புத்தக விமர்சனம்

என்னைப் பொருத்தவரை எழுத்துக்கள், அது பயணிக்கின்ற களத்தில் காட்சியாக மாறி, வாசகனுக்கு வாழ்ந்த அனுபவத்தை கொடுப்பதில்தான் எழுத்தாளனின் அங்கீகாரம் நிச்சயிக்கப்படுகிறது. அந்த அங்கீகாரத்தை தாழை மதியவன், தன்னுடைய “நபிகள் நாயகம்” என்ற நூல் வழியாக பெற்றிருக்கிறார்.
நபிகள் நாயகம், அவரது தோழர்கள், அவர்கள் வாழ்ந்த பொழுதுகள்,அவர்களைச் சுற்றி நடந்த விஷயங்களனைத்தையும் உரையாய் கேள்விப்படும்போதெல்லாம் காட்சிகளாக வர மறுத்தவைகள், தாழை மதியவனின் இந்த வரலாற்றுக் காவியத்தை வாசித்தபோது நாயகத்தோடும், அவரது தோழர்களோடும் வாழ்ந்த அனுபவத்தையே தந்தன. இக்காவியத்தை வாசித்த பொழுதுகளில் பத்ருப் போரில் கிணற்றுக்கருகே நின்று அபூஜஹ்ல், உக்பா, போன்ற இஸ்லாமிய விரோதிகள் கொல்லப்பட்டது என் மனத்திரையில் காட்சிகளாய் விரிந்தது.
உஹதுப்போரின் சமயம் மலைமேல் ஏறி நாயகம் வகுத்துக்கொண்டிருந்த போர் வியூகத்தை என்னால் வேடிக்கை பார்க்க முடிந்தது. “ஹுதைபிய்யா” உடன்படிக்கையின்போது ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களின் இஸ்லாமியப்பற்றை, என்னால் வியந்தோத முடிந்தது. ஈருடல் ஓருயிராய் பழகி வந்த அபூபக்கரும் உமரும் இல்லாத சமயம் பார்த்து, நாயகம் உயிர் பிரிந்த நேரத்தில், நாயகத்தை ஆயிஷா (ரலி), தன்னுடைய மடியில் கிடத்தியிருந்தபோது எனக்கு அழுகை பீறிட்டது .
ஆண்டுதோறும் சென்னையில் நடக்கின்ற புத்தகத்திருவிழாவில் என் பட்ஜெட்டிற்கு அடக்கமாக ஒரு சில புத்தகங்களை வாங்கி வருகின்றேன். அப்படி வாங்கிய புத்தகங்களை அடுத்த வருட புத்தகத்திருவிழாவிற்குள் வாசித்து முடித்து விடவேண்டுமென்பது எனக்கு நானே இட்டுக்கொண்ட கட்டளை.
அந்த வகையில் தாழை மதியவனின் ”நபிகள் நாயகம்” புத்தகத்தை எடுத்து வாசித்து ஒரே ஒரு பகுதி முடித்தவுடன் தொடராமல் அப்படியே வைத்து விட்டேன். வேறு புத்தகத்தை எதுவும் வாசிக்காமல் நாட்களை நகர்த்தி வந்த நேரத்தில் பாதியில் நிறுத்திய குற்ற உணர்ச்சியால் மீண்டும் தாழை மதியவனின் நபிகள் நாயகத்தை எடுத்து வாசித்து முடித்தபோதுதான் வாசிக்காது நாளை கடத்தியது எவ்வளவு பெரிய இழப்பு என்பதைப் புரிந்து கொண்டேன். முதலில் என்னைக் கவர்ந்தது தலைப்புகள் தான், கருப்பு நிலாக்காலம், வைரத்தைச்சுற்றி பதிக்கப்பட்ட முத்துக்கள், நிலவில் களங்கம், என்று 29 பகுதிகளில் ஒவ்வொன்றுக்கும் அட்டகாசமான தலைப்பைச் சூட்டியிருக்கிறார் தாழையார்.
