அழிவை நோக்கி பயணிக்கிறதா தமிழகம்?

தமிழகத்திலுள்ள டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு, டெல்டாவே உள்ளிறங்கி (subsidence) கொண்டிருக்கிறது. கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் சிக்கலை விட டெல்டா உள்ளிறங்குவது பெரிய ஆபத்து.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஓ.என்.ஜி.சி. நடத்தும் எண்ணெய் துரப்பணிகளே டெல்டா உள்ளிறங்குவதற்கு காரணம் என்கிறார் ஆந்திர பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற நிலவியல் (geologist) நிபுணர், கிருஷ்ணா ராவ். செயற்கைகோள் படங்கள், தரவுகள், வரைபடங்கள் என்று எதை வைத்து பார்த்தாலும் நிலவியல் அமைப்பில் மாற்றங்கள் நிகழ்துள்ளதை சரியாக கண்டறியமுடிகிறது.
இதுகுறித்து, ஓ.என்.ஜி.சி. நடத்திய இரண்டு ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட மறுக்கிறது, ஆனால் அந்த ஆய்வறிக்கையில், டெல்டா பகுதியில் நில அமைப்பில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது தெளிவாக தெரிகிறது.
இந்நிலையில் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களை பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் மண்டலமாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இந்த 45 கிராமங்களில் 23,000 ஹெக்டேரில் ரூ. 92 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ள கிராமங்களின்
பட்டியல்...
கடலூர் தாலுக்கா : திருச்சோபுரம், கம்பளிமேடு, ஆலப்பாக்கம், காயல்பட்டு, ஆண்டார் முள்ளிப்பள்ளம்,
புவனகிரி தாலுக்கா : பெரியப்பட்டு, சிலம்பிமங்களம், வில்லியநல்லூர், கொத்தட்டை, சின்னகொமட்டி, அரியகோஷ்டி, பெரியகொமட்டி, முட்லூர், அகரம், பரங்கிப்பேட்டை
சிதம்பரம்தாலுக்கா : மேல் அனுவம்பட்டு, தில்லைநாயகபுரம், பள்ளிப்படை, கொத்தன்குடி, உசுப்பூர், கடவாச்சேரி, வல்லம்படுகை, கீழ் அனுவம்பட்டு, புஞ்சைமகத்து வாழ்க்கை, மடுவன்கரை..
சீர்காழி தாலுக்கா : அகரவட்டாரம், வேட்டங்குடி, திருமுல்லைவாசல், ராதாநல்லூர், எடமணல், திருநகரி, நெய்பத்தூர், தென்னம்பட்டினம், பெருந்தோட்டம், அகரப்பெருந்தோட்டம், திருவெண்காடு, மணிகிராமம், மேலையூர், திருமைலாடி, மாதானம், குட்டியம்பேட்டை, பனங்குடி...
தரங்கம்பாடி தாலுக்கா : மேலப்பெரும்பள்ளம், மாமாகுடி. இந்த கிராமங்களில் உள்ள 22,938 ஹெக்டேர், அதாவது 57,345 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு எண்ணெய் மற்றும் ரசாயன நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படவுள்ளன.
இந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலுக்கும், வேளாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வாழ்வாதாரத்தையும் பறிக்கும்.
இதற்காகவே காவிரியில் தண்ணீர் வழங்காமல் அப்பகுதியை நிரந்தரமாக வறண்டு போக வைக்க மத்திய அரசு சதி செய்கிறது என்று சொல்லப்பட்ட குற்றச்சாட்டை இந்த திட்டம் உறுதி செய்கிறது.
இந்த மண்டலத்தில் எண்ணெய்க் கிணறுகளோ, எரிவாயுக் கிணறுகளோ அமைக்கப்படாது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. எண்ணெய் எடுக்காமல் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கப் போவதாக கூறுவது நம்பும்படியாக இல்லை.
இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ள பகுதிகள் அனைத்தும் கொள்ளிடம் மற்றும் வங்கக்கடலை ஒட்டிய பகுதிகள் ஆகும். இப்பகுதிகளில் ஏற்கனவே கடல் நீர் உள்ளே புகுந்து விவசாயத்தையும், குடிநீர் ஆதாரங்களையும் கிட்டத்தட்ட அழித்து விட்டது. கடலூர் சிப்காட் பகுதியில் செயல்படும் தொழிற்சாலை கழிவுகள் நிலத்தில் கலந்ததால் அங்கு விளையும் இளநீரிலும், நிலத்தடி நீரைக் குடிக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலிலும் டையாக்சின் என்ற வேதிப்பொருள் உள்ளது. அதேபோல் பரங்கிப்பேட்டையில் சாயத் தொழிற்சாலை அமைக்கப்படுவதால் அங்கும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கமும் கேரளமும் துரத்தியடித்த பெட்ரோலிய மண்டலத்தைத்தான் தமிழ் மண்ணில் செயல்பட அரசு அனுமதித்திருக்கும் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் சில இடங்களில் ஆயிரம் அடி அளவுக்குக் கீழிறங்கியுள்ளது. அதோடு கடல்நீரும் உட்புகுந்து கரிப்புநீராகியுள்ளது. இதன் காரணமாக நிலத்தில் அங்கங்கே உவர்ப்புத்தன்மை மற்றும் மலட்டுத்தன்மை தோன்றியுள்ளது. சுற்றுச்சூழலும் பாதிப்புக்குள்ளாகி அதனாலும் மண்வளம் குன்றத் தொடங்கியுள்ளது.
இந்நிலை நீடித்தால் நாளடைவில் நிலமே பாலையாகிவிடும். அதன்பின் அது மக்களின் வாழிடமாக இருக்காது என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளது. இப்போதே பெரு நகரங்களை நோக்கிய மக்களின் பயணம் அதிகரிக்கத்தொடங்கி இருக்கிறது.
வாழ்ந்த நிலத்தை அழித்து வாழத் தகுதியற்றதாக மாறிக்கொண்டிருக்கும் பெரு நகரங்களை நோக்கிய மக்கள் எதிர் கொள்ளப்போகும் அடுத்தத்த பொருளாதார, சமுக்க, சுகாதார பிரச்சனைகளை நினைத்து பார்க்கும் போது நெஞ்சம் கனக்கிறது.