அல்லாமா கறீம் கனி - சேயன் இப்ராகிம்

“அநேகமாகக் கிழிந்த ஆடைகளையே உடுத்திருப்பார். அன்பர்கள் புத்தாடை வாங்கிக் கொடுத்தால், அதை இல்லாதவர்கள் யாரும் வந்து கேட்டால் அவர்களுக்கு கொடுத்து விடுவார். பின்னர் எங்கே அந்த ஆடை என்று நாங்கள் கேட்டால் “அல்லாஹ் யாரையோ அனுப்பி வைத்தான் கொடுத்து விட்டேன். நாளை மஹ்ஷரில் என் அடியானை உன்னிடம் அனுப்பி வைத்தேன். உன்னிடம் இருந்தும் நீ ஏன் அவனைக் கவனிக்கவில்லை? எனக்கேட்டால் என்ன பதில் சொல்வது”? என்று கேட்டு மௌனம் சாதித்து விடுவார். அவர் பொருளையோ உலக சாதனங்களையோ ஒரு போதும் வைத்திருந்ததில்லை. ஒரு துறவி போல வாழ்ந்த அவரின் உணவு பெரும்பாலும் “தேநீர்” தான்.
அவர் ஒரு அழகிய ஞானி; அன்பொழுகும் வதனம்; அறிவழகின் அறிகுறியான அகன்ற நெற்றி, சிந்தனை விளக்கம் கூறும் கூர்ந்த பார்வை, நடுத்தரமான உயரம், பழகுவதற்கு இனிய சுபாவம் காழ்ப்புணர்ச்சி இல்லாதவர், தமிழ், அரபி, உர்து, பார்ஸி, பர்மியம், மலாய், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நன்கு பாண்டித்தியம் பெற்றவர்.
அல்லாமா கறீம் கனியை நமக்கு இப்படி அறிமுகப் படுத்துகிறார் அவரது அணுக்கத் தோழரான துவரங்குறிச்சி மௌலவி ஹாஜி கே.முஹம்மது அப்துல் ஸலாம் ஜமாலி என்பார் தான் எழுதியுள்ள அல்லாமா கறீம் கனி (வரலாறும், கடிதங்களும்) என்ற நூலில்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நம்பிக்கைக்குரிய தோழராகவும், அவர் சிங்கப்பூரில் அமைத்த ஆஜாத் ஹிந்த் அரசில் அமைச்சராகவும், மிகச் சிறந்த சொற்பொழிவாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவும் திகழ்ந்த நமது தமிழகம் தந்த அல்லாமா கறீம் கனியின் வாழ்க்கை வரலாறு இன்றைய இளம்தலை முறையினர் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
கறீம் கனி, 1908 ஆம் ஆண்டு தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் இளையான்குடிக்கு அருகிலிருக்கும் சோதுகுடி என்ற கிராமத்தில் பிறந்தார். ஸையது அஹமதுல் கபீர் ரிபாயி ஆண்டகையின் கொள்ளுப் பேரரான இவரது தந்தையார் முஹம்மது இப்ராகிம் பர்மாவின் தலைநகரான ரங்கூனில் வணிகம் செய்து வந்தார். கறீம் கனியின் தாயார் ஒரு பர்மிய முஸ்லிம். கறீம்கனி குழந்தைப் பருவத்திலேயே தனது தந்தையார் வணிகம் செய்து வந்த ரங்கூனுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள செயின்ட் பால்ஸ் ஆங்கிலப் பள்ளியில் கல்வி பயின்றார். படிப்பில் கெட்டிக்காரராக இருந்த காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் இரட்டைப் பதவி உயர்வு பெற்று சில ஆண்டுகளிலேயே எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இவரது திறமையையறிந்த ஆசிரியர்கள் இவரை இலங்கைக்கு அனுப்பி அங்குள்ள லண்டன் மெட்ரிக் பள்ளியில் படிக்க வைக்குமாறு இவரது தந்தையிடம் ஆலோசனை கூறினர். அவ்வாறே இவரது தந்தையும் இவரை இலங்கைக்கு அனுப்பி படிக்க ஏற்பாடு செய்தார். அதன் பிறகு இங்கிலாந்தின் தலைநகரான இலண்டனுக்கு ஐ.சி.எஸ். படிப்பதற்காக இவரை அனுப்பிட தந்தையார் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அவரது திடீர் மரணம் காரணமாக கறீம் கனி இலண்டனுக்கு செல்ல முடியவில்லை. எனினும் “சுருக்கெழுத்து” பயின்று ரங்கூனிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த “ரங்கூன் டெயிலி நியூஸ்” நாளிதழின் நிருபராகப் பணியில் சேர்ந்தார். 1929 ஆம் ஆண்டு சௌகர் மௌலானா முஹம்மது அலி பர்மாவுக்கு வந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல கூட்டங்களில் உரையாற்றினார். “ரங்கூன் டெயிலி நியூஸ்” நாளிதழின் நிருபர் என்ற முறையில் இக்கூட்டங்களில் கலந்து கொண்ட கறீம் கனி, மௌலானாவின் உரையை அப்படியே குறிப்பெடுத்து அதனை பத்திரிகையில் வெளியிட்டார். சோலியா பள்ளிவாசலில் அவர் உருதுவில் ஆற்றிய உரையையும் திறம்படத் தமிழில் மொழி பெயர்த்தார். இதனால், மௌலானாவின் நல்லன்பைப் பெற்றார். மேலும் 1927 ஆம் அண்டில் ரங்கூனிலிருந்து வெளி வந்த கொண்டிருந்து “தேசோபகாரி” என்ற தமிழ் நாளிதழின் துணை ஆசிரியராகவும் கறீம் கனி பணிபுரிந்தார்.
