நல்லிணக்க நாயகன் திப்பு

வாழ்ந்த போதே வரலாறான மாவீரன் திப்பு சுல்தான்!
திப்பு சுல்தான் இளவயதில் நீந்தி விளையாடிய சீரங்கப்பட்டினத்து காவிரி ஆற்றின் தெற்குக் கரை படியில் என் காலிரண்டும் வருடும் போது ஏற்பட்ட நினைவுகளோடு இதை எழுதுகிறேன்.
என் முதுகுக்கு பின்புறம்தான் திப்புவை வீழ்த்திடத் துடித்த கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகள் இந்த, நான் கால் நனைத்த ஆற்றின் பக்கமாகத்தான் திரண்டு வந்து சீரங்கப்பட்டணத்துக் கோட்டையின் வடக்குப் பக்கச் சுவற்றை பீரங்கியால் துளைத்து உடைத்து மளமளவென கோட்டைக்குள் நுழையத் தயங்கி நின்று அந்த சேதங்களின் மீது அச்சத்தோடு நின்ற இடத்தையும் கண்டேன்.
என்னுடன் வந்த இருவர் என்னை தனியே விட்டுச் சென்ற நேரத்தில் நான் மட்டும் வைத்த கண் வாங்காமல் அந்த சேதங்களின் மீது நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தேன். நேரம் போவது தெரியவில்லை.
அந்த கோட்டை வாசல்கள் என் மனத்திரையில் 1799, 66 ஆம் நாள் சம்பவத்தை அதன் கடைசி தருணங்களை மௌனமாகப் பேசிக் கொண்டிருந்தது. எனக்குள் ஒரு இறுமாப்பும் தோன்றியது. நிஜமான மாவீரன் நடந்த இடத்தில் நானும் நின்றேன் என்பதே என் இறுமாப்பிற்கு காரணம்.
நுரை பொங்கிய ஆற்றின் பிரவாகம் குதிரைக் குளம்படிகள் ஓசை போல் என் செவிக்குள் ஒலித்தது. ஆம் இந்த பாதைதான் காவிரியை கடக்க எளிய வழி என்பது ரகசியம். திப்புவுடன் இருந்த இந்த ரகசியத்தை கும்பெனிக்கு சொன்னது யார்? மீர் காசிம் என்ற கொடுமதியாளன் வழியாக கசிந்ததால்தான் - கசிய விடப்பட்டதால் தான் கும்பினிப் படைகள் திப்புவை வீழ்த்தின.
அரண் போல கோட்டையைச் சுற்றிப் பாய்ந்தோடும் காவிரி திப்புவின் போர் வியூகங்களுக்கு பக்க பலமாக இருந்தது. சீரங்கப்பட்டணத்து கோட்டைக்குள் திப்புவின் வலதுகரம் போன்ற மெய்க்காவலர் ராஜா கான் தங்களைச் சுற்றி சதிவலை பின்னப்பட்டு விட்டது எப்படியாவது திப்புவை மட்டுமாவது காப்பாற்றினால் போதும் என நினைத்தவராக “ஹஸ்ரத் தயவு செய்து நீங்கள் உள்ளே வந்து விடுங்கள் எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
மைசூர் அரண்மனையின் கோட்டைச் சுவர் - டேவிட் பயார்டின் பீரங்கித் தாக்குதலால் உருக்குலைந்த கோட்டையின் வடக்குப் பக்க சுவர் வழியாக கூலிப்பட்டாளம் திமிரோடு நுழைந்தது.
நேரம் ஆக ஆக டன்லப் தலைமையில் இருந்த பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதை உணர்ந்த ராஜா கான் “சுல்தான் பிடிவாதம் வேண்டாம் உட்புறம் வாருங்கள்” என மீண்டும் மீண்டும் அழைத்தார்.
“சும்மா இரு உனக்கு பைத்தியமா? எதிரிகளை பார்த்த பின் இங்கிருந்து நகர மாட்டேன். ஆடாக இருநூறு ஆண்டுகள் வாழ்வதை விட புலியாக இரண்டு நாள் வாழ்வதே மேல். என்னைத் தாண்டி வேண்டுமானால் எதிரிகள் உள்ளே செல்லட்டும்” என திப்பு ஒரு புலியாகவே கர்ஜித்தார்.
செய்வதறியாது உருவிய வாளுடன் ராஜா கான் திப்புவை பார்த்தவாறிருந்த போது மின்னலாய் ஒரு தோட்டா திப்புவின் மார்பை பதம் பார்த்தது. சட்டென்று ராஜாகான் இடை மறித்து நின்ற போதும் மற்றொரு தோட்டா மின்னல் வேகத்தில் திப்புவை மீண்டும் பதம் பார்த்தது. மார்பின் வலம், இடம் என இரண்டு புறமும் தோட்டாக்கள் துளைத்த காயத்தால் கையில் வாளுடன் குன்றென நின்ற திப்பு சுல்தான் மெல்லச் சரிந்தார். எதிரிகளும் துரோகிகளும் போட்ட திட்டத்தின் மூலம் இம்மி பிசகாமல் நடந்தேறியது திப்புசுல்தானின் சரிவு மட்டுமல்ல இந்தியா என்கிற மாபெரும் நிலம் வெள்ளையர்களிடம் கொள்ளை போனது.
