தடுக்கப்படுகிறதா தமிழகத்தின் வளர்ச்சி?

தமிழ்நாடு குறைந்த கால அளவில் தீவிர வளர்ச்சி கண்ட மாநிலம். வறுமை, ஏழ்மை, ஏற்றத்தாழ்வு ஆகிய கீழமை மட்டங்களில் இருந்து எழுந்திருக்கிறது. தமிழகத்தில் 1970 மற்றும் 1980 கள் முழுவதும் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் நிலவிய வறுமையின் அளவு சமகாலத்தில் இந்தியா முழுவதும் நிலவிய வறுமையின் அளவைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. திட்டக் குழு வரையறை செய்த வறுமைக் கோட்டுக்கு உள்ளே தான் மக்கள் தொகையில் பாதி பேர் இருந்தனர்.
கேரளாவை போலவே, சமூக உறவுகளும் கூட ஆரோக்கியம் இல்லாமல் இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் தனியான காலனிகளில் குடி அமர்த்தப்பட்டனர். மேலாடை அணியவும் சைக்கிள் ஒட்டவும் தடுக்கப்பட்டனர்.
அந்த கால கட்டத்தில் தொடக்க நிலை பள்ளிக்கூடங்களில் ஒருங்கிணைந்த மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.பள்ளிகள்,மருத்துவமனைகள்,சாலைகள்,பொது போக்குவரத்து,குடி நீர் வினியோகம்,மின் இணைப்புகள் மற்றும் பல சமூக நலத்திட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன.

ஆளும் வர்க்கத்தின் இரக்க உணர்ச்சி மட்டும் காரணமில்லை.பொது சமூகம் நடத்திய போராட்டங்கள் உள்ளிட்ட ஜனநாயக அரசியலின் விளைவும் ஒரு காரணம். காலகாலமாக ஒதுக்கப்பட்ட சமுதாயங்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட பிரிவினர், ஒவ்வொரு அம்சங்களையும் போராடி பெற்றனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தமிழகம் மக்கள் சேவையில் சிறப்புறச் செயல்படுகிறது. 2011 கணக்குப்படி தமிழக மக்களின் எண்ணிக்கை 7 கோடி 20 லட்சம். உலகில் பல நாடுகளைக் காட்டிலும் அதிக மக்கள் தொகை. தமிழ்நாடு, கேரளா சேர்த்து 10 கோடியைத் தாண்டி விடுகிறது.

இந்த மாநிலங்களின் முறையான வளர்ச்சிப் போக்கை உற்று காணும் போது,பல்வேறு வித்தியாசங்கள் இருப்பதை உணர முடிந்தாலும் அதிக ஆர்வம் காட்டப்பட்டு இருக்கிறது.குறிப்பாக, பொதுக் கல்வி மிக தீவிரமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. பொது சுகாதாரம்,சமூகப் பாதுகாப்பு மற்றும் பொதுவான வசதிகள் ஆகியவற்றிலும் தமிழகம் மற்றும் கேரளம் மாநிலங்கள் நல்ல தூரத்தை எட்டி இருக்கின்றன. மக்களுக்கு தேவையான சேவைகளை செய்து கொடுக்கும் விசயத்தில் இரு மாநிலங்களும் ஒரே மாதிரியான கொள்கைகளை கையாளுகின்றனர்.
இந்த அளவுகோல் இமாச்சலப் பிரதேசத்துக்கும் பொருந்தும். பள்ளிக் கல்வி, ஆரம்ப சுகாதாரம், மதிய உணவு, மின் இணைப்பு, பொது வினியோகம்(Raton), குடிநீர் ஆகியன எந்த பாரபட்சமும் இல்லாமல், முடிந்த அளவு அனைவருக்கும் கிடைத்திருக்கிறது. இந்த அடிப்படையான தேவைகள் மற்றும் சேவைகள் அனைத்தும் பல்வேறு வகைகளில் அனைவருக்கும் இலவசமாகவே கிடைத்து இருக்கிறது