பொதுச் சேவையில்:
அல்லாமா கறீம் கனி ரங்கூனில் பல்வேறு பொதுப் பணிகளிலும் ஈடுபட்டார். அங்கு செயல்பட்டு வந்த வாலிப முஸ்லிம் லீக், வாலிப முஸ்லிம், தேகப் பியாச சங்கம், இந்திய சுதந்திரக்கழகம் ஆகிய பொது நல இயக்கங்களில் இணைந்து மக்கள் பணியாற்றினார் அந்த இயக்கங்களின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்
அரசியல் களத்தில்;
அல்லாமா, பர்மா நாட்டு அரசியல் நடவடிக்கைகளிலும் பங்கு கொண்டிருந்தார் 1932 ஆம் ஆண்டு அந்நாட்டு சட்டசபைக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது திறமையைத் தெரிந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் பாமாவ் இவரை தனது பார்லி மென்டரி செயலாளராக நியமித்தார்.
1927 ஆம் ஆண்டு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு இரங்கூன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது இரங்கூனில் பத்திரிகை நிருபராகச் செயல்பட்டுக் கொண்டிருந்த அல்லாமா, நேதாஜியின் வீரம் செறிந்த போராட்டங்களையும், தியாகங்களையும் அவரது பத்திரிகை நண்பர்களான க.நா.சுந்தர முதலியார், கொ.நா. சுப்பையா நாயுடு ஆகியோர் மூலம் தெரிந்து கொண்டார். எனவே நேதாஜியைப் பற்றிய உயர்வான எண்ணம் அவரது மனதில் ஏற்பட்டது.
1934 ஆம் ஆண்டு அல்லாமா இந்தியாவிற்கு வந்து அன்றைய சென்னை மாகாணத்தின் பல பகுதிகளிலும், வடநாட்டின் பல பகுதிகளிலும் சுற்று பயணம் மேற்கொண்டார். அந்தக் கால கட்டத்தில் இந்தியாவில் நடைபெற்று வந்த சுதந்திர போராட்டங்கள் அவரை வெகுவாக ஈர்த்தன. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தனது சிறிய பங்களிப்பும் இருக்க வேண்டுமென விரும்பினார். அதன் விளைவாகவே இரங்கூன் திரும்பியதும் “இந்திய சுதந்திரக் கழகம்” என்றொரு அமைப்பை அங்கு நிறுவினார்.

இந்த கால கட்டத்தில், நாட்டின் விடுதலைக்காக மகாத்மா காந்திஜியின் வழிகாட்டுதல்களின் கீழ் நடைபெற்று வந்த அகிம்சைப் போராட்டங்களில் நம்பிக்கையிழந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் மூலமாக மட்டுமே ஆங்கிலேயர்களை இநதியாவிலிருந்து உடனடியாக விரட்ட முடியும் என நம்பினார். நேதாஜியின் இந்த நிலைப்பாட்டைப் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை. எனவே அவர் காங்கிரஸிலிருந்து விலகினார். ஆங்கிலேய அரசை எதிர்த்து போராட இந்திய தேசிய ராணுவம் என்ற படையை உருவாக்கினார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டமது. ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டுமென்றால் போரில் இங்கிலாந்துக்கு எதிராக இருக்கும் ஜெர்மன் ஜப்பான் ஆகிய நாடுகளின் உதவியை நாட வேண்டுமென அவர் முடிவு செய்தார்.
