குழந்தைகளைக் கொல்லும் போர்

“குழந்தைகள், அவர்களது தாய்கள், தந்தையர்கள், குழந்தைகளின் நேசத்திற்குரியவர்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்துவதற்கு வார்த்தைகளே கிடையாது.”
ஜீயர்ட் கெபிலரே, யூனிசெப் பிராந்திய இயக்குனர், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா
சிரியாவில் நடக்கும் போரின் வேர்
சிரியாவில் 2007 முதல் 2010 வரையான காலத்தில் ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணமாக ஏற்பட்ட வறுமை மற்றும் சமூக நெருக்கடி கிராமங்கள் மற்றும் புறநகர்களில் இருந்து ஒன்னறை லட்சம் மக்களை நகரங்களை நோக்கித் தள்ளியது.
வேலை வாய்ப்பின்மை பொருளாதார நெருக்கடி காரணமாக 2011 இல் மத்திய கிழக்கில் தொடங்கிய “அரபு எழுச்சி” சிரியாவிலும் பற்றிப் படர்ந்தது. தெற்கு நகரான டெராவில் மார்ச் 2011 இல் ஆளும் பசர் அல் ஆசாதுக்கு எதிராக ஜனநாயக எதிர்ப்புக்கள் வெடித்தன; சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.
ஜூலை 2011 வாக்கில் ஜனாதிபதி பசர் அல் ஆசாத் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நாடு தழுவிய போராட்டங்கள் கிளர்ந்தெழுந்தன. தொடர்ந்து நடந்த போராட்டத்தில் பசர் அல் ஆசாதின் சிரியா அரசு பாதுகாப்புப் படைகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர்.
இறுதியாக எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் முதலில் தங்களைப் பாதுகாக்கவும், பின்னர் அவர்களது உள்ளூர் பகுதிகளிலிருந்து பாதுகாப்புப் படையினரை வெளியேற்றவும் ஆயுதங்களை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தனர்.
ஆளும் அரசுக்கு எதிரான போராட்டம் உள்நாட்டுப் போராக திசை மாறி 2012 இல் அலப்போ உட்பட இரண்டு நகரங்களை ஆயுதம் தூக்கிய போராட்டக் குழுவினர் கைப்பற்றினர்.
எண்ணெய் ஊற்றும் அமெரிக்கா, ரசியா
ஆளும் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமான போரில் சர்வதேச நாடுகள் தலையிடத் தொடங்கியது. சிரியா ஜனாதிபதி அசர் அல் ஆசாதுக்கு எதிராக நடந்த கிளர்ச்சி ஷியா சன்னி என்ற இனப் பிரச்சனையாக உருமாற்றப்பட்டது.
ஈரானின் நேசனாகவும், தனக்கு எதிரியாகவும் இருந்த சிரியாவின் ஜனாதிபதி பசர் அல் ஆசாதை கவிழ்க்கக் காத்திருந்த அமெரிக்கா 2013 ஆம் ஆண்டில் சிரியா அரசுக்கு எதிராக போர் செய்த ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட கிளர்ச்சி குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கி CIA மூலமாக பயிற்சி கொடுத்து வந்தது. அமெரிக்காவின் உதவியால் பலம் பெற்ற ஐ.எஸ்.ஐ.எஸ்.போன்ற கிளர்ச்சி குழுக்கள் வலிமை பெற்று சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றத் தொடங்கின.
தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள உதவி தேடிய தனது பழைய நட்பான சிரியாவுக்கு உதவ ஓடோடி வந்து சிரியா போருக்குள் தன்னையும் இணைத்துக் கொண்டது முன்னாள் சோவியத் பேரரசான ரசியா.
ஐ.நா. சபையில் சிரியா அரசுக்கு ரசியா உதவுகிறது என்று அமெரிக்கா திரும்பத் திரும்ப குற்றம் சுமத்தி வருகிறது.
ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் சிரியா அரசுக்கு எதிராக மேற்குலக நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்களை ரசியாவும் சைனாவும் 2012 முதலே தடுத்து வருகின்றன.
இதுவும் போதாதென சந்தடி சாக்கில் இஸ்ரேலும் சிரியாவுக்குள் ஆயுதங்களை இறக்கி சிரியாவின் சீரழிவில் தன்னையும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. தன் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் ஈரான் மற்றும் சிரியாவின் அழிவை எதிர்பார்த்து காத்திருக்கிறது இஸ்ரேல்.
சமீபத்தில் இஸ்ரேல் எல்லைக்குள் ஈரான் ஆளில்லா விமானத்தை செலுத்தியதாகக் கூறி சிரியாவில் வான் தாக்குதல் நடத்தச் சென்ற ஏப்௲16 போர் விமானம் ஒன்றை சிரியா சுட்டு வீழ்த்தியதாக சொல்லப்படுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக நீடிக்கும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் சிரியாவின் பஷர் அல் ஆஸாத் அரசுக்கும் ஹிஸ்புல்லாஹ் அமைப்புக்கும் ஈரான் உதவி வருகிறது.