tamil nw
திடமான அரசுகளால் தான் இந்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டு இருக்கின்றன. அரசுகள் முறைப்படுத்தப்பட்ட வழியில் சேவைகளை வழங்கி வந்திருக்கின்றன. இப்போது இருப்பதை போன்று, நிரந்தரம் இல்லாத ஆசிரியர்கள், நிபந்தனையுடன் பண பரிமாற்றம், அரசு பள்ளிக்கூடங்கள் கட்டாமல் தனியார் பள்ளிகளுக்கு மானியம் கொடுப்பது போன்ற குறுக்கு வழிகளை பின்பற்றவில்லை.இந்த சாதனைகளை செய்துகாட்டிய நாயகர்கள் உருவாக்கி வைத்த பள்ளிக்கூடங்கள், சுகாதார மையங்கள், அரசு அலுவலகங்கள்,கிராம பஞ்சாயத்துகள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியன பழைய முறையிலான அரசு அமைப்புகள். இந்த மரபான அரசு நிறுவனங்கள் வளர்ச்சியின் பிந்திய கட்டத்தில் தனியார்த்துறைகள் நுழைய போதுமான வெளியை உருவாக்கி விட்டன. தனியார் நிறுவனங்கள் இந்த துறைகளில் தீவிர வளர்ச்சிக்கான முகாந்திரங்களை உருவாக்கின.

பொது சேவையை வழங்குவதில் மிகப்பெரிய சவாலாக இருந்தது சமூக பாரபட்சம்.காலகாலமாக இருந்து வந்த இந்த பாரபட்சம் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்துள்ளது.தமிழ்நாடு மற்றும் கேரளாவில் குடிமக்கள் சமத்துவம்,அனைவருக்குமான உரிமைகள் அனைத்துமே சமூக சீர்திருத்த அமைப்புகளின் பலமான போராட்டங்கள் மற்றும் சமூகத்தில் மிகவும் பின் தங்கி இருந்த தாழ்த்தப்பட்டவர்கள் போன்ற சமூகங்கள் சமத்துவத்துக்காக நடத்திய தொடர்ச்சியான கடுமையான போராட்டங்கள் வழியாகத்தான் வந்தன.

சமூக வளர்ச்சி தீவிரம் அடைந்ததற்கு அரசுகளின் உறுதியான கொள்கைகள் மட்டும் காரணமில்லை.ஜனநாயக அரசியலில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து கொண்டதும் காரணம்.இதில் மிகப்பெரிய பங்களிப்பு சமூக சமத்துவத்துக்காக போராடிய அமைப்புகளுக்கு உரியதாகும்.கல்வியை பரப்புதல்,போதுமான அளவுக்கு ஆண்கள் பெண்கள் என மக்களை நிரப்பி ஜனநாயக அமைப்புகளை இயக்குதல் போன்ற சமூக முன்னேற்றங்கள் இன்னும் பல்வேறு மாநிலங்களில் நடக்கவே இல்லை.தமிழ்நாடு,கேரளா மற்றும் இமாச்சல் பிரதேசம் மாநிலங்களில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தனி நபர் வருமானம் அதிகரித்து இருக்கிறது.வறுமை விகிதம் குறைந்துள்ளது.சமூக நலத்துக்கான கொள்கைகளை பலமாக செயல்படுத்தவும் அதை நீண்ட காலத்துக்கு கொண்டு போகவும் இம்மாநிலங்களின் பொருளாதாரம் போதிய அளவு வளர்ச்சி அடைந்திருந்தது.பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் ஒத்துழைப்புக்கும் இடையில் இருக்கும் உறவுக்கு இது முக்கியமான உதாரணம்.
மற்ற மாநிலங்களை போல் இல்லாமல்,சமமான இலவசமான சுகாதார சேவையை அனைவருக்கும் வழங்கி இருக்கிறது.மிகப்பெரிய அளவில் சுகாதாரத்துக்கான வசதிகளையும் சேவைகளையும் உள்ளடக்கி இருக்கிறது.தமிழகம் கடந்த பத்து ஆண்டுகளில் சுகாதாரத்துறையில் மட்டும் தீவிர வளர்ச்சியை காட்டவில்லை.மக்களுக்கான கோட்பாடுகளை உருவாக்குவது,உள்ளடக்குவது,செயல்படுத்துவதிலும் இதே அளவு சாதனை செய்து இருக்கிறது.தமிழகத்தை ஒத்த தனிநபர் வருமானம்,தனிநபர் செலவினம் இருந்த சில வட மாநிலங்களை ஒப்பிடும் போதும் தமிழகம் சுகாதார சேவையில் முன்னணியில் இருந்தது.