எனவே ரகசியமாக ஜெர்மன் சென்று அந்நாட்டு ஜனாதிபதி ஹிட்லரைச் சந்தித்தார். தன்னால் நேரடியாக இந்திய விடுதலைக்கு உதவ முடியாது என்று நேதாஜியிடம் தெரிவித்த ஹிட்லர், தனது ஆசியக் கூட்டணி நாடான ஜப்பான் சென்று அந்நாட்டின் உதவியைப் பெறுமாறு ஆலோசனை கூறினார். அவரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட நேதாஜி, ஜெர்மன் கடற்படை வழங்கிய நீர் மூழ்கிக் கப்பல் மூலம் 8.2.1943 அன்று ஜப்பானின் தலைநகரான டோக்கியோ சென்றடைந்தார். அந்நாட்டு ஜனாதிபதி டோஜோவைச் சந்தித்து இந்திய விடுதலைக்கு உதவுமாறு வேண்டினார். அவரும் உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

first man
நேதாஜி, அந்நாட்டு வானொலி மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருக்கும் இந்தியர்கள் தான் அமைத்துள்ள இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட வருமாறு அழைப்பு விடுத்தார். அவரது வீர உரை அந்நாடுகளில் வாழ்ந்த இந்தியர்களிடையே மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது. இந்திய விடுதலைக்கு ஆதரவு தெரிவித்து இரங்கூனில் செயல்பட்டு வந்த இந்திய சுதந்திரக் கழகத்தின் தலைவரான அல்லாமாவின் உள்ளத்தில் நேதாஜியின் வீர உரை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து போராட வேண்டுமென முடிவு செய்தார். அதற்கான தருணத்திற்காகக் காத்திருந்தார்.
இந்நிலையில், சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த இந்திய சுதந்திரக் கழகத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்பதற்காக நேதாஜி 3.7.1943 அன்று அங்கு வருகை தரவிருக்கிறார் என்ற செய்தியறிந்த அல்லாமா உடனே சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்று நேதாஜியைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார். அதே நாளில் சிங்கப்பூரில் நேதாஜி தலைமையில் “ஆஜாத் ஹிந்த் அரசு” நிறுவப்பட்டது. இந்திய தேசிய இராணுவத்தின் தலைமைப் பொறுப்பையும் நேதாஜி அப்போது ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்ட அல்லாமா நேதாஜியின் ஆங்கில உரையைத் தமிழில் மொழி பெயர்த்தார்.

அதே ஆண்டு (1943) அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் ஆஜாத் ஹிந்த் அரசின் பிரகடன விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அல்லாமா இரண்டாவது முறையாகச் சிங்கப்பூருக்கு வந்தார். இந்த விழாவில் நேதாஜி வெளியிட்ட பிரகடனத்தை அல்லாமா தமிழில் மொழி பெயர்த்தார்.
அந்தப் பிரகடனம் பின்வருமாறு:
“ஆஜாத் ஹிந்த் அரசின் முதற்கடமை ஆங்கிலேயர்களையும் அவர்களது நண்பர்களையும் இந்திய மண்ணிலிருந்து விரட்டப் போராடுவது தான். இந்திய மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்று நிரந்தர சுதந்திர அரசை நிறுவுவதே இந்தத் தற்காலிக அரசின் லட்சியமாகும். எல்லாம் வல்ல இறைவனின் பெயராலும் நம்மனைவரையும் ஒரே இந்திய இனமாக உருவாக்கிவிட்ட நம் முன்னோர்களின் பெயராலும் இந்திய மக்கள் அனைவரும் அணி திரண்டு ஒரே கொடியின் கீழ் இந்திய விடுதலைக்குப் போராட வேண்டுமென்று அழைக்கின்றேன்.”
நேதாஜி வெளியிட்ட இந்தப் பிரகடனத்தில் அல்லாமா கறீம் கனியும் கையொப்பமிட்டிருந்தார். சிங்கப்பூரில் நிறுவப்பட்ட இந்தத் தற்காலிக சுதந்திர அரசின் அமைச்சர்களில் ஒருவராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
நேதாஜியிடம் கறீம் கனி கொண்டிருந்த நெருக்கம் ஆஜாத் ஹிந்த் அரசில் பணியாற்றிக்கொண்டிருந்த சில அதிகாரிகளின் உள்ளங்களில் பொறாமைத் தீயை வளர்த்தது. எனவே கறீம் கனியை ஆங்கிலேய அரசின் உளவாளி என நேதாஜியிடம் கோள் மூட்டினர். தனது கூர்மையான அரசியல் பார்வை காரணமாக நேசநாடுகள் இப்படித்தான் போர்த் தந்திரங்களை மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்த சில விஷயங்கள் அப்படியே நடக்கவே, நேதாஜியும் அவர் மீது சந்தேகம் கொண்டு அவரை வீட்டுக் காவலில் வைத்துக் கண்காணித்தார். எனினும், கறீம் கனி மீது எந்தவிதமான களங்கமும் இல்லை என்பதை பின்னர் தெரிந்து கொண்ட நேதாஜி, அவரை வீட்டுக் காவலிலிருந்து விடுவித்தார். இதற்குப் பின்னர் கறீம் கனி தொடர்ந்து நேதாஜியின் நம்பிக்கைக்குரிய சீடராக விளங்கினார்.
