குழந்தைகளை அங்கீகரிப்போம்

அங்கீகாரம் பெற வேண்டும் என்பது குழந்தைகளின் ஒரு எதிர்பார்ப்பு.
குழந்தைகள் குடும்ப உறுப்பினர்கள் நண்பர்களின் பாராட்டுதல்களை அனுபவிக்க ஆசைப்படுகின்றனர். மற்றவர்கள் தங்களைப் பற்றிக்கூறும் உறுதியான வார்த்தைகளை, சிறந்த வாய்மொழிகளை ஆர்வத்தோடு குழந்தைகள் எதிர்பார்க்கின்றனர். குழந்தை செய்த ஒரு செயலைக்கண்டு அது ஊக்குவிக்கப்படும் பொழுது அல்லது தட்டிக்கொடுக்கப்படும் பொழுது தான் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படுவதாக எண்ணிக்கொள்கிறது.
மென்மையாகவும், உற்சாகமூட்டியும் அவர்கள் 'மதிப்புவாய்ந்தவர்கள், முக்கியமானவர்கள், தேவையானவர்கள்' என்ற உணர்வு ஏற்படும் விதத்தில் அவர்கள் பாராட்டப்படுவதையே பெரிதும் விரும்புகின்றனர்.
குழந்தை வளர்ந்து செல்லும் பொழுது ஏதாவது ஒரு வேலையை சுயமாக செய்து முடித்ததை உணர்ந்து கொண்டதுடன் வெற்றிக்களிப்பில் தன்னை ஆக்கி மிகப்பெரிய ஒரு சாதனையை செய்த உணர்வினை பெற்றுக்கொள்கிறது. இந்த நேரத்தில் குழந்தையின் மனநிலையோடு நாமும் சேர்ந்து ஊக்கம் கொடுக்கும் போது மேலும் அது போன்று செய்ய வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் பிறக்கிறது.
சிறு குழந்தைகள் பல் துலக்குதல், முகம் கழுவுதல், தலை சீவுதல், ஆடை அணிதல், காலணி அணிதல், களிமண்ணால் ஏதாவது ஒரு பொருளைச் செய்தல், வீட்டைக் கூட்டுதல், வகுப்பறையில் மற்ற மாணவருக்கு உதவுதல் போன்ற ஏதாவது செயலில் ஈடுபடும் போது அவர்களும் அவர்கள் செய்த செயலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என எண்ணுகின்றனர்.
'நீங்கள் நல்ல பிள்ளை' 'உங்களுக்கும் வேலை செய்ய முடியும்' 'நீங்கள் அழகாகச் செய்கிறீர்கள்' 'உங்கள் வேலை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது' போன்றவாறு வார்த்தைகளால் போற்றப்படுவதை எதிர்பார்க்கின்றனர்.
'நான் ஒரு நபர் என்பதை விடவும் எனது செயல்பாடுகள் மூலம் நான் அங்கீகாரத்தைப் பெற வேண்டும்' என்ற உணர்வே ஒவ்வொரு குழந்தையிடத்திலும் பெருமளவு இருக்கிறது. கல்விச் செயல்பாடுகள், விளையாட்டு, வீட்டு வேலைகள், சமூகச் செயல்பாடுகள், சுயமான வேலைகள் என்பவற்றில் குழந்தைகள் எதில் விருப்பமாகவும் ஆர்வமாகவும் செயல்படுகிறார்கள் என்பதை கவனித்து சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு குழந்தையை பாராட்ட பெற்றோரும் ஆசிரியர்களும் தவறக்கூடாது.
'என்னை கவனிக்காது விட்டுவிட வேண்டாம்', 'கண்டும் காணாததுபோல் சென்றுவிட வேண்டாம்' 'என்னையும் உங்களில் ஒருவராக அங்கீகரித்துக்கொள்ளுங்கள்' எனும் வார்த்தைகளை குழந்தையின் உதடுகள் உச்சரிக்காவிட்டாலும் உள்ளம் உச்சரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
அங்கீகாரம் பெறவேண்டும் என்பது உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையினதும் ஓர் முக்கிய தேவையாகவும் உள்ளது. குழந்தைகள் மட்டுமன்றி நாம் ஒவ்வொருவரும் அங்கீகரிப்பை நாடியவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாராவது நமக்கு உற்சாகம் தந்து ஊக்கப்படுத்தினால் கிடைக்கும் ஆனந்தத்தை விட குழந்தைகள் அடையும் ஆனந்தம் வலுவானதும் ஆகும்.
