ஜிக்னேஷ் மேவானி. சமூக செயல்பாட்டாளர்

இந்தியா முழுவதுமே கடந்த 3 ஆண்டுகளில் 28 இஸ்லாமியர்கள் பசு குண்டர்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். குஜராத்தில் மோடி அலையும் இல்லை. அமித்ஷா அலையும் இல்லை. ஒரே ஒரு அலை வீசுகிறது. அது பாஜக-வுக்கு எதிரான அதிருப்தி அலை. அதேசமயம் காங்கிரஸுக்கு ஆதரவாகவும் எந்த அலையும் வீசவில்லை. இந்த முறை தமிழக பாணியில் தேர்தல் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரு ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் தருவது அவர்களின் இப்போதைய இலக்கு. இது தேர்தல் நெருங்கும்போது அதிகரிக்கலாம்.குஜராத் மக்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள். ராம் பெயரிலும் இந்துத்துவா பெயரிலும் நீண்ட காலம் குஜராத் மக்களை மத ரீதியாக, சாதி ரீதியாகப் பிரித்து வைத்திருக்க முடியாது. படேல்கள், தலித்துக்கள், முஸ்லிம்கள், விவசாயிகள், வணிகர்கள், அடிமட்டத் தொழிலாளர்கள், பொதுமக்கள் அத்தனைப் பேருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி-யால் சூரத் ஜவுளி வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்பின்மை இங்கே பெரும் பிரச்சினையாக இருக்கிறது. வளர்ச்சி என்கிற பெயரில் மோடி கொடுத்த எந்த வாக்குறுதியும் நடைமுறைக்கு வரவில்லை.