தனிநபர் செலவினத்தில் இப்போது குஜராத்துக்கும் அரியானாவுக்கும் இணையாகத்தான் தமிழகம் இருக்கிறது.குஜராத்,அரியானா மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் பேறுகால இறப்பு விகிதம்(maternal mortality)விகிதம்,பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம்(infant mortality) பாதியாகத்தான் இருக்கிறது.குஜராத்,அரியானா மாநிலங்கள் சுகாதார அட்டவணையில் அனைத்து இந்திய சராசரியை விடவும் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை.ஆனால்,இந்த விசயத்தில் தமிழகம் கேரளாவுக்கு நெருக்கமாக இருக்கிறது.ஒவ்வோர் ஆண்டும் இப்படி நெருக்கமாக வந்து கொண்டு இருப்பதை காண முடிகிறது.

தமிழகம் சுகாதாரத்தின் அடிமட்டத்தில் விசயத்தில் கவனம் செலுத்துவதை பார்க்க முடிகிறது.பெரும்பாலான இந்திய மாநிலங்கள் இதை புறக்கணிக்கின்றன.உதாரணமாக,பொது சுகாதாரத்தில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறது.நோய்களை குணப்படுத்துவது மட்டுமின்றி நோய் பரவுவதை தடுக்கவும் செய்கிறது.சுகாதாரத்தின் அடிமட்ட காரணத்தில் கவனம் செலுத்தியதின் பல்வேறு நன்மையான விளைவுகளில் ஒன்று குழந்தைகளுக்கான நோய் தடுப்பு விகிதம் அதிகரித்து இருப்பது.2005-2006 காலகட்டத்தில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமான குழந்தைகள் நோய் தொற்றில் இருந்து காப்பாற்றப் பட்டிருந்தார்கள்.இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழகம் தான் இதில் முன்னிலையில் இருந்தது.

அரசு நடத்தும் மருத்துவமனைகளில் இலவசமாக கொடுக்கப்படும் மருந்துகள் உரிய நேரத்தில் கிடைப்பதற்கு வசதியாக மருந்து கழகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இணையத்தில் ஆவணப்படுத்தியதன் மூலமாக மருந்துகளை தேவையின் அடிப்படையில் உரிய நேரத்தில் வழங்குவதை எளிமையாக்கி இருக்கிறது.பல்வேறு மாநிலங்களில் இருக்கும் முறையை காட்டிலும் இது முற்றிலும் முரணானது.இதர மாநிலங்களில்,அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மருந்துகளை எழுதி கொடுத்து அருகில் இருக்கும் மருந்தகங்களில் வாங்கிக்கொள்ள சொல்கிறார்கள்.அந்த மருந்தகங்கள் மருத்துவர்களுக்கு ஒரு கமிசன் தொகை கொடுக்கிறார்கள்.தமிழக சுகாதார மையங்களில் இலவசமாக மருந்துகள் கொடுப்பது கட்டாய கடமை.நோயாளிகளுக்கு துண்டு சீட்டில் மருந்துகளை எழுதி கொடுத்து வெளியே அனுப்பக்கூடாது.

மதிய உணவு திட்டம்:
ஆரம்ப பள்ளிகளில் படிக்கும் மாணவ பிள்ளைகளுக்கு முதன் முதலாக மதிய உணவு வழங்கிய மாநிலம் தமிழகம் தான்.மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தி வந்த தொடக்க காலத்திலேயே இந்த மதிய உணவும் வந்துவிட்டது.பின்னாளில்,இந்திய தேசிய மதிய உணவு திட்டம் கொண்டு வருவதற்கு ஒரு மாதிரி திட்டமாகவும் இது அமைந்தது.தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக உணவு மட்டுமின்றி சீருடைகள்,நோட்டுபுத்தகங்கள், எழுது பொருட்கள் மற்றும் சுகாதார பரிசோதனைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. பொது வினியோக முறை(Public Distribution System) மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம்(National Rural Employment Guarantee Act) போன்ற பெரிய அளவான மக்கள் நலத்திட்டங்களை தமிழகம் சிந்தித்து செயல்படுத்துவதையும் காண முடிகிறது.

