாமே? வங்கிக்கு விருப்பப்பட்டுப் போனால் பரவாயில்லை. ஏன் கட்டாயப்படுத்தி தள்ளுகிறார்கள்?
வங்கியில் பல்வேறு சேவைகள் இருந்தாலும், தவிர்க்க முடியாத ஒன்றாக வங்கி இருந்தாலும் அடிப்படையில் வங்கி என்பது நிறுவனமாக்கப்பட்ட வட்டிக்கடை. லாபம் ஒன்றே அதன் குறிக்கோள், சேவை அல்ல!
வங்கி இரண்டு விதமான வட்டி முறைகளைக் கொண்டு செயல்படுகிறது.
1. வங்கியில் பணம் போடுபவர்களுக்கு வங்கி கொடுக்கும் வட்டி
2. வங்கியில் கடன் வாங்கியவர்களிடம் வங்கி வாங்கும் வட்டி
சுருக்கமாகச் சொன்னால் வங்கி நம்மிடம் கடன் வாங்கி தேவைப்படுவோருக்கு கடன் கொடுக்கிறது. அதற்கு வட்டியை வசூலித்து பணம் கொடுத்தவர்களுக்கு லாபம் கொடுக்கிறது. மேலும் ஊழியர்கள் சம்பளம் போன்ற வங்கியின் பிற செயல்பாடுகளுக்கு செலவிடுகிறது.
வங்கி லாபத்தை பெருக்கும் நோக்கில் நீண்டகால வட்டியை ஊக்கப்படுத்துகிறது, பெரிய நிறுவனங்களுக்கு கடனுதவிகளை வாரி வழங்குகிறது.
இப்போது கடன் தேவையானோர் வங்கிகளைத் தேடுவது மாறி கடன் வாங்கும் தனி நபர்களை, நடுத்தரக் குடும்பங்களை வங்கிகள் தேடத் தொடங்கிவிட்டன. தனி நபர்களுக்கு வழங்கப்படும் இந்தக் கடன்கள் உற்பத்தியை பெருக்குபவையல்ல, நுகர்வை அடிப்படையகாகக் கொண்டவை.
தனிநபர்களிடம் கடன் கொடுத்து அது வட்டியுடன் திரும்ப வராவிட்டால் வண்டியைக் கைப்பற்றுவது, வீட்டைக் கைப்பற்றுவது, பெயரை வெளியிட்டு அவமானப்படுத்துவது என்று அசலை வசூல் செய்யும் வங்கிகள். பெரிய நிறுவனங்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்வதில்லை. அதன் பலன்தான் 12 லட்சம் கோடி வாராக் கடன். இதனால் வங்கிகள் தள்ளாட்டத்தில் இருக்கின்றன அதை தூக்கி நிறுத்த வங்கிக்கு வராத மக்களை கழுத்தைப் பிடித்து இழுக்கின்றது பா.ஜ.க அரசு. நம்மிடம் பணம் வாங்கி ஊரில் உள்ள கொள்ளைப் பணக்காரர்களுக்கு பங்கு வைக்கும் வங்கியில் நமது பணத்தை ஏன் சேமிக்க வேண்டும்? அது நமது விருப்பம்.
வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டமும் இந்த அரசிடம் இருக்கிறது. தனியார் கைகளுக்குப் போகும் வங்கிகளிடம் எந்த நம்பிக்கையில் வரவு செலவு வைத்துக் கொள்ள முடியும்? முறையற்ற கடன்களால் வங்கிகள் திவாலாகும் போது மக்களின் பணத்தால் வங்கிகளைக் காப்பாற்ற நினைப்பது எந்த வகையில் நியாயம்? தனியார் வசம் இருந்த வங்கிகளின் வரைமுறையற்ற கடன்களால்தான் உலகின் பல நாடுகள் திவாலாகிக் கொண்டிருக்கின்றன.
வங்கிகள் குறிப்பிட்ட சிலரை வாழ வைத்து பலரை சிரமத்தில் தள்ளுகிறது. நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமும் ஒரு இடத்தில் குவிந்து அந்த நிதி நிறுவனம் ஏதாவது ஒரு கட்டத்தில் தள்ளாடத் தொடங்கினால் நாடே திவாலாகும் என்பதுதான் நிதர்சனம்.