1944ஆம் ஆண்டு நேதாஜி “ஆஜாத் ஹிந்த்” அரசையும், இந்திய தேசிய இராணுவத்தின் தலைமையகத்தையும் ரங்கூனுக்கு மாற்றினார். அதே ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்திய தேசிய இராணுவம் ஆங்கிலேய இந்திய ஆட்சிக்கு உட்பட்ட வடகிழக்கு பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தி சுமார் 150 சதுர மைல் பரப்பளவைக் கைப்பற்றியது.(இம்பால் வரை). எனினும் இந்திய தேசிய இராணுவத்தால் தொடர்ந்து முன்னேற முடியவில்லை. இந்நிலையில் இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் கை ஓங்கியது. அச்சு நாடுகளின் ஆசியக் கூட்டாளியான ஜப்பான் அமெரிக்காவால் தோற்கடிக்கப்பட்டது. எனவே, ஜப்பானின் உதவி இந்திய தேசிய இராணுவத்திற்குக் கிடைக்கவில்லை. 20.02.1945 அன்று நேச நாட்டுப்படைகள் பர்மாவின் தலைநகரான ரங்கூன் மீது குண்டு வீசித்தாக்குதல் நடத்தியபோது இந்திய தேசிய இராணுவத்தின் ஆம்புலன்ஸ் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய கறீம் கனி மயிரிழையில் உயிர் தப்பினார் (அப்போது அவருடன் இருந்த அவரது மகன் ஜவகரும் உயிர் தப்பினார்) இச்சம்பவம் பற்றி அல்லாமா குறிப்பிட்டிருப்பதாவது:-
1945 பிப்ரவரி 20 ஆம் தேதி இரங்கூனில் கார்ப்பெட் பாம்பிங் நடந்தது. உடனே காரில் குண்டு விழுந்த இடத்திற்குச் சென்றேன். ஜவகரும் கூட வந்தான் (12 வயது) காரிலிருந்து இறங்கி ரோட்டிலிருந்த ஒரு மரத்தடியில் நானும் ஜவகரும் உட்கார்ந்திருந்தோம். மறு குண்டுமாரி பொழிந்தது நாங்கள் இருந்த இடத்திற்குச் சில அடி தூரம் வரை. “ஜவகர்! ஆபத்தான இடத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்றாலும் பயப்படுவது ஹராம் பயப்படுகிறாயா என்றேன். பயப்படவில்லை என்றான். வாய் மட்டும் அப்படிக் கூறுகிறதா? நிஜத்தில் பயமில்லையா? உன் நெஞ்சு துடிக்கிறதா என்று கேட்டேன். கமீசைத் (சட்டையை) திறந்து நெஞ்சைத் தொட்டுப் பாருங்கள். நான் மௌத் ஆக வேண்டுமென்று அல்லாஹ் விரும்பினால் நான் மௌத் ஆகவும் பயப்படவில்லை என்றான்… வீடு திரும்பிய போது மனைவியிடம்” உன் மகன் ஈமானுடைய பரீட்சையில் தேறியிருக்கிறான் என்று அன்புடன் கூறினேன்”.
ஜப்பான் தோல்வியுற்றதன் காரணமாக, ரங்கூனின் தொடர்ந்து தங்க முடியாத நிலை ஏற்படவே அவர் குடும்பத்தை அங்கேயே விட்டுவிட்டு பாங்காங் சென்றார். (இங்கு தான் அவர் நேதாஜியைக் கடைசியாகச் சந்தித்தார்). அங்கு சென்ற அவரை ஆங்கிலேயப் படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏழு மாதங்கள் சிறை வாசம் அனுபவித்தார். விடுதலை செய்யப்பட்டபோது அவரது உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததால், சிகிச்சை அளிப்பதற்காக அவர் நேராக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சையின் போது தவறான மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டதால் அவரது இடது கால் செயலிழந்து போய்விட்டது.
இந்நிலையில் ஆங்கிலேய அதிகாரிகள் அவரைச் சிங்கப்பூருக்குக் கொண்டு சென்று அங்குள்ள ஜாலான் புஸாரில் (சாலை) போட்டு விட்டுச் சென்று விட்டனர். அந்தச் சாலையிலேயே ஒரு அனாதையைப் போல் சில மணி நேரம் கிடந்தார். அந்த நேரத்தில் தற்செயலாக அங்கு வந்த மலாயா நண்பன் இதழின் ஆசிரியரான முதுகுளத்தூர் அப்துல் அஜீஸ் என்பவர் அவரை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று உபசரித்தார். அவரது செயலிழந்த காலுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்தார். இதனால் அவரது இடதுகால் ஓரளவு செயல்படத் தொடங்கியது.
