பழ.நெடுமாறன், தலைவர், தமிழர் தேசிய முன்னணி

‘’கீழடியில் அகழ்வாராய்ச்சிக்காகத் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படுவதாக கிடைத்துள்ள செய்தி பேரதிர்ச்சியைத் தருகிறது. சிவகங்கை மாவட்டம் வைகைக்கரை அருகே கீழடியில் 2015-ம் ஆண்டு மத்திய தொல்லாய்வுத் துறையினால் தொடங்கப்பட்டு 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரீகத்தின் தடயங்கள் கண்டறியப்பட்டன. தமிழகத்தில் முதல் முதலாக நகர்ப்புற நாகரீகத்தின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டச் செய்தி உலகெங்கும் பெரு வியப்பை ஏற்படுத்திற்று. வைகைக் கரை நெடுகிலும் 250 கி.மீ. தூரம் வரை சுமார் 300க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தின் தடயங்கள் புதையுண்டு கிடப்பதாக கண்டறியப்பட்டது. அப்போது முதலே இந்த அகழ்வாராய்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. மேலும் அகழ்வாராய்ச்சி செய்யவும் அவற்றுக்கேற்ற நிதியை ஒதுக்கவும் மத்திய அரசு முன்வரவில்லை. தமிழக அரசே இந்த அகழ்வாராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தி தமிழர் நாகரீகத்தின் தொன்மையை உலகறியச் செய்ய வேண்டும்.’’