இரண்டாவது ஒவ்வொரு பகுதியை முடிக்கின்றபோது நறுக்கென்று முடித்திருப்பார். “கதிரையும் மதியையும் கைகளில் தருவரோ” என்ற பகுதியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை பரப்ப ஆரம்பித்ததும் அபூஜஹ்ல் உள்ளிட்ட சில சொந்தபந்தங்கள் எதிர்த்தனர், ஆனால் நாயகத்தின் பெரிய தந்தை “அபூதாலிப்”, இஸ்லாமிய கொள்கைகளை ஏற்காவிடினும் தன் தம்பி மகனுக்கு துணை நிற்பார். அபூஜஹ்ல் உள்ளிட்ட நாயகத்தை ஏற்காதவர்கள் அபூதாலிபிடம் சென்று முறையிடுவர்.
அவர்களுக்கெல்லாம் அபூதாலிப் பதிலளித்து விட்டு அவர் பேசியதை நூலின் ஆசிரியர் பின் வருமாறு பதிவு செய்திருப்பார். “எவர் வருவர் நம்வழியில் அவரை உரிய முறையில் சந்திப்போம், என்ன செய்வார் நம்மை, அதையும் பார்த்து விடுவோம். கைலாகு கொடுத்தால் கைலாகு கொடுப்போம், கையை முறித்தால் அவரின் ஒவ்வொரு எலும்பையும் முறிப்போம்.” என்ற அபூதாலிபின் எழுச்சி அண்ணலாரை மகிழச் செய்தது. அவர் தம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அண்ணலாருக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார் என்று எழுதியவர் கடைசி வரியில் குறைஷிகளுக்கு குளிர் காய்ச்சல் வந்தது என்று முடித்திருப்பார்.
அதுபோல அண்ணலாரின் நபித்துவ உழைப்பிற்கு பின் மக்கா, மதீனா இரண்டின் மனோநிலையை பின் வருமாறு விவரித்திருப்பார் நூலாசிரியர். அண்ணலார் தோன்றிய ”மக்கா” மாற மறுத்தது, நபித்துவத்தை ஏற்க மறுத்தது, நீதி நேர்மையை தரிசிக்க மறுத்தது, அவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாய் ஏகத்துவத்தை ஏற்க மறுத்தது. அதேசமயம் ”யத்ரிப்” ஏகத்துவத்தை ஏற்க இசைந்தது, இறைவனின் வாழ்க்கை நெறியை - தீனை நிலை நாட்ட இசைந்தது., சத்தியத்திற்கு சான்று பகர முன் வந்தது., தீமையை அழித்து நன்மையை ஓங்கச்செய்ய சத்தியப் பிரமாணம் செய்தது.
அனற்கற்று மக்காவில் என்றால் புனற்காற்று யத்ரிபில். புஞ்சையாக மக்கா, நஞ்சையாக யத்ரிப், பக்குவப்படாத மக்கா, பக்குவப்பட்ட யத்ரிப், மனத்தாலும் செயலாலும் முரடான மக்கா, மனத்தாலும், செயலாலும் மென்மையான யத்ரிப். இருபதுக்கும் மேற்பட்ட கோத்திரங்கள் கொண்ட மக்கா, இரண்டே இரண்டு பிரிவுகள் கொண்ட யத்ரிப் இருபது கோத்திரங்களும் ஒன்றாகாத மக்கா. இரண்டே பிரிவுகள் ஒன்றாகிக்கொண்டிருந்த யத்ரிப் எல்லோருமே அரபுகளாக இருந்த மக்கா, அரபுகளோடு மூன்று வகை யூதர்களைக் கொண்டிருந்த யத்ரிப்.
”பால்வீதிப் பயணம்” என்ற பகுதியில் தாயிபில் அண்ணலார் பட்ட கஷ்டத்தை விவரித்துவிட்டு அப்பகுதியை இப்படி முடித்திருப்பார். காலம் கண் திறந்து பார்த்துக் கொண்டிருந்தது, ஞாலம், சத்திய தரிசனத்தைக் காணக் காத்துக் கொண்டிருந்த்து. ஒரு புதிய வரலாற்றின் பக்கங்களின் மேல் எழுதுகோல் நின்று கொண்டிருந்தது. புதிய விடியலைக் காணவும், பூபாளம் பாடவும் புல்புல்கள் காத்துக் கொண்டிருந்தன. இஸ்லாத்தை ஏற்று மதீனாவிற்கு குடிபெயர்ந்தபின் மர்ஸத் என்ற நபித்தோழர், மக்காவிலுள்ள தன் உறவினர் ஒருவரை அழைத்துவருவதற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கா வருகிறார். அப்போது தன் பழைய காதலி அனாரைச் சந்திக்கையில் இருவருக்குமிடையில் நடைபெற்ற உரையாடலை மிக அற்புதமாக ”அனார் அவுர் மர்ஸத்” என்ற பகுதியில் பதிவு செய்துள்ளார்.
