ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர்,

‘நீட்’ பிரச்சினை பாடத்திட்டங்கள் பற்றிய கவலையை உருவாக்கியது. தமிழ்நாடு பாடத்திட்டம் தரமற்றது என்று விமர்சிக்கப்பட்டு புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது விடுதலைக்குப் பின் 15-வது பாடத்திட்டமாற்றம். பாடத்திட்டங்களில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இன்று பெரும்பான்மையான ஆசிரியர்கள் பாடத்திட்டங்களைப் பார்ப்பதே இல்லை என்பதுதான் உண்மை. பாடநூல்களே அவர்களுக்கு வேதம். எனவே, பாடத்திட்ட நோக்கங்களை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் பாடநூல்கள் அமைதல் வேண்டும். 30-க்கும் மேற்பட்ட பாடநூல்கள் இருந்த காலம் போய் ஒரே ஒரு பாடநூல் என்ற நிலையில் பாடநூல் தயாரிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
வகுப்பறைக் கற்பித்தல் என்பது தேர்வை மையமாகக் கொண்டிருப்பதால், தேர்வு சீர்திருத்தமின்றி எவ்வித மாற்றமும் பயனளிக்காது. பாடத்திட்டத்தில் மறுபயிற்சி அளிப்பதை விட ஆசிரியர்களுக்கு வினா அமைப்பு முறைகளில் சீரிய பயிற்சி அளிப்பதே அவசியம்.