சிங்கப்பூர் வாழ்க்கை:
தன்னைக் காப்பாற்றி அடைக்கலமளித்த முதுகுளத்தூர் அப்துல் அஜீஸின் வேண்டுகோளை ஏற்று “மலேயா நண்பன்” இதழின் ஆசிரியராக அல்லாமா பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பிறகு அந்த இதழ் புதுப்பொலிவு பெற்றது. தனது எழுத்தாற்றலால் பல புதிய தலைப்புகளில் கட்டுரைகளையும், செய்திகளையும் எழுதினார். இந்த இதழில் குர்ஆன் வசனங்களுக்கும் நபிகளாரின் மணிமொழிகளுக்கும் தொடர்ந்து விளக்கவுரைகள் எழுதி வந்தார். இதனால் அந்த இதழின் விற்பனை அதிகரித்தது. இதழாசிரியர் பணியுடன், பல்வேறு பொதுப்பணிகளிலும் அவர் ஈடுபட்டார். “சிங்கப்பூர் முஸ்லிம் லீக்” என்ற அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்று திறம்படப் பணியாற்றினார். மலேயா முஸ்லிம் சொசைட்டியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். “தமிழ் முஸ்லிம் யூனியன்” என்ற அமைப்பு உருவாகிடவும் துணை நின்றார். “மலாயா நண்பன்” இதழோடு, டான், காம்ரேட் ஆகிய ஆங்கில இதழ்களையும், சினாரன் என்ற மலாயா இதழையும் உதயசூரியன் என்ற தமிழ் இதழையும் தொடங்கி நடத்தி வந்தார். மலேயா மற்றும் சிங்கப்பூர் மக்களின் உரிமைகளுக்காக இந்த இதழ்களில் கனல்தெறிக்கும் பல கட்டுரைகள் எழுதினார். மலாயா நண்பன் இதழில் திராவிடர் கழகச் செய்திகளை விரிவாக வெளியிட்டார். பெரியார் ஈ.வே.ரா. பிறந்த நாள் கூட்டங்களிலும், திராவிட கழகத்தினர் நடத்திய கூட்டங்களிலும் கருஞ்சட்டை அணிந்து கலந்து கொண்டார். 1948 ஆம் ஆண்டு சிங்கப்பூர் டவுண் ஹாலில் நடைபெற்ற அனைத்து சமய மாநாட்டில் கலந்து கொண்டு இஸ்லாத்தின் மேன்மை குறித்து உணர்ச்சிகரமான உரை ஒன்றினை நிகழ்த்தினார். தனது நீண்ட உரையினூடே “ஒரு மூமின் ஒரு மலையைப் பார்த்து நகரு” என்று உத்தரவிட்டால் அது நகரும் (ஐவ ளாயடட அழஎந) என்று குறிப்பிட்டார். இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிரிட்டனின் புகழ் பெற்ற இராஜதந்திரியான ஸர் மால்கம் மெக்டோனால்டு “இப்படி ஒரு உரையை இதுவரை நான் கேட்டதே இல்லை” என்று பாராட்டினார்.
அல்லாமா கறீம் கனி சிங்கப்பூரில் வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கை வலுப்பெற்றிருந்தது. பினாங்கில் வசித்து வந்த தமிழ் முஸ்லிம்கள் பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரித்து எழுதியும் பேசியும் வந்த போது, அங்கு வாழ்ந்து வந்த தமிழ் இந்துக்கள் அதனை எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டனர். இதனால் இரு தரப்பினருக்குமிடையே அவ்வப்போது சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டன. இந்தப் பிரச்சனை அல்லாமாவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட போது, இது குறித்து முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறும் விதமாக அவர் தனது காம்ரேட் இதழில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்.
“இந்தியாவில் நடைபெறும் விஷயங்கள் குறித்து நீங்கள் கவனம் செலுத்துவதில் தவறில்லை. காயிதே ஆஜம் ஜின்னாவின் பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கு நீங்கள் தார்மீக ஆதரவு மட்டுமே வழங்க வேண்டும். நீங்கள் வாழ்வது ஆங்கிலேய மலாயா நாட்டில் ஆங்கிலேய இந்தியாவிலல்ல என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவிலுள்ள பிரச்சனைகள் வேறு. இங்குள்ள பிரச்சனைகள் வேறு. தார்மீக ஆதரவுக்கு அப்பால் பாகிஸ்தான் விஷயத்தில் நீங்கள் மேலதிகமாக ஏதேனும் செய்ய வேண்டுமென நினைத்தால் மலாயாவை விட்டு விட்டு உங்கள் தாய் நாட்டுக்குச் சென்று அங்கு நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள்” மலாயா தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அல்லாமா வழங்கிய இந்த அறிவுரைகள் அவரது நடுநிலைப்போக்கை வெளிப்படுத்துகின்றன. இப்படி அமைதியாகப் போய்க் கொண்டிருந்த அவரது சிங்கப்பூர் வாழ்க்கையில் திடீரென்று புயல் வீசியது. அது என்ன?