தமிழகத்தின் மதிய உணவு திட்டம் மற்றும் அங்களன்வாடி திட்டம் போன்று தொடர்ச்சியான வினியோகம்,ஊழல் கட்டுப்பாடு ஊரக வறுமை ஒழிப்பு ஆகிய அம்சங்களில் தமிழகத்தின் பொது வினியோக முறையும் கூட இந்தியாவுக்கே முன்மாதிரியாக அமைந்தது.தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்திய விசயத்தில் கூட இந்தியாவுக்கு தமிழகம் முன்மாதிரியாக இருக்கிறது.அரசு துறைகளின் நிர்வாகத்தில் புது புது திட்டங்களை சிந்தித்து செயல்படுத்துவதில் தமிழகம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முக்கியமான உதாரணமாக இருக்கிறது.

அங்கன்வாடிகளை நடத்துவதாகட்டும்,பொது வினியோக முறையில் இருக்கும் ஓட்டையை அமைப்பதாக இருக்கட்டும்,மருத்துவ மையங்களுக்கு மருந்து பொருட்களை உரிய நேரத்தில் கொண்டு சேர்ப்பதாக இருக்கட்டும் இவை எல்லாம் உண்மையிலேயே ஈர்க்கும் வண்ணம் உள்ளது.மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் இருப்பது திடீர் என்று நிகழ்ந்தது அல்ல.

தமிழகத்தின் பரந்துபட்ட,அனைவருக்குமான சமூக நல கொள்கைகள் மற்றுமொரு குறிப்பிடத்தக்க பண்பாக இருக்கிறது.மிகவும் மெச்சத்தக்க உதாரணம் பொது வினியோக முறை.மாதந்தோறும் இதர பொருட்களுடன் குறைந்தபட்ச அளவாக 20 கிலோகிராம் அரிசி மானிய விலையில் பெற அனைத்து குடும்ப அட்டைதார்ர்களும் உரிமை பெற்றுள்ளார்கள்.தமிழகத்தில் அனைவருக்கும் நலத்திட்டங்கள் என்பது பொது சுகாதாரம்,மதிய உணவு,இலவச நோட்டுபுத்தகம்,சீருடைகள்,குழந்தைகள் மருத்துவம்,வேலைவாய்ப்பு உத்தரவாதம்,அரசு போக்குவரத்து மற்றும் குடிநீர்,மின்சாரம் போன்ற இதர அடிப்படை வசதிகள் அனைத்துக்கும் பொருந்தும்.இதன் விளைவாக வாழ்க்கைக்கான சில அடிப்படை தேவைகளின் பற்றாக்குறை என்பது தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அனைவருக்குமான சேவையை கடமை என ஆக்கியது,மக்கள் நல சேவையை சிறப்புடன் செயல்படுத்தியது எப்போது,எப்படி ஆரம்பமானது என்ற கேள்விகள் எழுகின்றன.ஆரம்ப நாட்களில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு அரசியல் அதிகாரம்,மக்கள் நலன் அரசியல்,தமிழகத்தில் வலிமையான பெண்கள் அமைப்புகள் என்று முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சமூக சீர்திருத்தங்கள் ( 1920 களில் பெரியார் தோற்றுவித்த சுய மரியாதை இயக்கம் உள்ளிட்டு)இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.இவைகளும்,தமிழகத்தின் சமூக வரலாற்றின் இதர அம்சங்களும் அவற்றிற்கு பொருத்தமான தமிழகத்தின் தற்கால சாதனைகளும் ஆய்வுக்குரிய ஒன்றாக இருக்கிறது. ஜனநாயக செயல்பாடுகளின் வலிமைக்கு கிடைத்த வெற்றி இவை என்பதை தான் இந்த வெவ்வேறு விளக்கங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