அதேபோல் 'குழந்தைகள்' ஒவ்வொன்றும் தனது தாயால், தந்தையால், குடும்ப உறுப்பினர்களால், ஆசிரியரால், தான் வாழப்போகும் சமூகத்தால், நண்பர்களால் வரவேற்கப்படவேண்டும் என்பதை விரும்புகிறார்கள். நமக்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு அல்லது நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அவ்வாறே வரவேற்பும் தரப்பட்டால் எவ்வளவு மனச்சந்தோசம் கிடைக்கிறது என்று நமக்குத் தெரியும்.
நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு இடத்திற்குச் செல்லும் போது, வெளிநாட்டிலிருந்து சில ஆண்டுகள் கழித்து வரும் போது கிடைக்கும் வரவேற்பின் சுகமான இன்பத்தை நாம் அனுபவித்திருப்போம். அல்லது ஒருவரை வரவேற்கும் போது நமக்குள் ஏற்படும் உற்சாகமான உணர்வினை உணர்ந்திருப்போம்.
வரவேற்பு என்பது அவ்வளவு கவர்ச்சியானது, தேவையானது, மனதிற்கு தைரியத்தை தரக்கூடியது. வரவேற்பு கிடைக்காத போது ஏற்படும் உணர்வுதான் புறக்கணிப்பு. இது எல்லா அனுபவங்களிலும் மிகவும் வேதனையும் நோவினையும் தரக்கூடிய அனுபவமாகும்.
அன்பு, அரவணைப்பு, தொடுகை, நேசம் போன்ற குணங்களை உடலால் வெளிப்படுத்தி வரவேற்கப்படுவதை ஒவ்வொரு குழந்தையும் விரும்புகிறது. பாடசாலைக்குச் சென்ற குழந்தை வீட்டுக்கு வரும் பொழுது இந்தக் குணங்களை வெளிப்படுத்தி அது வரவேற்கப்படும் பொழுது மனமகிழ்ச்சி அடைவதை நாம் கண்டிருப்போம். அதேநேரம் வரவேற்பு கிடைக்காத போது 'தான்' ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்ற எண்ணம் குழந்தைக்கு ஏற்படலாம்.
'ஏற்றுக்கொள்ளப்படவில்லை' என்ற எண்ணம் எந்தக்குழந்தைக்கு ஏற்படுமோ 'நான் நிராகரிக்கப்பட்டுவிட்டேன்' என்ற எதிரான எண்ணம் பிஞ்சு மனதில் விதையிட ஆரம்பிக்கிறது. இதன் விளைவாக உருவாகும் எண்ணங்கள் பாரமானவை. 'நான் மதிப்பில்லை', 'நான் சரியில்லை' 'என்னில் ஏதோ குறையிருக்கிறது' போன்ற எண்ணங்கள் பிஞ்சு மனதை நசுக்க ஆரம்பித்து விடும்.
இவை தனிமையும் கலக்கமும் நிறைந்த உணர்வுகளாகும். காலம் செல்லச்செல்ல நச்சு உணர்வு கலந்த இந்த விதை பெரும் மரமாக வளர்ந்து பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இது குழந்தையின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் தடையாக இருந்து அதன் ஆளுமை சிதறி முரண்பட்ட மனநிலையை க்கொண்டதாக எதிர்காலத்தில் மாறவும் காரணமாக அமையலாம்.
குழந்தை எந்த நிறத்தை, உடலமைப்பை கொண்டதாக இருப்பினும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் தான் பாரமாக இருப்பதான மனநிலை குழந்தைக்கு ஏற்படாதவாறு பெற்றோரும் ஆசிரியரும் கவனமாக செயல்பட வேண்டும். குழந்தைகளை அவர்களின் இயல்பான நிலையிலேயே ஏற்று அன்பும் ஆதரவும் காட்டி அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் வரவேற்கப்பட்டதையும் உணரவைக்க வேண்டும்.
'ஏற்றுக்கொள்ளுதல் என்பது நேசமாகாது. நேசிக்கும் குணம் நம்மிடம் இருப்பதால் நாம் மற்றவர்களை நேசிக்கிறோம். அனைவரும் மனிதர்களாகயிருக்கிறார்கள் என்பதால் அவர்களை ஏற்றுக்கொள்கிறோம்' என பிரபல மனோதத்துவ நிபுணர் எல்பட் எலீஸ் குறிப்பிடுகிறார்.
"பிள்ளைகளும் மனிதர்கள்தான் அவர்களை வரவேற்போம், ஏற்றுக்கொள்வோம்."

அஸ்ஹர் அன்ஸார், மூத்த மனநல ஆலோசகர், இலங்கை