2018 பிப்ரவரியில் நடந்த தாக்குதல்
2018 பிப்ரவரி 18 இல் தாக்குதல் நடந்த கிழக்கு கௌதா, 2013 இல் இருந்து முற்றுகைக்கு உட்பட்டுள்ளது. ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மான அடிப்படையில் சிரியா முழுவதும் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில் கௌதாவை கைப்பற்றுவதற்காக சிரியா மற்றும் ரசியாவின் போர் விமானங்கள் குண்டுகளையும், ராக்கெட்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைகள் உட்பட பலர் மீது ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான தாக்குதல்களால் இதுவரையில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 550க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
இரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தியதாக சிரியா அரசு மற்றும் ரசியா மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. சிரியா அரசுக்கு ரசாயணங்களை வட கொரியா அனுப்பி வருவதாக, ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்களின் தகவல்களை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியாவின் அரசாங்கத்தை கவிழ்த்து சிரியாவின் அதிகாரத்தை கைப்பற்ற குர்தீஸ் பிரிவினைவாதிகளுக்கு மறைமுகமான உதவிகளை அமெரிக்கா செய்துள்ளது. அத்துடன், அவர்களுக்கு இன்னும் ஆயுதங்களை அமெரிக்கா விநியோகித்து வருவதாகவும் துருக்கிய ஜனாதிபதி எர்துகான் குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வதேச நாடுகளின் தொடர்பு ஏன்?
சிரியா தேசம் 1946 ஆம் ஆண்டு ஃபிரன்சிடமிருந்து முழுமையாக விடுதலை பெற்றது. 1947 இல் சோசலிச சிந்தனை கொண்டு உருவான பாத் கட்சி அடுத்த சில ஆண்டுகளில் தேர்தலில் நின்றது. அதிலிருந்து உருவாகி வந்தவர்கள்தான் பசர் அல் ஆசாத்தின் குடும்பம்.
ஆரம்பம் முதலே இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இணக்கமான உறவு ஏற்படவே இல்லை, 1970 இல் இஸ்ரேலுக்கு எதிராக ஃபலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு ஆதரவாக பசரின் தந்தை ஹஃபீஸ் அல் ஆசாத் தனது படைகளை அனுப்பி உதவினார். சிரியாவின் ராணுவம்தான் அந்தப் பகுதியில் இஸ்ரேலுக்கு போட்டியாக உள்ளது.
சிரியா உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் குறுக்கீடு 1949 லிருந்து இருந்து வருகிறது. அடிப்படைக் காரணம் இஸ்ரேல். அடுத்த அமெரிக்காவுக்கு கட்டுப்படாத பசர் அல் ஆசாதின் குடும்பம்.
தனது ஆரம்ப காலத்திலிருந்தே இன்னும் சொல்லப்போனால் ஆசாத் குடும்பம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்று வரை ரசியாவின் சார்பு நிலையிலேயே இருக்கிறது சிரியா.
நடக்கும் போர் ஷியா சன்னிகளுக்கு இடையிலான போர் அல்ல. ஆத்மார்த்தமான அடிமைகளை உருவாக்க நடத்தப்படும் போர். எதிர்காலத்தில் இஸ்ரேல் அமெரிக்காவின் அல்லது ரசியாவின் நலனை ஏற்றுக் கொள்கிற அடிமைகளை, முடமான தலைமுறைகளை உருவாக்குவதற்காகத்தான் இந்தப் போர். தொடர்ந்து மக்கள் குடியிருப்புகளை குறிப்பாக குழந்தைகளை குறிவைத்து நடக்கும் தாக்குதலின் பின்னணி இதுதான்.
உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக போர் நடக்கும் எல்லா இடங்களிலும், ஏகாதிபத்தியத்தை கேள்வி கேட்கும் இடங்களிலும் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள், பெண்கள் குறிவைத்துக் கொல்லப்படுவதன் நோக்கம் முஸ்லிம்களின் எதிர்காலத்தை முடமாக்குவது அல்லது அழிப்பது ஒன்றே.
சிரியா போரின் குரூரத்தையும் சிரியாவின் எதிர்காலத்தையும் அறிந்து கொள்ள ஒரு சிரியா தாயின் செய்தி. ஆசிரியர் பணி செய்யும் அவர் சொல்கிறார் : "மழை போல் விழுகிறது ஷெல் குண்டுகள். நாங்கள் நடைபாதையில் மறைத்து மறைந்து பாதைகளை கடந்து கொண்டிருக்கிறோம்."
வந்து விழும் வெடிகுண்டுகளின் பெரும் சப்தம் கேட்டு குடும்பமே அதிர்ச்சியில் இருக்க, 3 வயது மகன் அஹமது தொடர்ந்து அழுது கொண்டே வந்தான். அவனது சகோதரன் 8 வயது உமர் அஹமதுவை நெருங்கி முத்தமிட்டான். அந்த தாய் கூறுகிறார் : சகோதரர்களின் கடைசிப் பார்வையாகவும் இறுதி முத்தமாகவும் இது இருக்கலாம்…