அவரவர் தமது சேமிப்பை தங்களது கைகளில் வைத்திருந்தால் பொருளாதாரம் பரந்து பட்டதாக இருக்கும். எந்த ஒரு தனிநிறுவனத்தின் அழிவும் நாட்டை பாதிக்காது.
இது குறித்து அமெரிக்க தேசிய வங்கியின் (federal reserve) தலைவராக 1934-48 வரை இருந்த மரிநேர் எக்லஸ் தனது புத்தகத்தில் “மக்களின் செல்வம் பரந்து பட்டு இருக்கும் போது மட்டுமே அந்த நாடு உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்கும் சக்தி மக்களுக்கு இருக்கும், இப்படி பெரும்பான்மை மக்கள் பொருட்களை வாங்குவதன் மூலமே இந்த பொருளாதாரம் வளர்ச்சி பெறும். ஆனால் 1929-30 களில் மக்களிடம் செல்வம் பரந்து பட்ட நிலையில் இல்லாமல் செல்வம் ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்தது. இப்படி சமச்சீரற்ற முறையில் செல்வம் மக்களிடம் பரவி இருந்ததே பொருளாதார சரிவிற்கு முக்கிய காரணம்” என்கிறார்.
இன்றைய வங்கியும், வங்கியின் செயல்பாடுகளும் வட்டிப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டவை. வட்டி ஒரு காலத்திலும் வளர்ச்சியைத் தராது.
மக்களின் பொதுவான இயல்பு உழைத்து வரும் வருமானத்தின் மூலம் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதும் வருமானம் குறையும் போது செலவுகளை சுருக்கிக் கொள்வதும்தான் காலம் காலமாக நடந்து வரும் மனிதர்களின் யதார்த்த வாழ்க்கை முறை.
வங்கி போன்ற வட்டித் தொழில் செய்பவர்களுக்கு “லாபம்” ஒன்றே குறிக்கோள். ஆனால் சமூகப் பொறுப்புள்ளவர்களுக்கு அதையும் தாண்டி வேறுபொறுப்புகளும் இருக்கின்றன. முழு சமுதாயத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வது, இருப்பவர்களின் நலனையும், இனிமேல் வர இருக்கும் தலைமுறைகளின் நலனையும் காற்ற வேண்டிய கடமை இருக்கிறது.
இன்றைய வங்கி நடைமுறைகளை மாற்றுவதற்கு மாற்றுச் சிந்தனையாளர்கள் உருவாக்கப்பட வேண்டும். இன்று நிதி மேலாண்மை பிரிவில் இருப்பவர்கள் வட்டித் தொழில் முதலாளிகள் உருவாக்கிய வட்டி சார்ந்த நடைமுறைகளையும் அதன் சட்டங்களையுமே பயின்று வந்தவர்கள், இவர்கள் வழங்கும் தீர்வுகள் மேலும் மேலும் முதலாளிகளுக்கு லாபத்தை அதிகப்படுத்துமே தவிர இன்றைய வட்டி சார்ந்த சிக்கல்களுக்கு இவர்களால் ஒருகாலும் தீர்வைத் தர இயலாது.
பெரு நிறுவனங்கள் ஊக்குவிக்கும் வீண் விரையத்திற்காக பெருமைக்காக செலவிடுவதை எல்லா மதங்களும், அறிஞர்களும் கண்டிக்கிறார்கள்.
குறிப்பாக முஸ்லிம்களுக்கு வட்டி நடைமுறை சிக்கல் மட்டுமல்ல, கொள்கையளவிலும் தடை செய்யப்பட்டது.
இஸ்லாமிய நாடுகள் காலணித்துவ நாடுகளாக இருந்த காலத்திலும் கூட வட்டியின் பக்கம் முழுமையாக சாராமல் இருந்தது. வட்டி தனிநபர்களின் மறைமுகத் தொழிலாக முறைப்படுத்தப்படாததாக இருந்தது. காரணம் வட்டி குறித்த இஸ்லாத்தின் பார்வை முஸ்லிம்களை வட்டியிலிருந்து ஒதுங்கியே வாழ வைத்தது. எனவே மாற்று வங்கி முறையை கொண்டு வருவதும், வட்டி இல்ல பொருளாதாரத்துறை சார்ந்த வல்லுநர்களை உருவாக்குவதும் முஸ்லிம் சமூகத்திற்குத்தான் கடமை. இல்லை என்றால் அதற்கு அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.