திப்பு சந்தித்த போர்க்களங்களில் சிங்கமெனப் புகுந்து எதிரிகளை சிதறடிப்பதில் வல்லவரான மாவீரர் சையத் கஃபாரும், திப்புவின் நம்பிக்கைக்குரிய தளகர்த்தர் மீர் மைதீனும் படை அலுவலரான ஷேர்கான் மீர் அசப்பும் வடக்குக் கோட்டை வாசலருகே வீழ்ந்தனர்.
நூற்றுக் கணக்கான வீரர்களின் உடலுடன் சமதர்ம சமுதாய நிலமான அந்த இடம் அவர்கள் அனைவரின் குருதி ரத்தத்தால் வரலாற்றில் வடுவாகிப் போனது. திப்புவின் கோட்டை வீழ்ந்து விட்டது. கோட்டையா அது இல்லை இல்லை நவ பாரத நவீன அரசியலின் ஆன்மீகப் பல்கலைக் கழகமாகத் திகழ இருந்த இடத்தை பிரிட்டிஷாரின் கூலிப்படை தகர்ந்து விட்டது.
ஆம்! குர்ஆன் 44 வகை தொகுதி விளக்க நூல், 41 தொழுகை முறை நூல்கள், 35 தொகுதி மரபுக் கவிதைகள், 48 தொகுதி மார்க்க இயல், 45 தொகுதி சூஃபிச ஞான மார்க்க நூல்கள், 115 தொகுதி ஒழுக்க நெறிகள், 24 தொகுதிகள் சட்ட இயல், 95 தொகுதி (ஷரீஅத்) அறிவியல் கலை நூல் தொகுதி, 54 வானவியல் நூல்கள், 20 கணிதத் தொகுதிகள், 7 இயற்பியல் நூல்கள், 62 மொழியியல் தொகுதிகள், 65 அகராதி வகைத் தொகுதிகள், 29 வரலாற்றுத் தொகுதிகள், 128 கடிதத் தொகுதி இலக்கியம், 28 கவிதைத் தொகுதிகள், 110 தேவநாகரி மற்றும் தமிழ் தெலுங்கு கன்னட கவிதை இலக்கிய தொகுதிகள் 23, உரைநடை தொகுதி நூல்கள் 4, துருக்கி மொழி உரைநடை இலக்கியம் 2, நீருன் கதைகள் 18, இவற்றுடன் அரபு மொழி வரி வடிவம் பற்றிய இலக்கண நூல், பேரறிஞர் அரபி மொழி வல்லுநர் திப்பு தன் கைப்பட எழுதிய ரிசாலா தார் காதிபி தர்ஜி முகம்மதி என்ற நூல், யுத்த தந்திர வழிமுறைகள் பற்றிய போர்க்கலை நூல், இது தவிர நிமித்திக நூலும் ஜெம்னாலஜி எனும் கனிமங்கள் பற்றிய குறிப்பேடும், மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் தம் கைப்பட எழுதிய திருக்குர்ஆன் பதிப்பு ஆகியவற்றை மாளிகை தரைமட்டமாக்கப்பட்ட சில நிமிடங்களில் பிரிட்டிஷார் கைப்பற்றினர். ஏனெனில் திப்புவின் ஒவ்வொரு ஆவணமும் பிரிட்டிஷாரை ஒரு வாளாக அச்சுறுத்தியது.
போருக்குப் பின் திப்புவின் நூல்களையும் சூறையாடிய ஆங்கிலேய அதிகாரிகளின் செயல் பின்னாளில் சர்ச்சையானால் பதில் சொல்ல வேண்டியதிருக்கும் என்பதால் சில தொகுதிகளை லண்டன் விண்ட்சர் மாளிகை நூலகத்திற்கும், பெரும்பாலானவற்றை கல்கத்தாவிலுள்ள ஆரியவியல் நூலகத்திற்கும் அனுப்பினர். இன்றும் பல வரலாற்றாய்வாளர்கள் சிறப்பு அனுமதி பெற்று இவற்றைக் காண்கின்றனர்.
இந்தியாவில் 600 சிறிய பெரிய சமஸ்தானங்கள் இருந்தன. இந்த சமஸ்தானங்களே பின்னாளில் பாராளுமன்ற தொகுதிகளாக மாறின.
