நான் என்ன பண்றது..? நீங்களே சொல்லுங்க...!

 கே. ஆர். மஹ்ளரி

▪ காட்சி - 01
கடைக்குட்டி பையன் : அய்ய்ய்யா...சனி, ஞாயிறு ஸ்கூலு லீவு விட்டுட்டாங்க. இனி ரெண்டு நாளைக்கு நல்லா ஜாலியா விளையாடலாம்..
ஆமா, இப்ப என்ன பண்ணலாம்? என்ன விளையாடலாம்? கிச்சன் ல போயி கிரிக்கெட் விளையாடலாம். [ கிச்சன் ல கிரிக்கெட் விளையாடல் ]
உம்மா : அல்லல்லாஹ்...! ஸ்கூல் லீவு விட்டுட்டாங்களா? ரெண்டு நாளைக்கு இவன் தொல்லய தாங்க முடியாதே...! நா என்ன பண்ணுவேன்? அவரு பாட்டுக்கு வெளிய போயிருவாரு, இங்க நாங்கெடந்து இவனோட மாரடிக்கணுமே, என்னப் படச்சவனே...!
அடேய் அத்துல் காதரு, ஏந் தாயி, ஏஞ் செல்லம், நீ நல்லா இருப்ப. போடா, போயி பாட்டி கிட்டப் போயி கத கேளுடா.
பையன் : சரிம்மா, நான் பாட்டிட்ட போறேன்.
உம்மா : [ மனசுக்குள்...] ஹைய்யா, நல்ல வேள, நா தப்பிச்சேன். பாட்டி (அதான் என்னோட மாமியா) நல்லா ஏம் பையன்ட்ட மாட்டிக்கிட்டாங்க...!
▪ காட்சி - 02
[பாட்டி ஹால்ல சீரியல் பார்த்துக் கொண்டிருத்தல்]
பேரன் : பாட்டி, பாட்டி! எனக்கொரு கத சொல்லு பாட்டி. டைமே போக மாட்டேங்குது, ரொம்ப போரடிக்குது பாட்டி!
பாட்டி : அடே பேரான்டி, டீவி யில சீரியல் பார்த்துக் கிட்டு இருக்கேன்டா. என்ன தொந்தரவு பண்ணாதடா, நீ நல்லா இருப்ப.
மேல மாடியில ஒன்னொட அக்கா இருக்கா, அங்க போயி விளையாடு. அப்படியே போறப்ப அந்த மேச மேல கண்ணாடி இருக்கு, அதக் கொஞ்சம் எடுத்துக் கொடுத்துட்டுப் போடா.
பேரன் : [ மனசுக்குள்ளாற மொனங்குதல்...]
அந்தக் காலத்துப் பாட்டிமாருக பேரப்புள்ளைங்களுக்கு நல்ல நல்ல கத சொல்லும்ங்க. இந்தக் காலத்துப் பாட்டிமாருங்க என்னடான்னா சீரியல்ல மூழ்கிக் கிடக்குதுங்க. கொடுமடா.
பேரன் : சரிங்க பாட்டி, இந்தாங்க கண்ணாடி.
பாட்டி : அட கூறுகெட்ட பேரான்டி, என்னோட மூக்குக் கண்ணாடிய கேட்டா, மொகம் பாக்குற கண்ணாடிய கொண்டு வந்து தர்ற! நா என்ன அழகிப்போட்டிக்கா போகப்போறேன்?
பேரன் : சொல்றத தெளிவா சொல்ல வேண்டியது தான? சரி,சரி. இந்தா பாட்டி, மூக்குக் கண்ணாடி. அத ஒழுங்கா போட்டு சீரியலப் பாரு. நா அக்கா கிட்ட போறேன். அங்க போயாவது விளையாட முடியுமான்னு பாக்குறேன்.
▪ காட்சி - 03
[ அக்கா கண்ணாடி முன் நின்று மேக்கப் போட்டுக் கொண்டிருத்தல் ]
தம்பி : அக்கா, அக்கா! நான் இங்க விளையாடப் போறேன். கொஞ்சம் பர்மிஷன் தர்றியா..?
அக்கா : அதெல்லாம் முடியாது. இன்னக்கி மாதவனோட இறுதிச் சுற்று படம் பாக்கப் போறேன். ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கீழ வெயிட் பண்றாங்க. நான் மேக்கப் முடிச்சுட்டு சீக்கிரம் கிளம்பணும். அதனால அண்ணன் ரூமுல போயி கார்ட்டூன் படம் பாரு.
தம்பி : சரிம்மா அக்கா, இறுதிச் சுற்று படம் பாத்து இறுதி நாள்ல நரகத்துக்கு டிக்கெட் புக் பண்ணப் போறீங்க. போங்க, போங்க.
(மனசுக்குள்...) ச்சே, இப்படி அங்க இங்க அலையுறதுலயே இன்றைய நாளு பூரா கழிஞ்சிடும் போல தெரியுதே. அப்புறம் எங்க விடுமுறைய எஞ்சாய் பண்றது?
சரி, நம்மோட பாசக்கார அண்ணன் என்ன சொல்றார்னுதான் பாப்போமே.
▪ காட்சி - 04
[ அண்ணன் டீவி யில் சினிமா பார்த்துக் கொண்டிருத்தல் ]
தம்பி : அண்ணே, அண்ணே...! ரிமோட்ட கொஞ்சம் என்ட்ட தா. நான் கொஞ்ச நேரம் கார்ட்டூன் பாக்கப் போறேன். ப்ளீஸ்...ப்ளீஸ் அண்ணே...!