இந்தோனிஷியாத் தீவு ஒன்றில் வாழ்ந்து வந்த சார்ஜண்ட் ஏ.பி. ஹெர்த்தோ – திருமதி. அடிலெய்ன் ஹெர்த்தோ தம்பதியினரின் ஆறாவது மகளான மரியாவை ஆமினா என்ற மலாய் முஸ்லிம் பெண் தத்தெடுத்து வளர்த்து வந்தார். (15.11.1942) அந்தப்பெண் குழந்தைக்கு “நாதிரா பிந்த் மஃரூப்” எனப் பெயர் சூட்டி ஒரு இஸ்லாமியப் பெண்ணாகவே வளர்த்து வந்தார். ஆமினா அந்தப் பெண் குழந்தையுடன் சிங்கப்பூரில் வசித்து வந்தார். அந்தப் பெண்ணின் 13வது வயதில் ஆமினா அவளை மன்சூர் அபுதாபி என்ற 20 வயது நிரம்பிய முஸ்லிமுக்கு திருமணம் செய்து வைத்தார். (1949ம் ஆண்டில்) அப்பெண் பிறப்பில் டச்சு கிறிஸ்தவக் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதை எப்படியோ அறிந்து கொண்ட சிங்கப்பூரிலிருந்த டச்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் “இது ஒரு குழந்தைத் திருமணம் சட்டப்படி செல்லாது” என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை எதிர்கொள்ள முஸ்லிம்கள் திரண்டனர். முஸ்லிம்களின் தரப்பிற்குக் கறீம் கனி தலைமை தாங்கினார்.
வழக்கு நடைபெற்று வந்தபோது, “ஒரு இஸ்லாமியத் திருமணத்தை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது. ஷரீஅத் சட்டப்படி நாதிராவின் திருமணம் செல்லும் ஷரீஅத் சட்ட விதிகளை மாற்ற முயற்சிப்பது முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளில் தலையிடுவதாகும்” என கறீம் கனி தனது பத்திரிகையில் எழுதி வந்தார். பள்ளிவாசல் ஜூம்ஆ உரைகளிலும் இக்கருத்துக்களை வெளிப்படுத்தினார். இந்நிலையில் விசாரணைக்குப்பின் நாதிரா - மன்சூர் அதாபி திருமணம் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்குப் பின்னர் நாதிரா ஒரு கிறிஸ்துவ கான்வென்டில் வைக்கப்பட்டார். இது நாதிராவை கிறிஸ்துவ சமயத்திற்கு மாற்றும் முயற்சி என முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, கறீம் கனி பல்வேறு பொதுக்கூட்டங்களிலும், வெள்ளிக்கிழமை ஜூம்ஆ உரைகளிலும் இத்தீர்ப்புக்கு எதிராகப் பேசி வந்தார். 08.12.1950 அன்று சிங்கப்பூர் சுல்தான் பள்ளிவாசலில் ஜூம்ஆ தொழுகையின்போது அவர் ஆற்றிய உணர்ச்சிமிகு உரை முஸ்லிம்களைக் கிளர்ந்தெழச்செய்தது. மேல்முறையீட்டு மனுவின் மீது நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லும் நாளன்று மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் நீதிமன்றம் முன்பு கூடி நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

first man1
இதன் தொடர்ச்சியாகக் கலவரம் வெடித்தது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். கலவரத்தைத் தூண்டியதாக கறீம் கனி உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் மீது ஆங்கிலேய ஆட்சியினர் நடவடிக்கை எடுத்தனர். ஆங்கிலேய அரசு தான் ஏற்கனவே பிறப்பித்திருந்த அவசர காலச்சட்டம் 20வது பிரிவின் கீழ் கறீம் கனியைக் கைது செய்து செயின்ட் ஜான்ஸ் தீவில் சிறை வைத்தது. எனினும் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு எதுவும் தொடுக்கப்படவில்லை. 16 மாதங்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையில் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை விடுதலை செய்ய ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. அதே நேரத்தில் அவர் சிங்கப்பூரில் இருந்தால் அமைதிப்பங்கம் ஏற்படும் என்று கருதிய அரசு, அவரை இந்தியாவிற்கோ அல்லது பர்மாவுக்கோ செல்லுமாறு பணித்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்திய அரசும், பர்மிய அரசும் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டன.