இவற்றில் பெரிய அளவு பரப்பை தன் ஆட்சி எல்லைகளாகக் கொண்டு ஆண்டவர் திப்பு. ஒரு கட்டத்தில் இந்தியாவின் தென் பகுதி முழுவதும் திப்புவின் ஆட்சிப் பகுதியாக இருந்தது.
வைரம் வைடூரியம் பதித்த உறையிடப்பட்ட தனது டமாஸ்கஸ் வளைந்த வாள் வீரராகவும், தான் வாழும் முறையால் வராலாறாகவும் வாழ்ந்த அரசியல் ஞானி தீரர் திப்பு சுல்தான். இந்திய சிற்றரசர்கள் பேரரசர்கள் பலரில் இவருக்கு மட்டுமே தனிச் சிறப்பு உள்ளது. அது என்னவெனில் கிட்டதட்ட ஆங்கிலத்தில் வரலாற்று மேதைகள் பலரும் நூல்கள் புனைந்துள்ளனர். இதில் கர்னல் கார்க் வில்கிஸ் என்பவர் முற்றிலும் போர்க்களத் தகவல்கள் குறிப்புகளைக் கொண்டு History of Mysore என்ற 2 பகுதியடங்கிய நூலை 1816 இல் வெளியிட்டார். இதில் திப்புவின் தந்தை ஹைதர் அலி தொடர்பான தகவல்கள் ஏராளமாக உள்ளன. பொதுவான போர்க்கால குறிப்புகளில் ஆங்கிலேயத் தரப்பை நியாயப்படுத்தும் விவரங்களே மேலோங்கி இருக்கும், இது இயல்பானது.
கிட்டத்தட்ட வேறெந்த இந்திய அரசர்களை விடவும் அதிகளவு பதிவுகளுக்கு உட்பட்டவர் தீரர் திப்பு. 154 புத்தகங்கள் அவரைப் பற்றி பல மொழிகளிலும் வெளியாகி உள்ளன. ஆங்கிலே வரலாற்றாசிரியர்கள் தங்கள் மொழி வளத்தோடு உட்கிடக்கையாக கிழக்கிந்திய கம்பெனியின் ஆக்ரமிப்பை பொருளாதார சூறையாடலை நியாயப்படுத்தும் விதத்தில் சார்பு நிலையில் நின்றே படைத்துள்ளனர்.
பாலும் நீரும் போல் உண்மையும் பொய்யும் கலந்தவற்றை அன்னப்பறவை பிரித்தெடுப்பது போல் நேர்மையுள்ளத்தோடு பிரித்தறிந்தால்தான் திப்புவின் தீரமும் வீரமும் அவரின் ஆழ்ந்த புலமையும் புலப்படும்.
620 சமஸ்தானங்களை விட்டு விட்டு திப்புவின் இராஜ்ஜிய எல்லை மேல், திப்பு மேல் மட்டும் தாக்குதல் பலமாகத் தொடுக்கப்பட்டதேன்? இதை மட்டும் நாம் ஆய்வு செய்தால் உண்மை விளங்கும். ஏனெனில் மற்ற இந்திய அரசர்கள் தோட்டாவுக்கும், கரிமருந்து வாடைக்கும், என்ஃபீல்டு குழல் துப்பாக்கிகளுக்கும் சிக்கினர். ஆனால் திப்பு அவற்றை இந்த மண்ணிலேயே உருவாக்கும் தொழில் துறை விற்பன்னராகக் திகழ்ந்ததால் திப்புவின் ஆயுதப் பொறியியல் ஞானத்தைக் கண்ட ஆங்கிலேயர்கள் திப்புவின் மீது வன்மம் கொண்டு கடுமையான தாக்குதலைத் தொடுத்தனர்.
ஆங்கில எழுத்தாளர்கள் அனைவருமே ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் மனம் புண்படக் கூடாது என்பதற்காகவே ஹைதர் அலி திப்பு சுல்தான் குடும்பத்தை தவறாக சித்தரித்துள்ளனர். அந்த வரலாற்றுப் பக்கங்களில் ஒரு சராசரி இந்தியனாக திப்புவை அவரின் ஆளுமையை நாம் துலாக் கோலைப் போல் நேர்மையாக ஆராய்ந்தால் மிரட்சி! இப்படியும் ஒரு அரசியல் மேதை அரசராக வாழ்ந்து துரோகத்தினால் வீழ்ந்த உண்மையை நாம் உணரலாம்.
ஏகாதிபத்திய அரசியல் உணர்வுள்ளவர்களுக்கு இன்றும் சிம்ம சொப்பனமாக இருப்பவர் சிட்டிசன்? திப்பு சாகிப். அவர் ஈரான் ஈராக்கிலிருந்து வந்தவரல்ல! இங்கேயே பிறந்து வளர்ந்த சுத்தமான இந்தியர், கன்னட இஸ்லாமியர். தொடரும்…