அண்ணன் : இப்ப ரூம விட்டு வெளிய போறீயா, இல்லியா? ரிமோட்ட தொட்ட...தொலச்சுப் போடுவேன் தொலச்சு. வாப்பா கிட்ட சொல்லி நல்லா திட்டு, அடி வாங்கித் தந்திடுவேன். போ,போ...வெளிய ஹால்ல தாத்தா கிட்டப் போயி விளையாடு.
தம்பி : சரிங்க அண்ணா. [ மனசுக்குள்...] இந்த அண்ணன் மாருக, அக்கா மாருக எல்லாம் இப்படித்தான்.
சினிமா படத்துலதான் பாசமலர், நேசமலர் - தம்பிக்காக, தங்கைக்காக என்று எக்ஸ்ட்ரா தியாகம் பண்றது மாதிரி ஃபிலிம் காட்டுவாங்க.
ஆனா, ரியல்ல ஒண்ணும் பண்ண மாட்டாங்க. "அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்துல (பாடல் படித்தல்).
இப்படி தனியா நின்னு சோகப்பாடல் பாடுற மாதிரி ஆயிப்போச்சே நம்ம நிலமை. சரி, சரி. நம்ம தாத்தா கிட்டயாவது போவோம்.
▪ காட்சி - 05
[ தாத்தா சாய்வு நாற்காலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருத்தல் ]
பேரன் : தாத்தா, தாத்தா...! நீயாவது நல்ல கத சொல்லு. இல்லாட்டி, நீ என்னை மாதிரி குட்டீஸா இருந்தப்ப நடந்த சுவையான நிகழ்ச்சி இருந்தா அதச் சொல்லு. இல்லைன்னா, இங்க என்னைய விளையாடவாவது விடு தாத்தா.
தாத்தா : அடே குரங்கு...வாலு ஒண்ணுதான்டா ஒனக்கு பாக்கி. நானே இப்பத்தான் எல்லாத்தயும் செட்டில் பண்ணிட்டு அல்லான்னு கட்டில்ல சாய்ஞ்சிருக்கேன். என்னைய கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க விடேன்டா.
போடா, போ. கிரிக்கெட் மட்டைய எடுத்துக் கிட்டுப் போயி கிரவுண்ட் ல விளையாடு. வெளியே போடா.
[ மனசுக்குள்...] வீடு போ,போங்குது. காடு வா, வாங்குது. இவன் என்னடான்னா கத சொல்லு, ஒன்னொட ஃபிளாஷ் பேக்கச் சொல்லுன்னு உசுர வாங்குறான்.
பேரன் : சரிங்க தாத்தா...நான் வெளியில போயி கிரவுண்ட்ல விளையாடுறேன். நீ நல்லா குறட்ட விட்டு தூங்கு தாத்தா.
▪காட்சி - 06
[ கிரிக்கெட் மட்டைய தூக்கிட்டு வெளிய போயி விளையாடுதல். வாப்பா வெளிய போயிட்டு மதிய உணவுக்காக வீடு திரும்புதல் ]
மகன் : [ மனசுக்குள்...] ஆஹா, வெளிய ஊர சுத்திட்டு அகோரப் பசியோட வாப்பா வர்றாரே... இவரு என்ன சொல்லப் போறாரோ தெரியலயே...!
தந்தை : ஏன்டா, என்னடா பண்ற இங்க.?
மகன் : கிரிக்கெட் விளையாடப் போறேன் வாப்பா.
தந்தை : என்னாது..? கிரிக்கெட் விளையாடப் போறீயா, அதுவும் இந்த வேகாத வெயில்ல...! போடா வீட்டுக்குள்ளாற...! விளையாட்டு, விளையாட்டு, எப்ப பாரு விளையாட்டு. விளையாடுறதுக்கு ஒரு நேரம் காலம் வேண்டாம். போடா, உள்ளாற.
▪ காட்சி - 07
[ பையன் தனியே புலம்பி அழல் ]
ஒரு விடுமுறை நாளும் அதுவுமா, கொஞ்ச நேரம் விளையாண்டு ஜாலியா இருக்கலாம்னு,
▪ உம்மாட்டப் போனா, பாட்டிட்ட பத்தி விடுறாங்க.
▪ பாட்டிட்டப் போனா, அக்கா கிட்டப் பத்தி விடுறாங்க.
▪ அக்காட்டப் போனா, அது அண்ணன் கிட்டப் பத்தி விடுது.
▪ அண்ணன்ட்டப் போனா, அது தாத்தா கிட்டப் போவச் சொல்லுது.
▪ தாத்தாட்டப் போனா, அவுரு கிரவுண்டுக்குப் பத்தி விடுறாரு.
▪ சரி, கிரவுண்டுலயாவது போய் விளையாடலாம் னு பாத்தா, வாப்பா வந்து திரும்ப ஊட்டுக்குள்ளயே பத்தி விடுறாரு.
• இப்ப நான் என்ன பண்றது ?
• இப்ப நான் என்ன பண்றது ?
• இப்ப நான் என்ன பண்றது ?
• நீங்களே சொல்லுங்க !
• நீங்களே சொல்லுங்க !
• நீங்களே சொல்லுங்க !
(தேம்பித் தேம்பி அழல்)