தமிழுக்கு உலக அரங்கில் அந்தஸ்தைப் பெற்றுத்தந்த அறிஞர்

தமிழகம் உலகுக்கு வழங்கிய சிறந்த அறிஞர்களில் ஒருவரான மணவை முஸ்தபாவின் மறைவு தமிழ் அறிவுலகத்துக்கு மிகப் பெரும் இழப்பு. தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தர உலகஅளவில் நிர்ப்பந்தம் கொடுத்த போராளிகளில் ஒருவர், அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினித் துறை என நவீனத் தமிழுக்கு எட்டு கலைச்சொல் அகராதிகளை மகுடமாகச்

சூட்டியவர் என்று பல சாதனைகளை நிகழ்த்தியவர் அவர்.
'பிரித்தானிக்கா' கலைக் களஞ்சியத்தைத் தமிழுக்குக் கொண்டுவரும் பணியும் அவரது தலைமையில்தான் நடந்தது. ஆங்கிலத்தின் முதல் அகராதியைக் கொண்டுவந்த சாமுவேல் ஜான்சன் தொடர்ச்சியாக ஐந்தாறு நாட்கள் உணவு, உறக்கமின்றி உழைப்பார் என்று சொல்வார்கள். மணவை முஸ்தபாவுக்கும் அது பொருந்தும். பல நாட்களுக்கு ஓய்வே எடுத்துக்கொள்ளாமல் உழைத்தவர் முஸ்தபா.
தமிழில் யுனெஸ்கோ கூரியர்
1967-ல் தமிழில் யுனெஸ்கோ கூரியர் வெளியானது. அதற்கு முன் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் தவிர, அரபி, சீனம் ஆகிய செம்மொழிகளில் மட்டுமே வெளிவந்தது யுனெஸ்கோ கூரியர் இதழ், மணவை முஸ்தபா ஆசிரியராக இருந்தபோது தமிழ்ப் பதிப்பு 5 லட்சம் பிரதிகள் விற்று யுனெஸ்கோ இதழ்களில் நான்காம் இடத்தை பிடித்திருந்தது.
'கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி'யும் அவரது அபார உழைப்பில் விளைந்த பொக்கிஷம். இன்றும் கூகுள் பயன்படுத்தும் 'தேடல்', 'துழாவி', 'உள்நுழைக' போன்ற பதங்கள் அவர் நமக்களித்த கொடைகள்தான்!
1985-ல் கலைமாமணி விருது வழங்கப்பட்டது, 1987-ல் சிந்தனை யாளர் கழகம் சார்பில் அறிவியல் தமிழ் சிற்பி விருது வழங்கப்பட்டது. அப்போது மேடைகளில் அவர் வழங்கிய ஏற்புரைகளில் பிரதானமாக இருந்தது 'தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து தரப்பட வேண்டும்' என்பதுதான். தமிழின் பெருமைகளையே உயர்த்திப் பேசிய அவர் அதற்காக வேறு எந்த இந்திய மொழியையும் மட்டம் தட்டிப் பேசியதில்லை.
(முஹம்மது நபி (ஸல்) அவர்களை உலகின் தலைசிறந்த மனிதர்களில் முதல் மனிதராக தேர்வு செய்து) மைக்கேல் ஹார்ட் எனும் அமெரிக்க விண்வெளி இயற்பியலாளர் எழுதிய 'தி100' எனும் நூலை தமிழில் ('100 பேர்') கொண்டுவந்தவர் மணவை முஸ்தபா.
ஊடகத் துறை நண்பர் சொன்ன ஒரு தகவல் இது. இஸ்லாமியரான அவர் தனது தமிழுக்கு உலக அரங்கில் அந்தஸ்தைப் பெற்றுத்தந்த பெருமையோடு அவர் மறைந்துவிட்டார். எனினும், தமிழிலேயே பொறியியல், மருத்துவக் கல்வி எனும் அவரது கனவை நனவாக்குவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!
- ஆயிஷா இரா. நடராசன், தொடர்புக்கு: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.