தமிழகத்தின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் முன்னணி ஆதரவாளர் டாக்டர் கே.எஸ்.சஞ்சீவி.இவர்,"சுகாதார திட்டத்தில் மக்களின் பங்களிப்பு குறித்த விவாதம் இந்திய அளவில் உருவாகுவதற்கு வெகு காலத்துக்கு முன்பே தமிழகத்தில் விவாத பொருளாக மாறியது என்கிறார்.பொதுவாகவே,மக்கள் நலன் சார்ந்த சமூக பிரச்சனைகளை விவாதிப்பதில் தமிழக மக்கள் பெரும் பங்காற்றி இருக்கிறார்கள்.பள்ளிக்கூடங்களில் மதிய உணவு வழங்குவது போன்ற மக்களின் உடல் ஆரோக்கியம் சார்ந்த திட்டங்கள் முதன் முதலாக அமலுக்கு வந்த போதே அது பொது மக்களால் விவாதிக்கவும் பட்டது.தமிழகத்தின் தேர்தல் பரப்புரைகளிலும் இந்த பிரச்சனைகள் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.இந்தியாவின் இதர மாநிலங்களில் இது நடக்கவே இல்லை,குறிப்பாக வட இந்தியாவில்.அங்கெல்லாம் மக்களின் உடல் ஆரோக்கியம் அரசியல் திட்டங்களில் ஒன்றாக இருக்கவில்லை.

மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசியல் கொள்கையாக மாற்றியதால் தான் இந்திய மாநிலங்களில் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது.அரசின் செயல்பாடுகளை மக்கள் விவாதிக்கும் காலம் மட்டும் அரசுகள் நலத்திட்டங்களை மக்களிடத்தில் இருந்து பறிக்க முடியாது.ஆனால் இன்று அந்த விவாதங்கள் குறைந்து காணப்படுகிறது.பொது வினியோக முறை,மதிய உணவு திட்டம்,இலவச சீருடை,இலவச மின்சாரம், இலவச பொது சுகாதாரம், சுகாதார காப்பீடு திட்டம் எல்லாம் அரசு மானியத்தில் இருந்து தான் வழங்கப்படுகிறது.

இப்போது,இந்திய ஒன்றிய மத்திய அரசு சர்வதேச நிர்பந்தத்துக்கு கட்டுப்பட்டு மானியங்களை ஒழிக்கப் பார்க்கிறது.மானியம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டால் இந்த மக்கள் நல திட்டங்கள் எல்லாம் நிறுத்தப்படும்.குறிப்பாக சுகாதார சேவைக்கு வழியில்லாமல் போகும்.மருந்துகள் வாங்க மக்கள் வெளிச்சத்துக்கு போக நேரிடும்.வெளிச்சந்தையில் மருந்து வாங்க சக்தி இல்லாதவர்கள் செத்துப் போக வேண்டும்.இப்போது மத்திய பாஜக அரசு பொது வினியோக முறையை முடிவுக்கு கொண்டுவரும் என்று அச்சுறுத்தப்படுகிறது.பலமுள்ள மாநிலங்களில் இருக்கும் ஜனநாயக அரசுகளை பல்வேறு வகைகளில் பலவீனப்படுத்தி மத்திய அரசு தனது நோக்கங்களை நிறைவேற்றும் போது மக்கள் கையறு நிலைக்கு தள்ளப்படுவார்கள்.அதை தான் இந்திய மைய அரசு விரும்புகிறதா? இதற்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை.மத்தியல் எந்த கட்சி,எந்த கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் அதன் போக்கு இப்படித்தான் இருக்கும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய அடித்தட்டு மக்கள் சமூக நலத்திட்டங்கள் மூலமாகத்தான் மேலே வந்தார்கள்.இப்போது இதனை பிடுங்குவதன் மூலம் அவர்களை பின்னுக்கு தள்ளி பழைய நிலைக்கு கொண்டு போக விரும்புகிறார்களா?அரசின் மீது சந்தேகப்பட மக்களுக்கு முழு அளவில் உரிமை உண்டு.இது அரசியல் அமைப்பு சட்டம் வழங்கி இருக்கும் உரிமையாகும்.அரசின் சூழ்ச்சி திறத்தில் இருந்து மக்கள் நலத்திட்ங்களை பாதுகாக்க வேண்டும் என்றால் மக்கள் அரசின் நடவடிக்கைகளையும்,செயல்படுத்தும் திட்டங்களையும் கடந்த காலங்களை போன்று விவாதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.