இறுதியாக பாகிஸ்தானிலிருந்த இவரது பர்மா நண்பர் இனாமுல்லாஹ் கானின் பரிந்துரையின் பேரில் அவர் பாகிஸ்தான் சென்றார். அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே பாகிஸ்தான் அரசு அவரை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. (நாதிரா திருமண வழக்கின் மேல்முறையீட்டுத் தீர்ப்பும் முஸ்லிம்களுக்கு எதிராகவே இருந்தது. அவள் தனது பெற்றோர்களுடன் இத்தாலி சென்றார்)
பாகிஸ்தான் வாழ்க்கை:
அல்லாமா கறீம் கனியின் பாகிஸ்தான் வாழ்க்கை துயரமிக்கதாகவே இருந்தது. நண்பர்களோ உறவினர்களோ இல்லாத அந்நாட்டில் அவர் ஒரு அகதியைப்போல் வாழ்ந்து வந்தார். கராச்சி நகரில் ஒரு விடுதி அறையில் வாழ்ந்து வந்த அவர் ஒரு எழுத்தாளராகவும், நூல் வெளியீட்டாளராகவும் தனது காலத்தைக் கழித்தார். கராச்சியிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த டான் பத்திரிகையில் ஆங்கிலத்திலும் உருதுவிலும் கட்டுரைகள் எழுதி வந்தார். கராச்சி நகரில் செயல்பட்டு வந்த பல்வேறு பொது நல அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றினார். எனினும் அவர் தனது அன்றாட வாழ்க்கைச் செலவுக்குப் பணம் இல்லாமல் திண்டாடினார். தமிழகம், சிங்கப்பூர், மலேயா போன்ற நாடுகளிலிருந்து நண்பர்கள் அனுப்பிய நிதி உதவியைக் கொண்டே வாழ்க்கையை ஓட்டினார். தங்கியிருந்த விடுதிக்கு வாடகை செலுத்த முடியாத காரணத்தால், அடிக்கடி விடுதியை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது. பணமுடை காரணமாக விடுதியில் தங்க முடியாத நிலை ஏற்பட்ட போதெல்லாம் கராச்சி நகரின் சாலையோரங்களில் தான் அவர் இரவு நேரங்களில் படுத்து உறங்கினார். பன்னூலாசிரியர் ஆர்.பி.எம். கனிக்கும், தனது நெருங்கிய நண்பர் துவரங்குறிச்சி மௌலவி கே.முஹம்மது அப்துல் ஸலாம் ஜமாலிக்கும் எழுதிய கடிதங்களில் பத்திரிகைகளில் தான் எழுதியிருந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். பாகிஸ்தானில் வசித்த காலம் முழுமையும் எப்படியாவது பர்மாவுக்குச் சென்று விட வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் பர்மிய அரசு அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளவேயில்லை. எனவே இறுதிக் காலம் வரை அவரால் தனது குடும்பத்தினரைச் சந்திக்கவே இயலவில்லை. 22.6.1978 அன்று அவர் கராச்சியில் காலமானார். அங்கேயே அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

குடும்பம்:
அல்லாமா கறீம் கனிக்கு 1927 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவரது மனைவி பெயர் அஸ்மா பீவி. அவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் ஒரு மகள், மூத்த மகன் முஹம்மது அமீன் மூன்று வயதில் அம்மை நோய் கண்டு மரணமடைந்து விட்டான். அவரது இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது மகன்களின் பெயர்கள் முறையே ஜவகர், தாஹிர் பாரூக், முஹ்ஸின் ஆகும். மகளின் பெயர் ஹலிமா பீவி. அவர் 1945 ஆம் ஆண்டிலிருந்து தனது மனைவி மக்களைப் பிரிந்து சிங்கப்பூரிலும், பின்னர் பாகிஸ்தானிலும் தனியாகவே வாழ்ந்து வந்தார். எனினும் குடும்பத்தினருடன் தொடர்ந்து கடிதப்போக்குவரத்து வைத்திருந்தார். எந்த மகனின் திருமணத்திலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. பேரன் பேத்திகளையும் அவர் பார்த்ததில்லை. மகன் பாரூக்கும், மகள் ஹலிமாவும் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளனர். அவர்களும் மற்ற மகன்களின் வாரிசுகளும் தற்பொழுது ரங்கூனில் வசித்து வருகின்றனர்.
பண்பு நலன்கள்:
அல்லாமா கறீம் கனி ஒரு ஆலிம் அல்ல. ஆனாலும் குர் ஆனையும் ஹதீஸ்களையும் ஐயம் திரிபறக் கற்றுத் தேர்ந்தவராகத் திகழ்ந்தார். இஸ்லாமியக் கடமைகளை வழுவாது பின்பற்றினார். தஹஜ்ஜத் தொழுகையை தவறாமல் நிறைவேற்றி வந்தார். தனது குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல், சமூகத்தையும், சமயத்தையும், நாட்டையும் பற்றியே அதிகம் கவலை கொண்டிருந்தார். உங்களுக்குக் குடும்பத்தைப் பற்றி கவலையில்லையா என்று ஒருவர் கேட்டபோது “ஒன்றுமில்லாத பாலைவனத்தில் மனைவி ஹாஜராவையும் மகன் இஸ்மாயீலையும் விட்டு வந்தார்களே அல்லாஹ்வின் கலீல்! அவர்களைக் காப்பாற்றவில்லையா அல்லாஹ்? நான் எல்லா வளமும் நிறைந்த பூமியில் தான் என்னுடைய குடும்பத்தை விட்டு விட்டு வந்திருக்கிறேன்” என்று பதிலளித்தார். நாதிரா கலவரத்தையொட்டி சிங்கப்பூர் அரசு அவரை நாட்டை விட்டு வெளியேறச் சொன்னபோது அவர் இந்தியா அல்லது பர்மா செல்ல விரும்பினார். ஆனால் இரண்டு அரசுகளுமே அவரை ஏற்க மறுத்து விட்டன. “இந்தியப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு உங்களுக்கு நன்கு அறிமுகமானவர் தானே, அவரை நீங்கள் தொடர்பு கொண்டு அனுமதி பெறலாமே” என்று சில நண்பர்கள் ஆலோசனை கூறியபோது அதனை ஏற்க மறுத்து விட்டார். அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கட்டும் என்று கூறி பாகிஸ்தான் சென்றார்.
