அ. குமரேசன், மூத்த பத்திரிகையாளர்.

பொதுப் போக்குவரத்து என்பது மாபெரும் சமுதாய அசைவுத் தளம். தமிழ்ச் சமூகத்தின் இன்றைய வளர்ச்சிக்குப் பொதுப் போக்குவரத்தின் பங்களிப்பு அளப்பரியது. ஏழைக் குழந்தைகளின் கல்வி, பல்வேறு தரப்பினரின் தொழில், மாநிலப் பொருளாதாரம், எளியோர் வருமானம், உழவர்களின் பயணம், ஒதுக்கப்பட்ட சமூகங்களும் பழங்குடியினரும் வெளியே வருகிற மாற்றம் இவையனைத்திலும் பொதுப் போக்குவரத்தின் ஆக்கபூர்வமான தாக்கம் இருக்கிறது. பொதுப் போக்குவரத்து வலுப்படுத்தப்படாத மாநிலங்களில் நிலவும் பல பிற்போக்குத்தனங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளுக்கு பேருந்துகள் அரசுடைமையாக்கப்பட்டதன் பங்களிப்பு ஆழமானது. தமிழகத்தில் இதை அன்றைய திமுக அரசு செய்தது மிகப்பெரிய தொண்டு; தலையாய சமூக நீதி ஏற்பாடு! தமிழகத்தில் பொதுத் துறையின் கீழ் 1,40,000 தொழிலாளர்களால் இயக்கப்படும் 23,000 பேருந்துகளில், நாள்தோறும் 2 கோடிப் பேர், 88,64,000 கிலோ மீட்டர் தொலைவுகளைக் கடக்கிறார்கள். தமிழகத்தில் வேலைக்குச் செல்வோரில் 23.3% பேர் அரசுப் பேருந்துகளைச் சார்ந்திருப்பவர்கள்தான் (தேசிய அளவில் அரசுப் பேருந்துகளில் பயணிக்கிற பணியாளர்கள் 11.4%தான்.) கழகங்களுக்கு அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்குவது, பேருந்துகளை முறையாகப் பராமரிப்பதற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்துவது என இந்தச் சேவை இன்னமும் விரிவுபடுத்தப்பட வேண்டுமேயன்றி, நஷ்டம் என்று கூறி தொழிலாளர் வயிற்றில் அடிக்கக் கூடாது. பயணிகளுக்கும் கூடுதல் சுமை தரக் கூடாது!