இது எல்லாவற்றிற்கும் மேலாய் ”உஹதுமலைக்காற்று” என்ற பகுதியில் காற்று நபிகளாரைத்தேடி அலைந்ததென குறிப்பிடுவதோடு நாயகத்தின் புற, அக எழிலைப் பற்றி விவரித்திருப்பார் ஆசிரியர்.
செம்பு சேராத பொன்மேனி; சீதள நிலவாகத் தோன்றும் முகம்; நடுத்தரமான உயரம்; கச்சிதமான தலை; கறுமையும் அடர்த்தியும் கொண்டு கழுத்துவரை தொங்கும் கற்றைக்குழல்: தோற்றப்பொலிவுக்கு மேலும் அழகூட்டும் அகலமான நெற்றி: தொங்கும் பிறையாக வளைந்து அடர்த்தியாகவும் தனித்தனியாகவும் காட்சிதரும் புருவங்கள்; பொருத்தமான மூடிகளாக பொருந்தித் திறக்கும் இமைகள்; வெண்ணிலவில் கருமணியாகக் கண்கள்; காண்பவரைக் கவர்ந்திழுக்கும் வெண்திரையில் சிவப்புக் கோடுகள்; வெட்கமும் நாணமும் கலந்து மனத்தைக் கவரும் சூதில்லாத பார்வை; நீண்ட எடுப்பான மூக்கு; இதமான மொழி பேசும் இதழ்கள்; புன்னகை தவழும் பல்வரிசை; முக தீபகற்பத்தில் மூன்று பக்க தாடி; எழில் தவழும் நீண்ட கழுத்து; விரிந்த மார்பு; உயர்ந்த தோள்கள்; உறுதியான கரங்கள்; அகலமான மணிக்கட்டுகள்; மெல்லிய விரித்த உள்ளங்கைகள்; அளவான விரல்கள்; உருண்டு திரண்ட கால்கள்; வார்க்கப்பட்ட்து போல் வாய்ந்த குதிகால்கள்; முன்பக்கம் இலேசாகக் குனிந்து அழுத்தி வைத்து நடக்கும் பாதங்கள்; மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி இறங்குவது போன்ற நடை; அக எழில்:
உண்மை பேசுதல், ஒவ்வொரு வேலையையும் நேர்மையுடன் செய்தல், வம்புகளை விட்டு விலகி இருத்தல், சண்டை - சச்சரவுகளைத் தவிர்த்தல், தனிமையில் அமர்ந்து சிந்தனை செய்தல் எனப்பட்டியல் நீளும் என சொல்லிவிட்டு பார்ப்பவர்கள் முதல் பார்வையிலேயே ஈர்க்கப்படுவார்கள். என அந்த பத்தியை தாழையார் முடித்திருப்பார்.
மக்காவிற்கும் மதீனாவிற்கும் இப்போது சென்று வந்தாலும், நபிகள் நாயகமும் அவரது தோழர்களும் வாழ்ந்த காலத்தோடு பயணப்பட்ட உணர்வை அனுபவிக்க வேண்டுமென ஆசைப்படுபவர்களை தாழையாரின் இக்காவியம் நிச்சயம் அந்த பொற்காலத்திற்கு அழைத்துச் செல்லும். இஸ்லாமியர்களால் மட்டுமல்ல வெகுஜன மக்களாலும் வாசிப்பதற்குத் தோதுவாய் இதன் உரை நடை அமைந்திருப்பதே இக்காவியத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாய்ன்ட்டாகும்.
நன்றி தாழையார்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்