சௌஹர் மௌலானா முஹம்மது அலி அவர்களின் பேச்சுக்களாலும் எழுத்துக்களாலும் கவரப்பட்ட அவர் மௌலானாவையே தனது வழிகாட்டியாக ஏற்றுச் செயல்பட்டார். கௌதுல் ஆலம் முஹ்யித்தீன் அப்துல்காதர் ஜெய்லானி (ரஹ்) அவர்களின் வாழ்வியலில் தோய்ந்து அன்னாரின் நல்லாசிகளை நாடியவராகவே வாழ்ந்து வந்தார். அன்னார் செய்திட்டதாகச் சொல்லப்படும் அற்புதங்களை நம்ப மறுத்த அவர் 12ம் நூற்றாண்டில் அப்பாஸிய கிலாபத்தின் மீது செங்கிஸ்கானின் தளபதி ஹுலாகு தாக்குதல் நடத்தி பக்தாத் நகரைச் சூறையாடி இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தபோது அங்கு அவர்கள் செய்திட்ட நிவாரணப் பணிகளே மிகப்பெரிய அற்புதம் எனக்கூறுகிறார். அன்னவர்களின் மறைவிற்குப் பின்னர், அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட காதிரிய்யா சபைகளே மங்கோலியப் படையெடுப்பாளர்கள் இஸ்லாமில் இணைந்திட காரணமாக இருந்தன என்பதையும், அப்படி இஸ்லாமில் இணைந்திட்டவர்களின் துணையுடனேயே உதுமானிய சாம்ராஜ்யம் எழுந்தது என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தீர்க்க தரிசனப்படி கான்ஸ்டாண்டி நோபிள் (குஸ்த்தன் -துனியா) கைப்பற்றப்பட்டது என்பதையும் பெருமையுடன் நினைவு கூர்கிறார் (பார்க்க: அல்லாமாவின் “பிரளய சகாப்தம்” என்ற நூல். பதிப்பாசிரியர் ஆர்.பி.எம். கனி, B.A., B.L..)
தற்போதைய இஸ்லாமிய உலகம் சந்தித்து வருகின்ற அவலங்கள் குறித்து பெரிதும் கவலைப்படுகின்ற அவர், மீண்டும் ஒரு மதீனா சமுதாயம் உருவாக வேண்டும், அது ஒன்றே தீர்வு என்று குறிப்பிடுகின்றார்.
முடிவுரை:
அல்லாமா கறீம் கனியின் பல கட்டுரைகள் நூல் வடிவில் வந்துள்ளன. அவையாவன ஆன்மீகப் புரட்சி, மாணிக்கச்சுடர், ஜோதி, இளம்பிறைஜோதி, முஹ்யித்தீன் மான்மியம், இஸ்லாமியத் தத்துவார்த்தங்கள், சன்னிதானம், பிரலய சகாப்தம், இந்நூல்களை அவரது நண்பரான துவரங்குறிச்சி ஹாஜி கே. முஹம்மது அப்துல் ஸலாம் ஜமாலியும் பன்னூலாசிரியர் ஆர்.பி.எம். கனி, B.A., B.L. அவர்களும் பதிப்பித்து வெளியிட்டுள்ளனர். அல்லாமாவுக்கு உற்ற துணையாக நின்ற இப்பெருமக்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எல்லாவல்ல இறைவன் இப்பெருமக்களைப் பொருந்திக் கொள்வானாக!
அல்லாமாவின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கின்ற போது நமது கண்கள் குளமாகின்றன. செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த அவர், ஒரு பக்கீராக மரணமுற்றார் என்ற செய்தி நம்மை வேதனையில் ஆழ்த்துகின்றது. எனினும், அவரைப் போன்ற ஒரு தன்னிகரில்லாத தலைவர் தமிழ் முஸ்லிம் சமூகத்திலிருந்து தோன்றினார் என்பது மட்டுமே நமக்கு ஆறுதலை வழங்க வல்லது. எல்லாம் வல்ல அல்லாஹ் அல்லாமா கறீம் கனிக்கு சுவனபதியினை வழங்கிட இறைஞ்சுவோமாக!
கட்டுரையாசிரியருடன் தொடர்பு கொள்ள: 9976735561
துணை நின்ற நூல்கள்:
(1) அல்லாமா கறீம் கனி – வரலாறும் கடிதங்களும் - By மௌலவி ஹாஜி கே.முஹம்மது அப்துல் ஸலாம் ஜமாலி.
(2) விடுதலைப்போரில் முஸ்லிம்கள் - By V.N. சாமி.
(3) இலக்கிய இதழியல் முன்னோடிகள் - By ஜே.எம். சாலி.